Friday, July 9, 2010

இலங்கைத் தமிழர்களும் தமிழக மக்களும்

சூரியன் நிரந்தரமாக இவ்வுலகத்தைவிட்டு மறைந்துவிட்டதோ என்ற உணர்வுடனும், கனத்த இதயத்துடனும் இதனை எழுதுகிறேன்.
முப்பது ஆண்டுகால கடும்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எண்ணிலடங்கா உயிர்களை பறிகொடுத்துள்ள இந்தப் போர் தமிழரின் போர். இலங்கையின் பூர்வகுடிமக்களான தமிழ் மக்கள், தம் அடிமைத்தனத்தை உடைத்தெறிக்க மேற்கொண்ட சுதந்திரப் போர். இனமான உணர்வுகொண்ட மக்கள் வெகுண்டெழுந்து, தம் உரிமையை நிலைநாட்ட மேற்கொண்ட உரிமைப் போர். பல இலட்சக்கணக்கான உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்த நம் தமிழ்மக்களின் எண்ணற்ற சகோதரிகளின் மானத்தை சூறையாண்ட சிங்களவர்களுக்கு எதிராக மேற்கொண்ட தியாகப் போர். ஆம், அத்தகைய போர்தான் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஒரு நாள் நாடு திரும்புவோம் என்ற எண்ணத்தில் நாட்களை கடத்திவந்த புலம்பெயர் தமிழர்களின் எண்ணம் முடிவுக்கு வந்துள்ளது. நாமெல்லோரும் பேசும் மொழியால், இனத்தால் தமிழர் என்ற எண்ணமும் முடிவுக்கு வந்துள்ளது. ஏன் முடிவுக்கு வந்தது?
இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றியதான பார்வை தமிழத்தில் பெருவாரியான மக்களுக்கு கிடையாது. நம் தொப்புள்கொடி உறவுகள் அங்கே நாளும் செத்து மடிகிறார்கள் என்று எல்லாகட்டங்களிலும் வலியுறுத்தி வரும் தன்னலமற்ற தலைவர் வைகோ அவர்களின் வார்த்தைகள் கடைசிவரை வெறும் வார்த்தைகளாகவே இருந்துவிட்டன. அங்கே கஷ்டப்படுவது நம் இனம், நம் உறவு, நம் இரத்தம் என்கின்ற எண்ணம் உளப்பூர்வமாக தமிழக மக்களுக்கு இல்லாததுதான் இன்றைய திமுக-காங்கிரசு கூட்டணியின் வெற்றிக்கு உண்மையான காரணம். சுமார் 15% மக்களுக்கு மட்டுமே முன்கூறிய எண்ணமிருந்ததே தவிர, மீதமுள்ள 85% மக்களுக்கு தினையளவு கூட கிடையாது. என்னதான், அரசியல் கட்சிகள் இலங்கைத்தமிழர் பிரச்சினையை பூதாகாரமாக்கி கொண்டு சென்றும் தமிழக மக்களிடத்தே அது எடுபடாததற்கு காரணம், அவர்களிடத்தே தேசியப்பார்வையும், உணர்வும் இல்லாததுதான்.

