Monday, June 14, 2010

கூகுள் எனும் அரக்கன்


இணைய உலகின் சாம்ராட், முடிசூடா மன்னன் என்று எப்படி வேண்டுமானாலும் கூகுள்-ஐ அழைத்தாலும் தகும். காரணம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உயர்தர சேவையை எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக வழங்கிவரும் இந்த கூகுள் ஜாம்பவான் இணையத்தில் கால்பதிக்காத துறைகளே இல்லை எனலாம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் கணினி உலகம் எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது, அதன் வளர்ச்சிப்பாதை எதை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறது,அடுத்த 10-ஆண்டுகளில் கணினி உலகம் எதை முழுவதும் சார்ந்து இருக்கும் என்பதையெல்லாம் ஒரு தீர்க்கசரிசனத்துடன் கணக்கிட்டுத்தான் தம் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இயங்குதளங்களின் (Operating Systems) ஆட்சிக்காலம் முடிந்தவுடன், இனி கணினி இணையத்தையே நம்பியே இருக்கும் என்று 2000-த்திலேயே தெரிவித்தார். ஆனாலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணையத்தில் அவ்வளவாக சோபிக்க முடியவில்லை.

இணையத்தின் தொடக்ககாலத்தில் Yahoo நிறுவனம்தான் முன்னணியில் இருந்து வந்தது. அதன் தேடுபொறியைத்தான் (Search Engine) எல்லோருமே பரவலாக பயன்படுத்தி வந்தனர். அதுமட்டுமல்லாது, அதன் இலவச மின்னஞ்சல் சேவை மற்றும் குழு மின்னஞ்சல் (Yahoo Group) சேவை பலரையும் இதன்பால் ஈர்த்துக் கட்டிப்போட்டது. இணையம் என்றாலே Yahoo தான் என்ற காலமும் இருந்தது. ஆம், அதை இறந்தகாலத்தில் தான் கூற வேண்டியுள்ளது. காரணம், தற்போது அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்பது சகலகலாவல்லவன், உலகநாயகன் Google தான். வெறும் தேடுபொறியாக அறிமுகமான இந்த Google-ன் சேவைகளை தற்போது பட்டியலிட முடியாத அளவிற்கு முன்னேற்றத்தை கண்டுள்ளது. நாளொரு சேவையும் பொழுதொரு வசதியுமாக மக்களுக்கு அள்ளி வழங்கிக்கொண்டிருக்கும் இந்த Google-ஐ பின் ஏன் அரக்கன் என்று அழைக்கவேண்டும்?

எந்தவொரு துறையிலும் சரியான போட்டி இல்லையெனில் அங்கு ஆரோக்கியமான வளர்ச்சியோ, தரமான பொருட்களோ, சிறந்த வசதிகளோ கிடைக்காது. உதாரணத்திற்கு, வெறும் 10MB, 20MB,100MB என்ற அளவில் மின்னஞ்சல் சேவையினை அளித்துவந்த பல நிறுவனங்களுக்கு மத்தியில் முதன்முதலாக 1GB அளவில் மின்னஞ்சல் வசதியினை அளித்து நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி மற்ற நிறுவனங்களையும் வழங்கவைத்தது Google தான். பல தேடுபொறிகள் இருந்தாலும் தன்னுடைய துல்லியமான தேடுதல் விவரணங்களை பட்டியலிடுவதினால் இணையத்தில் நிரந்தரமாக முதல் இடத்தை பிடித்திருப்பதும் இந்த Google தான். Google-க்குத் தெரியாத தகவல் இந்த பிரபஞ்சத்திலேயே ஏதாவது இருக்குமா என்பது சந்தேகம் தான். ( பெண்ணின் மனது தெரியாது என்கிறீர்களா? சொல்ல முடியாது. அதுவும் தெரிந்தாலும் தெரிந்திருக்கும். சரியான குறிப்புசொற்களை (Keywords) பயன்படுத்தி தேடிப்பாருங்கள். நிச்சயமாக கிடைக்கும்.)

