Monday, June 14, 2010

மென்பொருள் நிறுவனத்தில் நான்


உலகம் என் கண்ணெதிரிலும், என் கை விரல்களிலும் தெரிகிறது. உலகின் மறு மூலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சந்திரனையும், செவ்வாயையும் கூட இங்கிருந்தே பார்க்க முடிகிறது. எல்லாம் என் அருகிலேயே இருக்கின்றன. குளிர்சாதனப்பெட்டியின் குளுமையான காற்று, சுத்தமான சூழ்நிலை,அறிவுமிகு மக்கள் உலககோடு தொடர்புகொள்ள இணையம், உறவோடு தொடர்புகொள்ள தொலைபேசி எல்லாம் என் அருகிலேயே.

தேவைக்கும் சற்று அதிகமான ஊதியம். மனம் விரும்புவதையெல்லாம் வாங்குவதற்கு ஒரு வாய்ப்பு. எழில்மிகு கட்டடங்கள் அதில் அழகுமிளிர் பெண்கள். சர்வதேச தரத்திலான வாழ்க்கை. இங்கே விமானம் பயணம் எந்த ஆச்சிரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்துவது கிடையாது. நாடு விட்டு நாடு சென்று பலதரப்பட்ட மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவது சாதாரண விஷயம். இங்கே கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக இருக்கிறது. நாளும் ஒரு தொழில் நுட்பம் அறிமுகமாயிக் கொண்டேயிருக்கும் வேலையில் இங்கே எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சகமனிதர்களின் உதவியில்லாமல் இங்கே நீங்கள் சிறு துரும்பைக்கூட நகர்த்திவிட முடியாது. குழுவுடன் பணியாற்றும் தன்மை மிகவும் அவசியம். தலைமைப் பொறுப்பேற்க இங்கே யாரும் தயங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதற்கு இங்கே திறமையானவர்களால் பலத்த போட்டி நிலவுகிறது. திறமை குறைந்தவர்களை இங்கே பார்ப்பது மிக அபூர்வம். அவர்கள் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு, களைந்தெறியப்பட்டு விடுகின்றனர். எல்லா நடவடிக்கைளிலும், 70 சதவீதத்திற்கு மேல் வெளிப்படையான தன்மையை எதிர்பார்க்கலாம்.

இனம், மொழி, நிறம், நாடு, ஆண், பெண் எவ்வித பாகுபாடும் கிடையாது. எல்லோரும் சமமாக நடத்தப்படுவதோடு தனிநபர் கருத்துக்களும் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

மேலும் இங்கே கற்றுக் கொள்வதற்கு யாருமே தயங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிக ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள வருகின்றனர். காரணம், பல சூழ்நிலைகளை, பல விஷயங்களை, கற்றுக்கொண்டால் தான் அடுத்த நிறுவனத்திற்கு செல்லும்போது பயனள்ளதாகவும், வசதியாகவும் இருக்கும் அதிக சம்பளத்தையும் கேட்டும் பெறலாம். இங்கே யாரையும் பேர் சொல்லி அழைக்கும் உரிமையுண்டு. அவர் நிறுவனத்தின் தலைவர் (Company Chairman) ஆக இருந்தாலும் சரி, முதன்மை நிர்வாக அதிகாரி(CEO)-வாக இருந்தாலும் சரி பேர் சொல்லி அழைக்கலாம்.

திறமையான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள இங்கே அதிக மெனக்கிடக்கிறார்கள். மேலும், ஊதிய உயர்வு என்பது முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையிலேயே தவிர, சாதியின் அடிப்படையில் கிடையாது. இங்கே சாதியின் அடிப்படையில் மக்களை பாகுபடுத்துவதோ, வேற்றுமைபடுத்துவதோ துளியும் கிடையாது. திறமை மட்டுமே அளவுக்கோல், சாதி அல்ல. லஞ்சம், கையூட்டு, கூழ்கும்பிடு போன்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சிபாரிசு மட்டும் சில பல இடங்களில் பிராந்திய உணர்வு ஆங்காங்கே. இங்கே தொன்றுதொட்டு இருக்கும் ஒரே பிரச்சனை முன்னவர் (Senior) பின்னவர் (Junior) மாமியார், மருமகள் சண்டைப் போல.

அவரவர் வேலைகளில் அவரவர் மிகக் கவனமாகவே இருக்கின்றனர். தகல்களை கையாள்வதில் இங்கே அஜாக்கிரதை என்கிற பேச்சுக்கே இடமிருப்பதில்லை. எத்தகையை இயற்கை சீற்றங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொள்வதற்கு இவர்கள் எந்நேரத்திலும் தயாராகவே இருக்கின்றனர். அதற்கான வழிமுறைகள், பயிற்சிகள் தவறாமல் அளகிகப்படுகின்றன. இயல், இசை, நாடகம் மூன்றையும் கற்றுக்கொள்வதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

இப்படி எல்லாம் இருந்தும் என் மனதில் ஒரு வெறுமை நிலவுகிறது. பல நூறு மைல்கள் அப்பால் இருக்கும் என் மனதில் சொத்து ஊரைப் பற்றியதான நினைவுகள் அலைப்போல் தாக்கி வருகின்றன.

நான் துள்ளி விளையாடிய அந்த கிராமத்து மண் சாலையை இன்று நான் பார்க்க விரும்புகிறேன். அந்த அரசுப் பள்ளிக்கூட கட்டிடங்கள், உலகை அறிமுகப்படுத்திய நூலகம்,என எல்லாமும் என் கண்முன் நிழலாடுகின்றன. அந்த குதூகலமான கிராமத்து சாலையில் மாலை வேளையில் மிதிவண்டியில் தினமும் 3 கி.மீ பயணம் செய்து திரும்பும் அந்த அற்புதமான, மகிழ்ச்சிப் பயணத்தை வாழ்வில் என்றுமே மறக்க முடியாது. பன்மொழி பேசும் அந்த குட்டி இந்தியா தான் என் உலகத்தின் நிரந்திர சொர்க்கம்.

ஒரு விதமான தனிமையே இங்கே உணர்கிறேன். ஏதோ இழந்து விட்டதைப்போல, தொலைத்துவிட்டதைப்போல .எல்லாமிருந்தும் எதுவுமேயற்றது போலதொரு தனிமை. தனித்து விட்டிருப்பதாக ஒரு எண்ணம், எதை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஒரு கேள்வி? கசைந்து போகுதுமான ஒரு வாழ்க்கை. பொருள் ஈட்ட புறப்பட்டு பொருளற்ற வாழ்க்கையை தொடருவதாக ஒரு குற்ற உணர்ச்சி. இருளில் ஓவியம் தீட்டுவதைப் போல, இதயத்தை விற்று அன்பை வாங்க முயற்சிப்பதா என ஒரு கேள்வி. கால நதியின் கையில் நம்மை ஒப்படைத்தப்பிறகு, அதன் இழுத்த இழப்புக்கு செல்லத்தான் வேண்டும். எதிர் நீச்சல், இங்கே அவ்வளவு எளிமையானதல்ல. அதன் போக்கிலேயே சென்று கரையேறுவதுதான் புத்திசாலித்தனம், சுழலில் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் செயல்படுவோமேயானால், வசந்தம் மீண்டும் மலரும் என்ற நம்பிக்கையில் நாட்களை தொடருகிறேன்.

No comments:

Post a Comment