இலங்கைத்தமிழர் மானம் காப்பாற்ற புறப்பட்ட விடுதலைபுலிகளை தீவிரவாத இயக்கம் என பொய்பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரசிடம் இந்த மக்கள் பலியாகிவிட்டனர். உண்மைநிலையை கண்டறியும், அதனை பிரித்துப்பார்க்கும் பகுத்தறிவில்லாத இவர்கள் பொய் இங்கே உண்மை என்ற மாறுவேடம் பூண்டு நம்மை ஏமாற்றுகிறது என்பதை இன்றுவரை அறிந்திலர். சுயநலத்தின் ஊற்றுகளாக மாறிவிட்ட இவர்கள் தன் குடும்பம், தன் சாதி என்ற மிகச்சிறிய வட்டத்துக்குள் தம்மை கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டனர், விலங்குகளைப்போல. மொழியால், இனத்தால் ஒன்றுபட்ட நம் தமிழ்மக்கள் அங்கே நாளும் இரத்தவெள்ளத்தில் மடிகின்றனர் என்ற செய்தியை கேட்டும், பார்த்தும் எந்தவிதமான எதிர்விளைவுகளையும் காட்டாத கற்களாகிவிட்டனர் இவர்கள். பணத்திற்காக உடலை விற்கும் வேசியரைப்போல, பணத்திற்காக ஓட்டுக்களை விற்கும் இவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியும்?
தன் மக்கள் படும் கஷ்டத்தை எப்படித் தாய் சகித்துக்கொள்ள மாட்டாளோ, பொறுத்துக்கொள்ள மாட்டாளோ அதைப்போல, தீயிலிட்டப் புழு எப்படி துடிதுடிக்கிறதோ அதைப்போல இலங்கைத்தமிழர் கொன்றொழிக்கப்படுவதை கண்டு துடித்த வைகோ அவர்களை, இலங்கைத்தமிழர் பிரச்சனைக்காக தம் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்ட அவரை, பணத்திற்கு பலியாகி ஓட்டுக்களை சாத்தானுக்கு விற்றுவிட்ட அம்மக்கள் தோற்கடித்துவிட்டனர். காரணம், இங்கே உறவுகளை தீர்மானிப்பது பணம்தானே தவிர, இன உணர்வோ, மொழியுணர்வோ கிடையாது. இவையிரண்டும் கூட தேவையில்லை. மனிதாபிமானம் இருந்தால் கூட போதும், சகமனிதன் கஷ்டப்படுவதை தாங்காது அவனுக்கு ஓடோடிச்சென்று உதவும் மனிதாபிமானம் இன்று தமிழகத்திலே எங்குமில்லை. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று கூறிய வள்ளலார் பிறந்த தமிழகமா இது? “தனியொருவனுக்கு உணவில்லையெனில் (வெறும் உணவில்லையென்றாலெ கூட) ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கூறிய பாரதி பிறந்த தமிழகமா இது? சுதந்திரத்திற்கு முன் இருந்த தேசியப்பார்வையும், இன உணர்வும் இன்று தமிழகத்திலே இல்லையென்பதுதான் அப்பட்டமான உண்மை.
உலகில் இதுவரை எங்குமே நடந்தேயிராத மாபெரும் இனப்படுகொலையை தொடர்ந்து அரங்கேற்றிவரும் இலங்கை சிங்கள இராணுவ அரசிற்கு, இந்தியா அனைத்து உதவிகளையும் செய்துவருவதை தமிழகத்திலுள்ள வெகுஜன மக்கள் எதிர்க்காதது ஏன்? அங்கே நடக்கும் கொடுந்துயரங்களை இவர்கள் அறிந்திருந்தும் வாய்மூடி மெளனம் காப்பதோடு, மத்தியில் ஆளும் பாசிச காங்கிரசு அரசிற்கு துணைபோகும் கபடநாட சூத்திரதாரி கருணாநிதியை ஆதரிப்பதேன்? தன்னைப்பிடிக்க பெருங்குழியொன்று தோண்டப்பட்டிருப்பதை அறிந்திராத யானை, அக்குழியின் மேற்பரப்பில் போடப்பட்டிருக்கும் இலைகளை உண்ணவருவதைப் போன்றதான அறிவிலிச் செயல்களை இந்ததேர்தலிலும் தொடர்ந்துவிட்டனரே இவர்கள்!. ஐயகோ! என் தமிழ்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படப்போவது எப்போது? இலங்கைத்தமிழர் பிரச்சனை தம்மிலிருந்து விலகியதான ஒரு பிரச்சனை என்று எண்ணிகொண்டிருக்கும் இவர்களை திருத்த இன்னும் எத்தனை வைகோக்களை எதிர்பார்க்கின்றனர்? (அரசியல் காரணங்களுக்காக வைகோ அவர்கள் எடுத்த முடிவுகளில் சிலவற்றுள் எனக்கும் மாற்றுக்கருத்துண்டு. ஆனால், இலங்கைத்தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட தான் எத்தகைய துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கத் தயார் என்று சூளூரைத்து எத்தகைய சூழ்நிலையிலும் அதனிலிருந்து பிறழாது, தொடர்ந்து ஆதரித்துவரும் ஒரேத் தலைவர் என்பதனால் அவரை இங்கே முன்மொழிகின்றேன்.)
“பெரும்பான்மை என்கிற எண்ணிக்கைதான் ஜனநாயகத்தை ஆளுகிறது” என்பர். சரியென்பதையும், தவறென்பதையும் தீர்மானிப்பது இந்த ‘பெரும்பான்மை’ தான். அத்தகைய ‘பெரும்பான்மை’ இலங்கைத்தமிழர் பிரச்சனையை கையிலெடுக்காதவரை தற்போதுள்ள சூழ்நிலையில் அங்கு தீர்வு ஏற்பட வழியில்லை. ஆம், தமிழகமே ஒன்றுகூடி, வெகுண்டெழுந்து போராடினால் மட்டுமே அங்குள்ள எம்மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும். இந்தியாவையே ஸ்தம்பிக்கச் செய்யும் வரலாற்றுப்போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழகமும் தீவிரமாக மேற்கொண்டால் மட்டுமே அங்குள்ள எம்மக்களின் வாழ்வு மலரும்.
 என் சகோதரனே! மரணத்தின் வாயிலில் சிக்கி செத்துக்கொண்டிருக்கும் என்னைக் காப்பாற்று! என்னைக் காப்பாற்று!!

No comments:

Post a Comment