சங்கத் தமிழில் பெயரைத் தாங்கிச் சமூக அவலத்தைப் பேச வந்துள்ள படம் அங்காடித் தெரு. ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற வெயில் திரைப்படத்தின் இயக்குனர் ஜி.வசந்தபாலனின் மூன்றாவது படம் இது.
சென்னை, தியாகராயநகரிலுள்ள ரங்கநாதன் தெருவிற்குச் செல்லாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. பெரும் அளவிலான மக்கள் கூட்டம் வந்து செல்லும் பகுதி; கோடிகளில் புரளும் வியாபார நிறுவனங்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்ற பகுதி. அங்கே மனிதர்களுக்கு மதிப்பில்லை. விற்கின்ற பொருளுக்கும், வாங்குகின்ற பணத்திற்கும் மட்டும்தான் மதிப்பு. அப்படிப்பட்ட ரங்கநாதன் தெருதான் படத்தின் களம். அங்குள்ள பெரியபெரிய கடைகளில், விற்பனையாளர்களாகப் பணிபுரியும் தொழிளார்களும், அதே தெருவின் நடைபாதை ஓரங்களில் கடைபோட்டுப் பிழைப்பை ஓட்டும் ஏழை வியாபாரிகளும் இந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள். பெருமுதலாளிகளின் உழைப்புச் சுரண்டலும், சட்ட மீறல்களும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளும், இந்த ஆக்டோபஸ் கரங்களில் சிக்கிச் சீரழியும் அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களும்தான் அங்காடித்தெருவின் கதை.
சுதந்திரப் போராட்டத்தைச் சித்தரிக்கின்ற படங்களில், போராட்டக்காரர்களைக் கொடுமைப்படுத்துகின்ற சிறைச்சாலைகளைப் பார்த்திருப்போம். அதற்கு சற்றும் குறைந்ததல்ல, இந்தத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களும், அவர்களுக்கான உணவுச்சாலையும். அது நாட்டுவிடுதலைக்கான போராட்டம். இது நாட்டிலுள்ள வறுமைக்கெதிரான போராட்டம்.
வறட்சியான தேரிக்காட்டுப் பூமிகளிலிருந்து பிழைப்புத் தேடிப் பெருநகரங்களுக்கு வருபவர்கள், வறுமையை விரட்டுகின்ற போராட்டத்தில் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவன்தான் நமது கதாநாயகன் ஜோதி லிங்கம். 12 ஆம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றும் மேல் படிப்பு கனவாகிப்போகிறது தந்தையின் எதிர்பாராத மரணத்தால். தங்கைகளின் எதிர்காலம், குடும்பத்தின் வறுமைச் சூழல் - வேலைதேடியவனைச் சென்னை செந்தில் முருகன் ஸ்டோரில் கொண்டு வந்து அடைத்துவிடுகிறது.
“ஆம்பளப்பிள்ளைனா மூட்டை தூக்கியாச்சும் கடைசிக் காலத்துல ஒரு வாய் கஞ்சி ஊத்துவான். பொட்டப்புள்ள செய்யுமா?” என்ற பேச்சை இப்போதும் பரவலாகக் கேட்கலாம். அது ஆணாதிக்கத்தின் அகராதி வரி அவ்வளவுதான்.
குடும்ப வறுமைக்காக வேலைக்குப் போகின்ற இடத்தில், ஆண்பிள்ளைகளுக்கு அடிஉதையோடு போய்விடுகிறது. அடி உதைகளோடு, கருங்காலி போன்ற அண்ணாச்சிகளின் பாலியல் தொல்லைகளையும் பெண்பிள்ளைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“என் மாரப் பிடிச்சிக் கசக்கினான். நான் பேசாம இருந்தேன்” என்று தன்னை வேலையை விட்டுத் தூக்காமல் விட்டதற்குக் காரணம் சொல்லும் கதாநாயகி கனியின் கண்ணீர் திராவகமாக நம் நெஞ்சை எரிக்கிறது. இத்தனையையும் அந்தப் பெண்கள் குடும்பத்திற்காகத் தானே சகித்துக் கொள்கின்றனர்.
வேலைக்கு ஆட்கள் எடுக்குமிடத்தில், “அப்பன் இல்லாதவனா, சோத்துக்கு வழியில்லாதவனாப் பாத்து எடு. அப்பத்தான் நாம சொல்றதக் கேட்டு ஒழுங்கா வேல செய்வான்” என்று ஒருவன் சொல்லுவான். அந்த மக்களின் வறுமை, முதலாளிகளின் முதலீடுகளின் ஒரு பகுதியாகிவிட்டதைப் பார்க்க முடிகிறது.
தலைநகரில் கால்வைத்ததும் அந்தக் கிராமத்துப் பிள்ளைகளின் முகங்களில் தோன்றிய மகிழ்ச்சியும் சிரிப்பும், செந்தில் முருகன் ஸ்டோருக்குள் நுழைந்தபிறகு காணாமல் போய்விடுகிறது. சீருடையும், அடையாள அட்டையும் அணிந்துள்ள நவீன அடிமைகளாக ஆகிவிடுகின்றனர். உணவுக்கான இடைவேளை முடிந்து ஒரு நிமிடம் தாமதாக வந்தாலும் ஐந்து ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்துவிடுவோம் என்று சொன்னதை நினைத்து அவசர அவசரமாகச் சோற்றை விழுங்கி விட்டு ஓடி வந்து வருகையைப் பதிவு செய்தபிறகு அந்த உழைப்பாளிகள் விடுகின்ற பெருமூச்சு சமூகத்தின் பேரவலம். ஒரு வேளை உணவுக்காகத் தான் இந்தப்பாடு. ஆனால் அதைக்கூட ஆற அமர உண்ண முடியாமல் ஓட வேண்டிய அவலத்தை என்னவென்று சொல்வது.
