Tuesday, June 29, 2010

அமெரிக்கர்களுக்கு யாரைப் பிடிக்கும்?

அமெரிக்காவில் சர்வே ஒன்று நடத்தியிருக்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு எந்தெந்த நாடுகள் பிடித்திருக்கின்றன, எந்தெந்த நாடுகள் பிடிக்கவில்லை? தெரிந்துகொள்ள கீழே உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.



பிடித்த முதல் நாடு, கனடா. பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இந்தியா. பிடிக்காத நாடுகளில் கடைசி இடம், இரானுக்கு. 29 சதவீதம் பேருக்கு க்யூபா பிடித்திருக்கிறது. ரஷ்யாவை 47 சதவீதம் பேரும், சீனாவை 42 சதவீதம் பேரும் விரும்பியிருக்கிறார்கள்.

இராக்கை கவனியுங்கள். 73 சதவீதம் பேர், வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறார்கள். பிடிக்கும் என்று வாக்களித்த 23 சதவீதம் பேரில், புஷ், ஒபாமா, ராணுவத்தினர் ஆகியோர் இருக்கக்கூடும். எழுபது சதவீதம் பேருக்கு பாலஸ்தீனம் ஏனோ பிடிக்கவில்லை. ஆப்கனிஸ்தானை 79 சதவிதம் பேர் நிராகரித்திருக்கிறார்கள்.

அமெரிக்கர்களின் மனநிலை இதுதான் என்று இந்த ஒரு சர்வேயை வைத்து திட்டவட்டமாக முடிவுசெய்துவிடமுடியாது என்றாலும் சில Patterns-ஐ புரிந்துகொள்ளமுடிகிறது.

மக்களின் விருப்பு, வெறுப்புகளை பெரும்பாலும் அரசாங்கமே தீர்மானிக்கிறது. இரானில், இராக்கில், ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுத்துக்கொண்டிருக்கும் காரணத்தால், அந்நாடுகள் குறித்து மாறுபட்ட அல்லது திரிக்கப்பட்ட செய்திகளே அதிகம் வெளியிடப்படுகின்றன. அந்த நாடுகளை அமெரிக்காவுக்குப் பிடிக்காது. எனவே, அமெரிக்கர்களுக்கும். கனடாவும் பிரிட்டனும் ஜெர்மனியும் ஜப்பானும் அமெரிக்காவுக்குத் தேவை. அவர்களுடனான உறவு லாபகரமானது. எனவே, அமெரிக்காவுக்கு அந்த நாடுகளைப் பிடிக்கும். எனவே, மக்களுக்கும் பிடித்திருக்கிறது.

சீனா வளமான நாடு. சீனாவுடன் தொழில், வர்த்தக உறவு கொள்வேண்டியது அத்தியாவசியம். என்றாலும், சீனாவை பிடிக்காதவர்களின் சதவிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணம், சீனா ஓர் அச்சுறுத்தும் போட்டியாளர் என்பதால்தான்.

இந்தியாவில் இப்படியொரு சர்வே எடுத்தால் என்ன ஆகும்? அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பிரிட்டன் ஆகிய நாடுகளை எத்தனை பேருக்குப் பிடிக்கும்? எத்தனை பேருக்குப் பிடிக்காது?

ஏன்?

Sunday, June 27, 2010

சொந்த ஊர்

கோலிகுண்டு பம்பரம் 
விளையாட்டின் கூட்டாளிகள்
புளியங்காய் மாங்காய் அடிக்க 
உடன் வந்த பங்காளிகள்
வாடகை சைக்கிளில்
கூடவே வலம் வந்த பயல்கள்
என பால்யத்தில் துவங்கி
சிறுவனென விலக்காமல் கிரிக்கெட்டில் 
சேர்த்துக்கொண்ட அண்ணன்கள்
அக்கறையோடு வழிநடத்திய
ஆசிரியர்கள் என
பதின்ம வயதில் தொடர்ந்து
கணிப்பொறியையும் புத்தகங்களையும் எனதுபோல் 
உபயோகிக்கச் செய்த உயிர் நண்பர்கள்
வாழ்க்கை குறித்தும் முன்னேற்றம் குறித்தும்
எண்ணற்ற இரவுகளில் விவாதித்தவர்கள்
என கல்லூரிப் பருவத்தில் நீண்டு
முதல் பியர் ஊற்றிக்கொடுத்தவன் வரை
எத்தனையோ பேர் இருக்க
மனசாட்சியை கேட்கிறேன்
என்ன நியாயம் இது?
சொந்த ஊர் என்றதும்
பழைய காதலியின் நினைவு
முந்தி வருவது?

