வாலு போயி கத்தி வந்தது டும் டும்; கத்தி போயி மாம்பழம் வந்தது டும் டும் அப்டீன்னு நம்ம கொழந்தைங்க ஒரு கதப்பாட்டு பாடுவாங்க. அத மாதிரி, கிளி சோசியம், வெள்ளெலி சோசியம், முயல் சோசியமெல்லாம் போயி, இப்போ ஆக்டோபஸ் சோசியம்னு புதுசா ஒன்னு மொளச்சிருக்கு.
வெளயாட்டுப் போட்டில இப்பல்லாம் வெளயாட்டுத்தனம் அதிகமாயிடுச்சி. பின்னே ஆக்டோபசெல்லாங்கூட தீர்ப்பு சொல்ல ஆரம்பிச்சிடுச்சே! உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2010 ஆட்டத்தோட நாட்டாமை திரு.பால் (ஆக்டோபஸ்) தான் இப்ப உலகக் கதாநாயகன். நடந்து முடிஞ்ச உலகக்கோப்பைக் கால்பந்து போட்டில எந்ந நாடு சாம்பியனாகும்னு ஜெர்மன் அருங்காட்சியகத்துல இருக்கிற அந்த ஆக்டோபஸ்தான் நம்மஊர் நாட்டாமை கணக்கா தீர்ப்பு சொல்லியிருக்காம். இந்தக் கோதாவுல சிங்கப்பூர் கிளியும் இறங்கிச்சி. ஆனா அந்தப்பச்சக் கிளி பாவம் பயங்கர ஆக்டோபஸ் கிட்ட தோத்திடுச்சி போலருக்கு.
ஸ்பெயின்தான் 2010 கோப்பைய ஜெயிச்சிருக்கு. நெதர்லாந்து இரண்டாவது எடமும், ஜெர்மனி மூன்றாவது எடமும் பிடிச்சிருக்கு. கஷ்ட்டப்பட்டு வெளயாடி கோப்பைய வாங்குன ஸ்பெயின் நாட்டு வீரர்கள விட, கொடி இருந்த பொட்டிமேல கொஞ்சநேரம் (எதுக்கோ யாருக்குத் தெரியும்) ஒக்காந்து இருந்த ஆக்டோ பஸ்தான் இப்ப உலகக் கதாநாயகன். ஸ்பெயின் நாட்டு மக்களே நாட்டுக்குப் பெருமை சேத்த அவுங்க வீரர்கள விட்டுட்டு, ஜெர்மன் நாட்டு ஆக்டோபசைக் கொண்டாடிட்டு இருக்காங் கன்னா பாத்துக்கோங்க.
எல்லாத்தையும் விட ஒரு படி மேலேயே போயி, ஆக்டோபஸ் பாலுக்கு, ஸ்பெயின் அரசாங்கம் அந்த நாட்டோட கவுரவக் குடியுரிமை கொடுத்திருக்கு. ஸ்பெயினோட கார்போலினா நகர மேயர் கார்லோஸ் மொன்டீஸ், ஆக்டோபஸ் இருக்கிற ஜெர்மனியில இருக்கிற ஓபர் ஹாசன் அருங்காட்சயகத்துக்கே நேர்ல போயி அந்தக் குடியுரிமையைக் கொடுத்தாராம். ஆக்டோபசோட கையைப் பிடிச்சிக் குலுக்கி (எந்தக் கையன்னு புடிப்பாரு மனுசன்!) மரியாதையோட குடுத்தாரா இல்ல இதையும் கண்ணாடிப் பொட்டிக்குள்ள வச்சி தொட்டிக்குள்ள போட்டாரா?
அதவிடக் கொடுமை என்ன தெரியுமா, தலைநகர் தில்லியில கன்னார்ட் பிளேஸ்ங்கிற இடத்துல இருக்கிற, லிவ் பெட்ஸ் வேர்ல்ட் (செல்லப்பிராணிகள் கடை) அப்டீங்கற கடையோட உரிமையாளர் ராம் சரப் சொல்றது தான். ஆக்டோபச வீட்டுல செல்லப்பிராணியா வளக்க முடியுமான்னு கேட்டு நெறய தொலைபேசி அழைப்புகள் வருதாம். (நாய் கடிக்கே முழுசா மருந்து கண்டுபிடிக்கல, ஆக்டோபஸ் கடிச்சா...ஆத்தாடி...) அதுவும் உத்தியோகத்துல இருக்கிறவங்க கூட இப்படி கேக்குறாங்களாம். படிப்பு ரொம்ப முத்திப்போச்சி போல.
திறமை, முயற்சி, பயிற்சி - இந்த மூனு மட்டுமே ஆட்சி செஞ்சிட்டிருந்த வெளயாட்டுல, இப்ப இதுக்கெல்லாம் மதிப்பில்லாமப் போச்சி. மூடநம்பிக்கைள் அதிகமா இருக்கிறது இந்த வெளயாட்டுத் துறையிலதான். அஞ்சு வயசுல கட்டுன அறுணாக்கயிற கையில கட்டிக்கிறது, மைதானத்துக்குள்ள கால நொழைக்கிறதுக்கு முன்னாடி பேட்ட நொழைக்கிறது, சாமியார் எப்பவோ பூசையில் வச்சிக்குடுத்த அழுகிப்போன எலுமிச்சம்பழத்த எங்கவெளயாடப் போனாலும் கொண்டுபோறதுன்னு எக்கச்சக்கமா வெற்றிக் கான சூத்திரங்கள நம்ம வீரர்கள் வச்சிருக்கிறது நமக்குத் தெரியும். இதெல் லாம் சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கிற மாதிரி அவுங்கள அவுங்களே அசிங்கப்படுத்திக்கிறது.
