Sunday, June 27, 2010

சொந்த ஊர்

கோலிகுண்டு பம்பரம் 
விளையாட்டின் கூட்டாளிகள்
புளியங்காய் மாங்காய் அடிக்க 
உடன் வந்த பங்காளிகள்
வாடகை சைக்கிளில்
கூடவே வலம் வந்த பயல்கள்
என பால்யத்தில் துவங்கி
சிறுவனென விலக்காமல் கிரிக்கெட்டில் 
சேர்த்துக்கொண்ட அண்ணன்கள்
அக்கறையோடு வழிநடத்திய
ஆசிரியர்கள் என
பதின்ம வயதில் தொடர்ந்து
கணிப்பொறியையும் புத்தகங்களையும் எனதுபோல் 
உபயோகிக்கச் செய்த உயிர் நண்பர்கள்
வாழ்க்கை குறித்தும் முன்னேற்றம் குறித்தும்
எண்ணற்ற இரவுகளில் விவாதித்தவர்கள்
என கல்லூரிப் பருவத்தில் நீண்டு
முதல் பியர் ஊற்றிக்கொடுத்தவன் வரை
எத்தனையோ பேர் இருக்க
மனசாட்சியை கேட்கிறேன்
என்ன நியாயம் இது?
சொந்த ஊர் என்றதும்
பழைய காதலியின் நினைவு
முந்தி வருவது?