Friday, June 25, 2010

கனக சுப்புரத்தினம் - “பாரதிதாசன்” ஆன வரலாறு

கொள்கைக்கு முரசடித்த திராவிட இயக்கக் கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள். பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினமாக இலக்கிய வாழ்வைத் துவக்கியவர் பாவேந்தர் அவர்கள்.
இவரிடத்தில்தான் சொற்கள் சோம்பல் முறித்துக் கொண்டன.
இவர் படைத்த பெண்களின் வளையல் கைகளில் வாள் மின்னியது. சித்திரக் கண்களில் சினம் கனன்றது.
பாரதிதாசனின் வாள் வார்த்தைகளின்அணிவகுப்பில் வைக்கப்பட்ட ஒவ்வொரு முற்றுப் புள்ளிக்குக் கீழும் இந்தச் சமூகத்தின் இழிவு புதைக்கப்பட்டது.
அவர் எழுதுகோல் குனியும் போதெல்லாம் தமிழும், தமிழ் இனமும் நிமிர்ந்தன.
“பாரதிதாசன்” என்னும் பெயர், ஒவ்வாரு தமிழனின் நாக்கிலும் பச்சை குத்தப்பட்டிருக்கிற ஒரு பெயர்ச் சொல்.
புரட்சிக் கவிஞரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். கனக சுப்புரத்தினம் என்னும் தன் பெயரை அவர் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். அதற்குக் காரணம் என்ன என்பது நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.
பாவேந்தர் அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் கவிதை எழுதி இதழ்களில் வெளியிட அரசு அலுவல் விதிகள் அன்றைக்கு இடந்தரவில்லை.
மேலும் தொடக்க காலத்தில் அவர் எழுதியவை எல்லாம் காந்தீய ஆதரவுப் பாடல்களாக இருந்தன. இதனை நினைத்துக் கவிஞர் தனது சொந்தப் பெயரை மறைக்க நினைத்தார். புனைப் பெயர் வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்.
மதுரையில் இருந்து வெளிவந்த “தேசோபகாரி” என்ற இதழுக்கு ஒரு பாடல் எழுதி, புதுவை கே.எஸ்.பாரதிதாசன் என்னும் பெயரில் அனுப்பி வைத்தார். கே.எஸ்.பாரதிதாசன் என்பது கனக சுப்புரத்தின பாரதிதாசன் என்று விரியும். மேலும் தேச சேவகன், ரூப்ளக்ஸ், தேச பக்தன், ஆனந்த போதினி, புதுவைக் கலைமகள், சுதேச மித்திரன், சுதந்திரன் போன்ற ஏடுகளுக்கும் பாரதிதாசன் என்னும் புனைப் பெயரிலேயே தம் படைப்புகளைப் பாவேந்தர் அனுப்பி வைத்தார்.
ஆங்கில அரசின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், தன் ஆசான் சுப்பிரமணிய பாரதியாரிடம் இருந்த ஈடுபாட்டின் காரணமாகவும் ஆசிரியர் கனக சுப்புரத்தினம் “பாரதிதாசன்” என்னும் பெயரை ஏற்றார்.
இது பற்றிப் பாரதிதாசன் அவர்களே குயில் இதழில் ஒரு முறை எழுதினார். “நான் பாரதிதாசன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டுள்ளேன். அதற்குக் காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம். சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது” என்று பெயர் மாற்றத்திற்குக் காரணம் கூறினார்.
ஆரிய ஆதிக்கத்தையும், பார்ப்பனப் புரட்டையும் துணிவாகப் புறக்கணிக்கும் மனப்பான்மை உள்ளவராகத்தான் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தார். தன் படைப்புகளில் கடுமையாக எதிர்த்தும் எழுதினார். இருந்தாலும் தன் பெயரை “பாரதிதாசன்” என்றே வைத்து இருநதார். பார்ப்பன சாதியினரான “பாரதி”யின் பெயர் தமக்கு ஒத்து வராது என்று அவர் விலக்கி விடாமல் இணைத்தே வைத்திருந்தார்.
திராவிட இயக்க முன்னணித் தோழர்கள் சிலருக்குப் புரட்சிக் கவிஞர் கொண்டிருந்த “பாரதிதாசன்” என்ற பெயர் ஏற்கத்தக்கதாக இல்லை. ஒரு சிலர் அவரிடமே பார்ப்பன இனத்தைச் சேர்ந்த பாரதிக்குத் தாசனாக விளங்கக் கூடாது என்று எடுத்துச் சொல்லி, பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. மேலும் அவர் சொன்னார் நான் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதில் பிழை ஒன்றும் இல்லை என்று கருதுகின்றேன். இவ்வாறான முடிவுக்கு வந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அதிலொரு காரணம் :
என் நூல்களை வெளியிட்டுப் பிழைக்க எண்ணியவர்கள் என் பெயர் பாரதிதாசன் என்பதற்காக அந்த எண்ணத்தைக் கை விட்டதுண்டா? அந்தச் சுவடிகளின் அட்டையில் பாரதிதாசன் என்ற பெயரைப் பெரிய எழுத்தால் அவர்கள் அச்சடிக்க மறுத்ததுண்டா? எத்தனையோ சீர்திருத்தக்காரர்கள் என் நூல்களை என் அனுமதிக்குக் காத்திருந்து பெற்று வெளியிட்டுள்ளார்கள் என்று தெரிவித்துத் தம் பெயரில் தவறில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