“மக்கள் தேடும் அல்லது நினைக்கும் அல்லது வேண்டும் அனைத்து விஷயங்களையும் திரைமுன் கொண்டுவருவது தான் எங்கள் நோக்கம். இவை நாடு, மொழி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இதை நோக்கித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த 300 ஆண்டுகளில் இதனை சாதித்தே தீருவோம்” என்கிறார் Google-ன் மூத்த அதிகாரி ஒருவர். இந்த இலட்சியமெல்லாம் சிறந்ததுதான். ஆனால், இன்று Google-க்கு நிகரான அல்லது சற்றேறக்குறைய நிகரான நிறுவனங்கள் ஏதாவது இருக்கிறதா? அதனுடன் போட்டியிட்டு அதனைவிட சிறப்பான வசதிகளை தருவதற்கு எந்த நிறுவனமும் தகுதியாக இருக்கிறதா? எதுவுமேயில்லை. இதே நிலை நீடிக்கும் சூழ்நிலையில், நாம் யாவரும் Google-ஐ மட்டுமே முழுவதுமாக நம்பி வாழப் பழகிக்கொண்டுவிட்ட சூழ்நிலையில், நம் தகவல்கள் யாவும் ( மின்னஞ்சல், அரட்டையில் பேசியது, நாட்காட்டியில் பதிந்தவை, பிகாசோவில் பதிவேற்றிய புகைப்படங்கள், வலைப்பூக்களில் எழுதியவை, ஆர்குட்டில் பகிர்ந்து கொண்டவை, யுடியூப்பில் பதிவேற்றிய படங்கள் இப்படி பட்டியல் நீண்டுகொண்டே……………… போகும்) மொத்தமாக Google-ல் மட்டும் இருந்துவரும் சூழ்நிலையில் சரியான போட்டியில்லாத காரணத்தால் Google-ன் ஏகாதிபத்தியும் துளிர்விடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டுவதற்கே அரக்கன் என்று குறிப்பிடுகிறேன்.

தொடக்க காலத்தில் இலவசங்களை அள்ளி வீசி (மூ.க-வைப்போல) மக்களை தம்பக்கம் ஈர்த்துக்கொள்வதின் மூலம் ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களை மெல்ல மெல்ல ஒடுக்குவது பின் ஒரு கட்டத்தில் போட்டியே இல்லாத சூழ்நிலையில், தான் வைத்ததுதான் சட்டம் என்கிற தோரணையில் சர்வதிகார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது. இதுதான் வரலாறு சந்தித்து வந்துள்ள சம்பவங்கள்/அனுபவங்கள். இதனைத்தான் Google-ம் செய்யவிருகிறதோ என்கிற அச்சஉணர்வு தான் அதனை அரக்கன் என்று அழைக்கத் தூண்டுகிறது.

நாம் தகவல்களுக்காக முழுக்க முழுக்க Google-ஐ மட்டுமே நம்பிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், Google உலகையே விலை பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆம், இது உறுதி. ஆனால், இது ஏதோ இன்றோ நாளையோ நடைபெற்றுவிடுமென்று நான் கூற முன்வரவில்லை. அடுத்த 300 ஆண்டுகளுக்கு அடுத்து நான் குறிப்பிட்ட “உலகை விலைபேசும் சூழல் வரலாம்”. மறுக்க முடியுமா? வியக்க வைக்கும் அதன் வளர்ச்சியையும் தரமான சேவையையும் முற்றிலும் இலவசமாக வழங்கும் மாண்பினையும் மிஞ்சும் அளவுக்கு எந்தவொரு நிறுவனமும் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போட்டி மிக அவசியம். அந்த விஷயத்தில் தற்போது உடனடித் தேவை Google-க்கு சரிநிகரான போட்டிதான். அதுவே நம் எல்லோரையும் பாதுகாக்கும்.

நன்றி : தமிழ் கபே 

No comments:

Post a Comment