அவ்வப்போது தன்மானம் தலைகாட்டினாலும், ஒன்னாந்தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தங்களுடைய குடும்பங்களை நினைத்து அடிகளையும், வசவுகளையும் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலை.
வாடிக்கையாளர் சேவையில் சிறந்தது தங்களுடைய நிறுவனம்தான் என்னும் விளம்பரத்திற்காகத் தன்னுடைய தொழிலாளர்களை மனிதாபிமானமே இல்லாமல் நடத்துகின்றன சில நிர்வாகங்கள். வாடிக்கையாளர் கேட்கின்ற வண்ணத்தில் புடவைகளை எடுத்துவரும்படி லிங்கத்தை நான்கைந்து மாடிகள், ஐந்தாறு முறை ஏறி இறங்க வைக்கும் கருங்காலியின் கருணையற்ற செயலின் மூலம் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.
அத்தனை வேதனைகளுக்கு மத்தியிலும் அந்தத் தொழிலாளர்களின் மனம் ஆறுதல் அடைகின்ற ஒரே இடமாக அவர்களுக்கிடையே மலர்கின்ற காதல் இருக்கின்றது. உயிரியற்கையான காதல் உழைக்கின்ற ஏழைகளைத் தீண்டாதா; அப்படித் தீண்டினால் அது குற்றமா? ஆமாம் குற்றம் தான் என்கிறது அண்ணாச்சிகளின் அகராதி. பொட்டக் கழுதைக்கு என்னடி காதல் வேண்டிக்கிடக்கு என்று கத்துகின்ற அண்ணாச்சிக்கு, அவளுடைய உழைப்பு மட்டும் வேண்டும். ஆனாலும் காதலை வறுமை சில நேரங்களில் வென்றுவிடுகிறது என்பதைக் காதலித்ததை மறைக்கும், காதலை மறுக்கும் செளந்திரபாண்டியனின் இயலாத நிலை காட்டுகிறது.
காதலில் உறுதியாக நின்று, சுதந்திரப்பறவைகளாகச் சிறகடித்துப் பறக்கத் தொடங்கும் வேளையில், கால் இரண்டையும் விபத்தில் இழக்கிறாள் கனி. அந்த நிலையிலும் நாம் நாளைக்கே திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லும் உறுதியைத் தருகிறது லிங்கத்தின் காதல்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு செய்தியைச் சொல்கிறது. குள்ள மனிதனைத் திருமணம் செய்து கொள்ளும் பெண், தன் கணவனைப் போலத்தான் தனக்குக் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதற்குச் சொல்லும் காரணம், கற்பு என்னும் கற்பிதத்தை இந்தச் சமூகம் எவ்வளவு உறுதியாக மக்களின் மனத்தில் பதிய வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
சென்னை போன்ற பெரு நகரங்களைப் பொறுத்தவரையில், நேர்மையாக உழைத்து வாழ்வதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை, கட்டணக் கழிவறை நடத்தும் இளைஞன் உணர்த்துகிறான்.
‘பொருளை விற்கத் தெரிந்தவனே வாழத்தெரிந்தவன்’ என்று பார்வையில்லாத அந்தப் பெரியவர் சொல்லும் போது பொருளாதாரத்தின் தாக்கம் தெரிகிறது.
அந்தத் தெருவுக்குச் செல்பவர்கள் வாடிக்கையாளர்களாகவும், நுகர்வோர்களாகவும் மட்டுமே இருக்கின்றனர். யாரும் மனிதர்களாகச் செல்லவில்லை. அங்கிருப்பவர்களையும் மனிதர்களாகப் பார்ப்பதில்லை. இந்தப் படம் அப்படிப்பட்டவர்களிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.
பாடல்கள் அனைத்தும் இனிமை. கள்ளிச்செடியின் பின்புலத்தில் ஸ்ட்ரா பெர்ரியை காட்டிய காட்சி, வர்க்க அரசியலைப் பேசாமல் பேசுகிறது. அழகிய கவிதையாகத் தொடங்குகின்ற லிங்கம் - கனி இருவரின் வாழ்க்கையைத் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பளபளப்பான விளம்பர உலகத்திற்குப் பின்னால் இருக்கின்ற தொழிலாளர்களின் இருண்ட வாழ்க்கையைச் சற்றும் மிகைப்படுத்தாமல் காட்சிப்படுத்தியிருக்கின்ற இயக்குனர் ஜி.வசந்தபாலன் பாராட்டுக்குரியவர். இந்தப் படம் வெளிவந்த பிறகு, ரங்கநாதன் தெருவில் தொழிலாளர் நலத்துறையினர் சோதனையிட்ட செய்திகள் நாளேடுகளில் வெளிவந்தன. இது இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றி என்றால் மிகையில்லை.
முதலாளிகளின் மூர்க்கத்தனமான பணவேட்டைக்குப் பலியிடப்படும் தொழிலாளர்களின் பரிதாபமான நிலையை இதைவிடத் துணிச்சலாக, இதைவிடச் சரியாக யாரும் சொல்லிவிடமுடியாது.