திராவிட இயக்கத் தோழர்களில் பாரதிதாசன் என்னும் பெயருக்கு எதிர்ப்புக் காட்டியவர்களில் முக்கியமானவர் அஞ்சாநெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரிசாமி ஆவார். அவர் கவிஞரைச் சந்தித்து “பாரதி ஒரு பார்ப்பான், மேலும் ‘தாசன்’ என்பது வடசொல். பாரதிதாசன் என்றால் பாரதிக்கு அடிமை என்றல்லவா பொருளாகி விடும்” என்று கேட்டார். அவர் இப்படிக் கேட்டவுடனே, “ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிமைதான்டா” என்று சொல்லி அழகிரிசாமியின் வாயடக்கினாராம்.
மதுரை வி.ஜி.சீனிவாசன் என்பவர் சில நண்பர்களோடு பாரதிதாசனைச் சந்தித்துப் பேசியிருந்த பொழுது அவர்களில் ஒருவர், “நீங்கள் ஏன் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டார். கவிஞர் உடனே சினந்து “உங்களுடைய வினாவின் நோக்கம் எனக்குப் புரிகிறது. இது குறும்புத்தனமான வினா. அய்யருக்கு நீங்கள் அடிமையா என்று கேட்பது போலத்தான். நான் என்றென்றும் உளமாரப் போற்றி வழிபடுகிறவர் இந்த அய்யர். அன்பும் பண்பும் தமிழுணர்வும் ஒருங்குசேர்ந்த பொன்னுருவம் அவர். பாரதியாருக்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை? இந்த வினாவினை யார் விடுத்தாலும் எனக்குக் கோபம் வரும். ஏனெனில் கழகத்தவர்களோ முன்னேற்றம் காணத்துடித்தவர்களோ யாராயிருந்தாலும் சரி, சீர்திருத்தம் என்னும் சொல்லை எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொள்ளத் தெரிந்து கொள்வதற்குப் பலநாளுக்கு முன்னதாகவே தமது வாழ்க்கையிலே சீர்திருத்தச் செயல்கள் பலவற்றைச் செய்து காட்டியவர் பாரதி” என்று தன் வழிகாட்டியைப் பற்றிப் பாரதிதாசன் பெருமைப்பட்டுள்ளார்.
நம்முடைய இன மானப் பேராசிரியர் (க.அன்பழகன்) அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் 1982 இல் உரையாற்றியபோது ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தினார்.
பேராசிரியர் ஒரு முறை பாவேந்தரைச் சந்தித்த போது, “பாரதியின் மேல் உங்களுக்குப் பற்று இருக்கலாம்; மதிப்பு இருக்கலாம். அதற்காக நீங்கள் பாரதிதாசன் என்னும் பெயரை வைத்துக் கொள்ள வேண்டுமா?” என்று வினாவினார். அதற்கு அவர் “பாரதியைப் பற்றி மற்றவர்கள் தவறாகக் கருதுவதைப் போலவே நீயும் கருதுகிறாயே! அவரோடு நான் 12 ஆண்டுகள் பழகி இருக்கிறேன். அவருடைய உள்ளத்தில் சாதி வேறுபாடு அறவே இல்லை. பிராமணர்களை அவர் துளிகூட மதிப்பது கிடையாது. மேலும் என்னுடைய கவிதைகளில் காணப்படுகிற முற்போக்குக் கருத்துகளுக்குப் பாரதியாரே காரணம் ஆவார்” என்று பதிலுரைத்தாராம்.
பொதுவாக பாவேந்தர் பாரதிதாசனிடம் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை மிகவும் அழுத்தமாகவே இருந்தது எனபதற்கு அவர் எழுதிய இந்க கவிதையே சான்றாக இருக்கிறது.
பார்ப்பான்பால் படியாதீர்
சொற்குக் கீழ்ப் படியாதீர்...
ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வம் மிக உள்ளவன் போல்!
நம்ப வேண்டாம்...
தமிழின்பேர் சொல்லிமிகு
தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்
தமிழழித்துத் தமிழர் தம்மைத்
தலைதூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான்
அமுதாகப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க
நம்பவேண்டாம்
தமிழர்கடன் பார்ப்பானைத்
தரைமட்டம் ஆக்குவதே...
இவ்வளவு எதிர்ப்புணர்ச்சியும் பாரதியாரை அணுகும் போது அடிபட்டுப் போகிறது. ஏனென்றால் இதில் சொல்லப்பட்டுள்ள பார்ப்பனர்க்கே உரிய தீய நோக்கங்களும் செயல்பாடுகளும் இல்லாமல் தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழ் மொழி ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காகத் தன் பணியை முழுமையாகச் செய்தவர் பாரதியார் என்பது பாரதிதாசன் எனும் பெயர் மாற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அதனால் தான் பாரதிதாசன் ஒருமுறை, இந்த நூற்றாண்டில் இரு பார்ப்பனர்கள் செந்தமிழ்ப் பற்றுடையவர்கள், “முந்து பாவலன் பாரதி மற்றவன் முத்தமிழ் வல்லவன் பரிதிமாற் கலைஞன்” என்று விதிவிலக்குப் பெறுவதற்கான காரணத்தைச் சுட்டிக்காட்டினார்.
கனக சுப்புரத்தினமாக இருந்த பாவேந்தர் - பாரதிதாசன் என்று பெயர் மாற்றம் கொண்டதற்குக் காரணம் குருட்டுத்தனமான குருபக்தி அல்ல. தன் குரு பாரதி மீதும், அவரது படைப்புகள் மீதும், பாரதி தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த கொள்கையின் மீதும் பாவேந்தருக்கு ஏற்பட்ட பற்றுதான் பாரதிதாசன் எனப் புனைப் பெயர் சூட்டிக்கொள்ளக் காரணம் எனத் தெரிகிறது.
- கம்பம் செல்வேந்திரன்