ஆனா இந்த ஆக்டோபஸ் ஜோசியம் அப்ப டியில்ல. உசுரக் குடுத்து வெளயாடுன 736 வீரர்கள, உத்து உத்துப் பாத்து பயிற்சி குடுத்த பயிற்சியாளர்கள ஒட்டு மொத்தமா அசிங்கப் படுத்திட்டாங்களே...சே. 32 நாடுகள், 736 வீரர்கள், ஒரே கோப்பை - வெல்லப்போவது யாருன்னு எட்டுக்கட்டையில கத்தி விளம்பரப்படுத்தி என்ன செய்ய, வாய் எது, கை எதுன்னே தெரியாத கடல் ஜந்து ஆக்டோபஸ், அதுகிட்ட எல்லாத்தையும் அடகுவச்சிட்டாங்களே!
ஒத்த கோல் அடிக்கிறதுக்குள்ள, ஒன்னுக் குப்போன மாதிரி, வேர்வையில கால்சட்டை நனைஞ்சிறுது பாவம் ஒவ்வொருத்தருக்கும். ஆனா,தேனெடுக்றவன் ஒருத்தன் பொறங்கைய நக்குறவன் இன்னொருத்தன்ற கணக்கா, உசுரக் குடுத்து கால்பந்தாட்ட வீரர்கள் வெளயாடி கோல்போட்டு ஜெயிச்சா, ஆக்டோபஸ் சொன்ன ஜோசியம் பலிச்சிடுச்சின்னு கோட்டு போட்டவன்ல இருந்து கோமணம் கட்டுனவன் வரைக்கும் கூத்தாடுறானுங்க. சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு...பரபரப்புக்கும், பப்ளிசிட் டிக்கும் ஆசப்பட்டு யாரோ சில பேரு அவுத்துவுட்ட சரடு. சரடு வுடறதும், வுட்டவன் யாருன்னு பாக்காமா, என்ன ஏதுன்னு ஆராயமா அப்படியே அதப்பிடிச்சிட்டுத் தொங்குறதுதான நம்மாளுங்க லட்சணம். அதனாலதான் அப்பப்ப இதுமாதிரி நெறய படங்காட்டுறாங்க.
எந்த ஒரு விலங்கும், தான் இருக்கிற பகுதிக்குள்ள புதுசா ஏதாவது வந்துச்சின்னா, தற்காப்புக்காக அதுமேல பாய்ஞ்சி வளைக்கத்தானே செய்யும் ? அதத்தான் இந்த ஆக்டோபசும் செஞ்சிருக்கு. அதுலயும், அதுக்குப் பிடிச்ச உணவோட ஒரு கண்ணாடிப்பொட்டிய வச்சா அப்படியே லபக்குன்னு புடிச்சிக்கிடாதா? ஒரே நேரத்துல இரண்டு பொட்டில இருக்கிற இரையையும் எடுத்து சாப்பிட முடியாதுல்ல, அதான் ஒரு பொட்டிய தொறந்து தின்னுட்டு, கஷ்ட்டப்பட்டு பொட்டியத் தொறந்த களைப்புலயும், தின்ன மயக்கத்துலயும் அந்த பொட்டி மேலயே கொஞ்ச நேரம் அசந்து படுத்திருக்கும். அசதி தீந்து அடுத்து பொட்டிக்குள்ள வாய் வக்கிறதுக்குள்ள, என்னெ ன்ன கதகட்டி வுட்டாங்க பாத்திங்களா!
ஆக்டோபசுக்கு ஏற்பட்டிருக்குற மவுசப் பாத்து, சோதிட ரத்னாக்கள், சோதிட திலகங்கள், சிகரங்கள், மலைகள், மண்மேடுகள் எல்லாம்வேற பதட்டத்துல இருக்காங்க. பின்னே தொழில்ல போட்டி அதிகமாயிருச்சே!
அதோட வெளயாட்டுத்துறைக்கு ஒரு யோசன சொல்லாம்னு... எதுக்கு கோடிக்கணக்கா பணம் செலவு செஞ்சி, விளம்பரப்படுத்தி, வெளயாட்டு வீரர்களோட ஒடம்பயும் புண்ணாக்கி தேவையில்லாத வேலையயல்லாம் பாத்துக்கிட்டு, பேசாம ஓடுறதோ, நீந்துறதோ எதையாவது ஒன்ன புடிச்சி முடிவ அறிவிக்கச் சொல்லி, கோப்பையக் குடுத்துட்டா பணமும் மிச்சமாகும், புதுமை யாவும் இருக்கும்ல. என்ன நாஞ்சொல்றது? (வர்ற அக்டோபர்ல இந்தி யாவில காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்கப்போற நேரத்துல நல்ல யோசனையில்ல?)
ஆறறிவு, அஞ்சறி வுகிட்ட அடகு போனத நெனச்சா வேதனையா இருக்கு.
தனிமனித சுதந்திரம்கிறது மனுசனுக்கு மட்டுந்தானா? புளு கிராசு, அது இதுன்னு என்னென்னவோ அமைப்புகள் எல்லாம் இருக்குதே, பேசாம மிருகவதைச் தடுப்புச் சட்டத்துக்குக் கீழ இவங்களப் பிடிச்சி உள்ள தள்ளவேண்டியதுதான!
- இலக்கியா
No comments:
Post a Comment