Saturday, July 10, 2010

ஜனநாயக கடமையாற்றும் பத்திரிக்கை எது?


ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கைத்துறை இன்று தன் கடமையை மறந்து முழுக்க முழுக்க வணிக நோக்கிலேயே செயல்படுகின்றன. நாட்டுக்கு நல்லது உரைத்திட வேண்டிய இந்தத்துறை திரைப்படங்களையும், அது சார்ந்த மக்களையுமே முன்னிறுத்தி செய்திகளை வெளியிடுகின்றன. அதிலும் குறிப்பாக குமுதம், குங்குமம் போன்ற வார இதழ்கள் 99.9999 % சினிமா பற்றிய செய்திகளையே வெளியிடுவதுடன் அதில் நடிப்பவர்களை ஏதோ உலகின் ஒட்டுமொத்த சாகச வீரர்களாக வெளிப்படுத்துவது கண்டனத்திற்குரியது.

தொடக்க காலத்தில் இருந்த பொலிவினை, மரியாதையினை இன்று குமுதம் முற்றிலுமாக இழந்துவிட்டது. ஆனந்த விகடன் ஏதோ தப்பி பிழைத்துக்கொண்டாலும் இன்னும் எத்தனை நாளுக்கு என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கின்றது. குங்குமம் ஒரு குப்பை என்பதனால் அதை ஆரம்பத்திலேயே ஒதுக்கிவிடலாம்.

மக்களிடத்தே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை செய்திகளாக வெளியிடும்போது நடுநிலையுடன் வெளியிடுவதும் பத்தரிக்கைத்துறையின் அடிப்படைத் தர்மம். இந்த அடிப்படைத் தர்மத்தைக்கூட பின்பற்றாதது ஜனநாயகத்தின் சாபக்கேடு.

          











கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தவறான உறவு, அழகிகள் கைது போன்றவற்றை மட்டுமே சூடான முக்கிய செய்திகளாக அன்றாடம் வெளியிட்டு வந்த தினத்தந்தியின் பாணியை இன்றைய எல்லா தினசரிகளும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது. அதிலும் குறிப்பாக சில தினசரிகள் தவறான உறவுமுறையை ஆதரிப்பது போலவும், ஊக்குவிப்பது போலவும் செய்திகளை வெளியிடுவது இந்திய கலாசாரத்திற்கும் தமிழக பண்பாட்டிற்கும் எதிரானது. இவர்கள் ஆபாச அட்டைப்படங்களை வெளியிட்டு பணம் சம்பாதிப்பது ஒருவகையில் அதுவும் விபச்சாரம் தான். இத்தகைய படுபாதக செயலை இவர்கள் எதை எதிர்பார்த்து செய்கிறார்கள்?

“லாரி டமால்; டிரைவர் பனால்” போன்ற மலிவான வாசகங்களை அமைத்து செய்திகளை வெளியிடும் நாளிதழ்களை என்னவென்று சொல்வது?

மக்களின் மனதில் மறைந்திருக்கும் கொடூர எண்ணங்களுக்கு தீனி போடும் விதமாக செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் இத்தகைய நாளிதழ்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டியவை.

ஒவ்வொரு தனிமனிதனையும் நேரடியாக சென்றடையும் சக்திவாய்ந்த ஊடகங்களான இவர்கள், நாட்டின் தலைவிதியையே மாற்றக் கூடிய இவர்கள் தம் கடமையை மறந்து செயல்படுவதை ஒருபோதும் ஏற்கலாகாது.

அரசின் கொள்கைகளில், செயல்பாட்டில், திட்டங்களில் இருக்கும் தவறுகளை, ஓட்டைகளை மக்களிடத்தே அம்பலப்படுத்தி அரசையும் மக்களையும் இணைக்கும் பாலமாக செயலாற்றுவது இன்றைய நிலையில் மிகச்சில பத்தரிக்கைகளே. தவறுகளை எடுத்துரைத்தும், இடித்துரைத்தும் செயலாற்றும் பத்தரிக்கையாக இன்றைய நிலையில் தினமணியைக் குறிப்பிடலாம். முக்கிய, தரமான செய்திகளை மட்டுமே வெளியிடுவதுடன் நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவதிலும் குறிப்பிடும்படியாக செயல்படுகின்றனர்.

‘தலையங்கம்’ பகுதியில் நாளும் வெளியிடப்படும் தினமணியின் குரலில் 100 % உண்மையும், நியாயமும் ஓங்கி ஒலிக்கின்றது. சேற்றில் முளைத்த செந்தாமரை .....
வாழ்க தினமணி!!!

No comments:

Post a Comment