Thursday, June 24, 2010

இணையதளமொன்றை பதிவு செய்வது எப்படி?

சொந்தமாக தமக்கென்று இணையதளம், வலைப்பூக்கள் என்று உருவாக்கிக் கொண்டு அதில் தம் கருத்துக்களையும், உணர்வுகளையும் உலகோடு பகிர்ந்துகொள்வது மிகப்பிரபலமாகி வருகிறது. அப்படி நமக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமானால் முதலில் அதன் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி பதிவு செய்துகொள்வதினால் அந்தப்பெயரை வேறு எவரும் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்பதோடு, இணையதளம் முழுக்கட்டுப்பாட்டில் நம் கையில் வந்து விடுகிறது.
இணையதளப் பெயரினை தேர்ந்தெடுக்கும் முன் எத்தகைய பணிக்காக இணையதளத்தை உருவாக்க விருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். காரணம் அதன் அடிப்படையில் தான் இணையதளத்தின் பின்னொட்டு அமைய வேண்டும். உதாரணத்திற்கு, வணிகரீதியானது எனில் .com என்றும், லாப நோக்கமற்றது எனில் .org என்றும் குழுசார்ந்தது எனில் .net என்றும் கல்வி சார்ந்தது எனில் .edu அல்லது .ac என்றும் குறிப்பிட வேண்டும். இந்திய இணையதளம் என்று குறிப்பிட வேண்டுமெனில் .in என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இணையதள பதிவிக்கென பதிவாளர்கள் இணையத்தில் ஏராளாமக இருக்கின்றனர். முழுக்கட்டுப்பாட்டுடன் கூடிய சிறந்த வசதி, வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை முன்னிறித்தியே நாம் பதிவாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய சிறந்த பதிவாளர்களாக bagfull.net திகழ்கிறது. மிகக்குறைந்த விலையில் சிறப்பான வசதியை அளித்திடும் இந்நிறுவனம் இணையதளப் பதிவு மற்றும் அதற்கான இடம் என்று இரண்டு வசதியையும் அளிக்கின்றது.
இணையதளப் பெயரினை பதிவு செய்வதற்கான படிநிலைகள் :
  1. முதலில் அப்பெயர் பதிவிற்கு இருக்கிறதா அல்லது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். http://www.bagfull.net/check.php முகவரியில் இதனை உறுதிசெய்து கொள்ளலாம்.
  2. பெயர் பதிவுக்கு இருக்குமாயின் நம்முடைய தகவல்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். எத்துனை ஆண்டுகாலம் பதிவு செய்ய வேண்டுமென்பதையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பதிவுக்காலம் முடிந்தவுடன் மீண்டும் பணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.

    ExtensionRegistration/yrRenewal/yrTransfer/yrReg Period
    .com350.00350.00350.001 - 10 yrs
    .net350.00350.00350.001 - 10 yrs
    .org350.00350.00350.001 - 10 yrs
    .in650.00650.00650.001 - 5 yrs
    .co.in350.00350.00350.001 - 5 yrs
    .org.in350.00350.00350.001 yr
    .asia850.00850.00850.001 - 10 yrs
    .gen.in350.00350.00350.001 yr
    .firm.in350.00350.00350.001 yr
    .ind.in350.00350.00350.001 yr
    .net.in350.00350.00350.001 - 5 yrs
    .info350.00350.00350.001 - 10 yrs
    .us350.00350.00350.001 - 10 yrs
    .biz350.00350.00350.001 - 10 yrs
    .co.uk400.00400.00-2 yrs
    .org.uk400.00400.00-2 yrs
    .me.uk400.00400.00-2 yrs
    .travel6,000.006,000.006,000.001 yr
    .jp4,600.004,600.004,600.001 yr
    .de800.00--1 yr
    .bz1,400.001,400.00-1 yr
    .cn1,400.001,400.001,400.001 yr
    .com.cn1,400.001,400.001,400.001 yr
    .org.cn1,400.001,400.001,400.001 yr
    .net.cn1,400.001,400.001,400.001 yr
    .nu1,400.001,400.00-2 yrs
    .ws900.00900.00-1 yr
    .tv1,300.001,300.00-1 yr
    .cc1,200.001,200.001,200.001 yr
    .name350.00350.00350.001 - 10 yrs
    .ca900.00900.00-1 yr

     
  3. மேற்குறிப்பிட்ட தொகையை செலுத்தி, பெயரை பதிவு செய்துகொண்ட பின், பதிவாளரிடமிருந்து பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
இது வெறும் பெயர் பதிவு மட்டுமே. இடத்திற்கு தனியாக பணம் செலுத்தி பெயரையும் இடத்தையும் இணைத்துக் கொள்ளவேண்டும். இதன் பிறகு நமது கோப்புகள் பதிவாளர் தந்துள்ள முகவரிக்கு பதிவேற்றம் செய்யப்படும்போது உலகோடு நமது தொடர்பு பரவத் தொடங்குகிறது. தற்போதெல்லாம் பெயர் பதிவு செய்தால் மட்டுமே போதுமானது. ஏராளாமான நிறுவனங்கள் இலவசமாக இடத்தை அளிக்கின்றன.

அங்காடித் தெரு

பொருள் முதல்வாதமும் கருத்து முதல்வாதமும்

பொருள் முதல்வாதம் சொல்கிறது மனிதனின் சிந்தனையும் கருத்துக்களும் அவனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழல், சமூகம் அவற்றில் நடக்கும் இயக்கங்கள், நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களின் பிரதிபலிப்பே என்று. அதாவது நான் என்ற பொருளாளாகிய ஒருவன் அவனிடம் இருக்கும் மூளை என்கிற பொருளாளாகிய ஒன்றைக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள சூழலை மையமாக வைத்து பிரதிபலிப்பதே சிந்தனை என்பது பொருள் முதல்வாதிகளின் வாதம். ஆனால் கருத்து முதல்வாதிகளோ நான் சிந்திக்கிறேன் அதனால்தான் நான் இருக்கிறேன்; அதாவது நான் என்பதைவிடவும் என் சிந்தனைதான் முதன்மையானது என்று கூறுவர்.

சமூகத்தில் மதத்தைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை மானசீகமாக ஆட்படுத்தி ஆளும் வர்க்கங்கள் அடக்குமுறைப் போக்குகளையும் அதர்மமான சுரண்டலையும் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ஆளும் வர்க்கத்திற்கு இக்கருத்து முதல்வாதம் பேருதவி செய்தது. அதனை உடைத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் சமூக மாற்றம் விரும்பியோர் இருந்தனர்.

அந்தக் கடமையை வரலாறு காணாத வீரத்துடனும் தர்க்க ஞானத்துடனும் கருத்து முதல்வாதம் முன்வைத்த அனைத்துக் கேள்விகளையும் நேருக்குநேர் எதிர்கொண்டு அசைக்க முடியாத வாதங்களின் மூலம் அக்கேள்விகளுக்கு விடையளித்து கருத்து முதல்வாதத்தை அதன் அரணிலேயே சந்தித்து முறியடித்தவர்கள் மாமேதைகள் மார்க்ஸ் , எங்கெல்ஸ் , லெனின் ஆவர்.

அறியுமுன் கருத்து (Pre Conception )

ஆனால் மனித மனதில் அவர்களை அறியாமலேயே ஒன்றை பகுத்தாய்வு மூலம் அறியும் முன்பாகவே நிறைந்திருக்கும் கருத்து என்பது உண்டு. இடைவிடாத பிரச்சாரம், பாரம்பரியமாகத் தொடரும் நம்பிக்கைகள் ஆகியவை அந்த அந்த அறியுமுன் கருத்து மனித மனதில் நிறைந்திருப்பதற்கான முக்கியக் காரணமாகும்.

மார்க்ஸ் முதல் லெனின் வரையிலான முதல் தரப் பொருள் முதல்வாதிகளின் தலையாய பணி கருத்து முதல்வாதப் பிதற்றல்களை எதிர் கொள்வதிலேயே மிகப்பெரிதும் செலவிடப்பட்டதால் இந்த அறியுமுன் கருத்து மனித மனதில் உருவாக்கும் பொய்த்தோற்றம் குறித்து ஓரளவு கருத வேண்டிய அவசியம் அம்மேதைகளுக்கு அவ்வப்போது ஏற்பட்டதே தவிர மிகப்பெரிதாக ஏற்படவில்லை. பின்னாளில் இந்த அறியுமுன் கருத்து அவர்கள் சாதிக்க விரும்பிய சமுதாய மாற்றப் போருக்கு எத்தனை எதிராக இருக்கப்போகிறது என்பதை அம்மேதைகள் அறிந்திருக்கவில்லை.

ஆம். இன்று நமது நாட்டில் இடதுசாரிகள் என்று செயல்படுவோர் பலரிடமும் ஒரு சிந்தனைப் போக்கு உள்ளது. அதாவது இந்த நாட்டின் பெரிய முதலாளிகள் மற்றும் அந்நிய முதலாளிகள் நமது எதிரிகள்; நமது போராட்டம் அடிப்படையில் அவர்களை எதிர்த்ததாகவே இருக்க வேண்டும். அந்தப் போராட்டத்தில் அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் என்ற ரீதியில் நமது நாட்டின் தேசிய மற்றும் சிறு முதலாளிகள் நம்மோடு இணைவதற்கான வாய்ப்புள்ளது. அந்த வகையில் அவர்கள் நம் நேச சக்திகள் என்ற விடுதலைப் போராட்ட காலத்தில் ஏற்பட்ட எண்ணம் ஒரு அறியுமுன் கருத்தாக அவர்களிடம் மிகப் பெரும்பாலும் இப்போதும் நிலவுகிறது.

‘இடதுசாரி’ மனதில் நின்று நிலவும் அறியுமுன் கருத்து முன்னிறுத்தும் சிக்கல்

ஆனால் மேலோட்டமாக விமர்சனப் பூர்வமின்றி நிகழ்வுகளை அதன் ஓட்டத்தில் பார்க்காமல் பார்க்கும் போது சரியானதாகப்படும் இந்த விஞ்ஞான பூர்வமாகப் பகுத்தாய்வு செய்யப்படாத கருத்து நடைமுறையில் இதனை மையமாக வைத்து இயக்கம் கட்டும்போது பல சிக்கல்களை தோற்றுவிக்கிறது.

அதாவது இவர்கள் கூறக்கூடிய அந்நிய முதலாளிகள் பெரிய முதலாளிகள் ஆகியோர் நேரடியாக நடத்தும் தொழிற்சாலைகளில் பொதுவாகத் தொழிலாளரை அணிதிரட்டப் பயன்படும் கூலி மற்றும் சம்பளப் பிரச்னைகளை மையமாக வைத்து தொழிலாளரை அணிதிரட்ட முடிவதில்லை. ஏனெனில் மற்ற சிறு தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வழங்கப்படுவதைக் காட்டிலும் கூட இத்தொழிற்சாலைகளில் கூடுதல் சம்பளம் இதன் நிரந்தரத் தொழிலாளருக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் சமீப காலங்களில் இந்நிறுவனங்கள் உயர்தொழில் நுட்பம் கற்ற ஒரு சிலரைத் தவிர வேறுயாரையும் தங்களது தொழிற்சாலையின் நிரந்தரத் தொழிலாளர் சம்பளப் பட்டியலில் வைப்பதில்லை. முடிந்த அளவிற்கு தங்களது மையமான உற்பத்திப் பொருளுக்குத் தேவைப்படும் அனைத்து உதிரிகளையும் ஒப்பந்த அடிப்படையில் சுதேசிச் சிறுமுதலாளிகளுக்கு தயாரிக்கக் கொடுத்து விடுகின்றனர்.

இதற்கான காரணம் மிகமிகக் குறைந்த கூலி கொடுத்து ஒட்டஒட்டத் தொழிலாளரைச் சுரண்டி வேலை வாங்கி தாங்கள் அந்த உதிரி உறுப்புகளை நேரடியாகச் செய்தால் எவ்வளவு செலவாகுமோ அதைக் காட்டிலும் குறைந்த செலவிலேயே அவற்றைப் பெரும் முதலாளிகளும் , அந்நிய முதலாளிகளும் சிறு முதலாளிகளிடமிருந்து பெற்றுவிட முடிகிறது என்பதே.

அதே சமயத்தில் குறைந்த கூலியை மையமாக வைத்து பெரிய அளவில் தொழிலாளரை அணிதிரட்டும் வாய்ப்பு சிறு தொழிற்சாலைகளிலேயே உள்ளது. ஆனால் இங்கு சிறு முதலாளிகள் நேச சக்திகள் என்று கருதும் தற்போது இடதுசாரிகளை ஆதிக்கம் செலுத்தும் கண்ணோட்டம் தொழிலாளரை அணிதிரட்டுவதை மந்தப்படுத்துகிறது.

எவன் சுரண்டுகிறான் என்பதல்ல பார்க்கப்பட வேண்டியது சுரண்டல் உள்ளதா என்பதே

அதாவது சிறு முதலாளி பெருமுதலாளியால் சுரண்டப்படுகின்றானா இல்லையா என்பது பிரதானமல்ல. பிரதானமானது தொழிலாளி எத்தனை தூரம் சுரண்டப்படுகின்றானோ அதனை அடிப்படையாகக் கொண்டு அவனை அணிதிரட்டி போராடுவதுதான். ஏனெனில் சிறுமுதலாளிகளின் உள்ளகிடக்கை ஒருபோதும் தொழிலாளியாக வேண்டும் என்பதல்ல. மாறாக பெருமுதலாளியாக வேண்டும் என்பதுதான்.

ஆனால் முதலாளித்துவச் சுரண்டலின் ஏகபோகக் கட்டத்தில் ஏகபோகங்களுடனான போட்டியினைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சிறுமுதலாளிகளில் ஒருசிலர் தொழிலாளிவர்க்க அணிகளுக்குத் தள்ளப்படுகின்றனர். அப்படித் தள்ளப்படுபவர்களும் மனநிலையில் பல முதலாளித்துவ குணாம்சங்களைக் கொண்டவர்களாகவே இருந்து கொண்டு தொழிலாளிவர்க்க இயக்கத்திற்குள் முதலாளித்துவ சிந்தனைப் போக்கை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர். அதாவது அக்குணங்களை அவர்கள் சரிசெய்து கொள்ளாவிட்டால் பட்டாளிவர்க்க இயக்கத்தின் முக்கிய ஊழியர்களாக அவர்களால் ஆகமுடியாது என்ற நிலையே அவர்களைப் பொறுத்தவரையில் உள்ளது.

சிறு முதலாளிகள் பெருமுதலாளிகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதனை எதிர்த்து அவர்கள் போராடட்டும்; அதனைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொழிலாளர் போராட்டத்தை மந்தப்படுத்த வேண்டுமென்பதில்லை.

சிறுமுதலாளிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டலை எதிர்த்து பொங்கி எழ உருவாகும் வாய்ப்பினைப் பயன்படுத்தி நாம் தீரமிக்க தொழிலாளிவர்க்கப் போராட்டங்கள் கட்டினால் அவற்றின் விளைவாக சிறுமுதலாளிகள் தொழிலாளருக்குத் தரவேண்டிவரும் கூடுதல் கூலியும் மேலான வேலைச் சூழ்நிலையுமே அவர்களுக்கு நெருக்கடியினைத் தோற்றுவிக்கும்; அதனால் எந்தப் பெருமுதலாளிகளுக்காக அவர்கள் வேலை செய்கிறார்களோ அவர்களை எதிர்த்த போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை சிறுமுதலாளிகளுக்கு உருவாகும்.

இந்திய உழைக்கும் வர்க்க இயக்கத்தில் உள்ள இந்த மையமான அம்சத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒரு நல்ல வாய்ப்பினை நமக்கு தந்துள்ளது தற்போது வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரு. வசந்தபாலன் அவர்களின் அங்காடித் தெரு திரைப்படம்

எந்தவொரு வகையான செயற்கைத் தன்மையும் , மிகைப்படுத்துதலுமின்றி காலங்காலமாக சென்னை ரங்கநாதன் தெரு போன்ற இடங்களில் பெரிய கடைகளில் வேலை செய்யும் வறட்சி பாதித்த பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு சுரண்டப்படும் இளம் தொழிலாளரின் அவலநிலையின் தத்துரூபமான படப்பிடிப்பாக இது உள்ளது.

காட்டுச் சுரண்டலைச் சாஸ்வதமாக்கக் கடைப்பிடிக்கப்படும் யுக்திகள்

தொழிலாளரை பணியமர்த்துவதில் அதாவது அவர்கள் எந்தவகை பின்பலமும் அற்றவர்களாக தாங்கள் சம்பாதித்துத்தான் குடும்பத்தைக் காத்தாக வேண்டும் என்ற முழுமையான நிராதரவான நிலையில் இருப்பவர்ளாக உள்ளார்களா என்று பார்ப்பதில் தொடங்கி அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் நிமிர்ந்து எழுந்து விடாமல் இருக்கச் செய்வதற்காக கடைப்பிடிக்கப்படும் அடக்குமுறை யுக்திகள் வரை முதலாளிகளால் கடைப்பிடிக்கப்படும் அனைத்து யுக்திகளும் மிகவும் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கட்டுப்பாட்டை நிலைநாட்டுகிறேன் என்ற சாக்கில் நடத்தப்படும் பாலியல் பலாத்காரமும் வெளியில் யாருக்கும் தெரியாமல் காலங்காலமாக நடந்து கொண்டிருப்பது வெளிக் கொணரப்பட்டுள்ளது.

தானாகவும் கடிக்கும் கண்காணி நாய்

நாய் பல சமயங்களில் எஜமான் ஏவினால் கடிக்கும்; ஆனால் கடித்து ருசிகண்ட பின்பு அதாகவும் கூட சிலரைக் கடிக்கும். அதுபோல்தான் இந்திய ‘இடதுசாரி’களால் செல்லமாக நேச சக்திகள், சிறு உடமையாளர்கள் என்று அழைக்கப்படும் இப்படத்தில் வரும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்களில் முதலாளிகளால் கண்காணிகளாக நியமிக்கப் படுபவர்களின் நடைமுறைகளும் உள்ளன.

கட்டுப்பாட்டை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் தனது மன விகாரங்களை இஷ்டத்திற்குப் பிரதிபலிக்கவும் சபல சிந்தனைகளைத் தணித்துக் கொள்ளவும் அவர்களுக்கு முதலாளியால் தரப்படும் வாய்ப்பும் ஒரு கருதற்பொருளாக முதலாளிகளால் பாவிக்கப்படுகிறது. அதாவது இந்தக் கண்காணிகள் சம்பளத்திற்காக மட்டுமல்ல; சிறு வயது இளம் பெண்களிடம் அரசல் புரசலாகத் தவறாக நடந்து கொள்ள அவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பையும் மனதிற்கொண்டே இப்பணியில் நீடிக்கின்றனர்.

‘மாடர்ன் டைம்ஸ்’ சுரண்டலைக் காட்டிலும் கொடூரமான சுரண்டல்

நூற்றுக் கணக்கானோர் உட்காருவதற்கு கூட இடம் போதாது என்ற இடத்தில் உறங்கியாக வேண்டிய நிலையில் வேலையாட்கள் வைக்கப்பட்டிருக்கும் போக்கு , அதைப்போல் அவர்கள் குளிப்பதற்கு , மல ஜலம் கழிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அறவே போதாத வசதிகள் அதாவது அவர்களை அவர்களே நாங்களும் மனிதர்கள் தான் என்று எண்ண முடியாது , தாங்கள் எப்படியாகிலும் வாழ்ந்தாக வேண்டிய ஜென்மங்கள் என்று கருதும் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் கொடுமை நாம் நாகரீக உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்கச் செய்கிறது. மிகக் குறைந்த சாப்பாட்டு நேரம் அதில் நூற்றுக் கணக்கனோருடன் முண்டியடித்து சுகாதாரக் கேடான சூழ்நிலையில் சாப்பிட்டுவிட்டு வந்து பணியில் சேரவேண்டிய கட்டாயநிலை காட்டப்பட்டுள்ள விதம் சார்லி சாப்ளினின் மார்டன் டைம்ஸ் ஐ நினைவுப்படுத்தும் ஒரு அற்புதப் படப்பிடிப்பு. ஆனால் மாடர்ன் டைம்ஸ் எடுக்கப்பட்ட காலத்தில் கூட நிலவாத பெருங்கொடுமை , இச்சூழ்நிலையில் சாப்பிட்டுவரும் போது தவிர்க்க முடியாமல் ஏற்படும் தங்களது ஒவ்வொரு நிமிடத் தாமதத்திற்கும் ரூபாய் ஒன்று என்று தண்டம் செலுத்தவேண்டிய கோர நியதி.

முதலாளிகளின் எலும்புத் துண்டுகளுக்கு இரையாகும் காவல்துறை

உடமையாளர்களுக்கும் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறைக்குமுள்ள நெருங்கிய தொடர்பு; கொலையே நேர்ந்தால் கூட அதனை மூடிமறைக்க இடைவிடாமல் கிடைக்கும் கையூட்டைக் கருத்தில் கொண்டு இரையாகும் , துணைபோகும் காவல்துறை. எப்போதாவது இந்தக் கொடும் கொத்தடிமை சூழ்நிலையில் ஒரு ஸ்பார்டகஸ் உருவாகிவிட்டால் அவன் திருடன் என நிறுவனத்தால் முத்திரை குத்தப்பட்டு அதற்குக் காவல்துறையால் ஒப்புதலும் வழங்கப்பட்டு தெருவில் நிறுத்தப்படும் கொடுமை; இலவு காத்த கிளியாக எந்த இந்தத் தேசிய , குட்டி முதலாளிகளின் நேசத்திற்காக இந்திய

‘இடதுசாரி’களும் ‘கம்யூனிஸ்ட்’களும்” காத்துக் கிடக்கின்றனவோ அந்த நேசம் அங்கு கடை வைத்திருக்கும் அனைத்து முதலாளிகளிடமும் அதுவாகவே நன்கு மலர்ந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளரை யாரும் வேலைக்கு சேர்க்காமல் அல்லாட விடும் அவலம்;

கொடும் சுரண்டல் , கடுமையான அடக்குமுறைகளாலும் கருகிப் போகாத மனிதம்

இத்தனைக்கும் மத்தியிலும் கூட அந்த உழைப்பாளிகளிடம் ஊறித்ததும்பும் ஒரு வாழ்க்கை; நகைச்சுவையான கலந்துரையாடல்கள். மத்தியதர வர்க்க நொண்டி ஒழுக்க நெறிமுறைகளிலிருந்து விலகி நின்று தன் பழைய காதலனையும் தன் பழைய காதலியையும் தற்போதைய காதலர்கள் அசைபோட்டுக் கொள்ளும் அழகு அதாவது வாழ்க்கை தான் எதையும் தாக்குபிடித்து நிமிர்ந்து நிற்கும் தன்மைகளை எவ்வளவு கொண்டிருக்கிறது என்பதை உயர்த்திக் காட்டும் உன்னதம்.

நகரங்களில் நிலவும் இரவு நேரக் கிரிமினல் நடவடிக்கைகளால் பெண்கள் தனியாக மட்டுமல்ல தாங்கள் விரும்பியவர்களோடு கூட நடமாட முடியாதவையாக ஆகிவருவதும் , வாகனங்கள் மனிதர்களை அற்பப் புழுக்களாகக் கருதி ஓட்டப்படுவதால் நிகழும் கோர விபத்துக்களும் எந்த சினிமாத்தனமான மிகைப் படுத்துதல்களுமின்றி எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

விடுமுறை குறித்த தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர் துறையிருந்தும் அதற்கான அலுவலகங்கள் பெயர்ப்பலகைகள் ஆயிரக் கணக்கான அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தண்டச் சம்பளம் ஆகியவையிருந்தும் இதுபோன்ற நிறுவனங்களில் அறவே அமலாவதில்லை. அதனால் முறையாக விடுமுறை எடுத்து ஊர்வந்து வேண்டியவர்களைக் காணமுடியாத நிலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் தள்ளப்படுகின்றனர்.

அச்சூழ்நிலையை தன் அண்ணனைப் பார்க்க ஆசை ஏராளம் இருந்தும் பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் கதாநாயகனின் தங்கை தன் அண்ணன் வேலை செய்யும் கடையில் பொருள் வாங்கியதற்காக வழங்கப்பட்ட பையை பொருள் வாங்கியவர்களிடம் இருந்து இரவலாகக் கெஞ்சிப் பெற்று அதனைப் பார்த்து ஆறுதலடைவது; காலொடிந்த நிலையில் இனிமேல் செயலிழந்த தனக்கு பணம் அனுப்பும் வாய்ப்பற்றவளாக மகள் ஆகிவிட்டாள் என்று தெரிந்தவுடன் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும் விதத்தில் இரக்கமற்ற காரியவாதியாக அவளைக் கைவிட்டுக் கிளம்பும் தந்தை; ஆனால் நெருங்கிப் பேசிப் பார்க்கையில் அப்படிப்பட்ட ஒரு வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவரே இவர், அதனால் தான் இது குறித்துத் தனக்குள்ளேயே தேங்கிக் கிடக்கும் வெறுப்புணர்வை தயங்காது வெளிப்படுத்துகிறார் என்று இவருக்குள்ளும் நிறைந்திருக்கும் மனிதத்தை வெளிப்படுத்தும் கதாநாயகியின் தந்தை குறித்த படப்பிடிப்பு எனச் சிறுசிறு காட்சி அமைப்புகள் மூலம் உழைக்கும் வர்க்கத்தில் ஊறித் ததும்பும் பாசமும் மனிதமும் வெளிப்படுத்தப்படுகிறது.

இடையூடாக வீட்டுவேலை செய்யும் காதாநாயகனின் தங்கை மூலமாக வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு நிகழும் பிரச்னைகளும் மக்களின் பார்வைக்கு முன் வைக்கப் படுகின்றன. இயற்கையில் உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் பருவமாற்றங்களை தீட்டு என்று சித்தரித்து அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்குப் புறமாக வீட்டு நாய் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் அறையைக் காட்டிலும் நெருக்கமானதும் அசுத்தமானதுமான அறையில் தள்ளிவைக்கும் கொடுமையைச் சித்திரிப்பதன் மூலம் ஜனாதன ஹிந்து தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் மக்களின் மனிதத் தன்மையற்ற பழக்க வழக்கங்கள் உரிய விதத்தில் சாடப்படுகிறது.

தலைமுறை இடைவெளி

அதே சமயத்தில் கெளஹாத்தியில் தன் மகளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு விட்டதால் உதவிக்கென்று காதாநாயகியின் தங்கையை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் வீட்டு எஜமானி அனுப்பும் போது இதுபோன்றதொரு பருவம் எய்துதல் என்ற ஒரு இயற்கை நிகழ்வுக்காகத்தானே தன்னை ஒதுக்கி வைத்தார்கள் என்ற எண்ணம் சிறிதுமின்றி அந்த அக்கா நல்லவர்கள் அவர்கள் என்னை நன்றாக வைத்துக் கொள்வார்கள் என்று அப்பணியை விரும்பி ஏற்றுச்செல்லும் தங்கை. இதன் மூலம் எஜமானத்துவம் மற்றும் சடங்குகள் சம்பிரதாயங்களில் ஊறி மனித நேயத்திற்கு எதிராக நிற்கும் பழைய தலைமுறையைப் பிரதிபலிக்கும் தாயும் அதிலிருந்து சற்றே மாறுபட்டு நிற்கும் புதிய தலைமுறையின் திரையில் காட்டப்படாத மகளும் முன்னிறுத்தப் படுகிறார்கள்.

இன்றைய முதலாளித்துவச் சுரண்டலின் தன்மையையும் அவலத்தையும் இந்தியாவில் இடதுசாரிகள் , கம்யூனிஸ்ட்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் சிறு முதலாளிகள் நேசசக்திகள் , நிலவுடமைச் சூழல் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய அளவிற்கு நிலவுகிறது. என்றெல்லாம் கூறி மூடிமறைக்கின்றனர். அவர்கள் ஏற்படுத்தும் அனைத்துக் குழப்பங்களையும் , ஒரேயயாரு மணியான வசனத்தின் மூலம் இத்திரைப்படம் தெளிவு படுத்தி நாட்டில் ஒட்டுமொத்தத்திலும் நிலவுவது முதலாளித்துவச் சூழலே என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

விற்கத் தெரிந்தவனே வாழத் தெரிந்தவன்

தாடியுடன் சாலையோரத்தில் அமர்ந்து பொருள் விற்கும் கண் தெரியாத பெரியவர் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டு எந்தக் கடையிலும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாமல் அவரிடம் வந்து சோர்ந்து நிற்கும் படத்தின் கதாநாயகன் மற்றும் நாயகியிடம் கூறுவார் விற்கத் தெரிந்தவன் தான் வாழத் தெரிந்தவன் என்று. ஆம் தன்னிடமுள்ள எதையயல்லாம் சந்தைச் சரக்காக்கி விற்க முடியுமோ அதையயல்லாம் விலையாக்க முடிந்தவனே இச்சமூக அமைப்பில் வாழ முடிந்தவன். ஏனெனில் நிலவுடைமைச் சமூகச் சூழலின் உழைப்பாளியான பண்ணையடிமை தன் உழைப்பை அது விலைபோகுமிடத்தில் விற்க முடியாது. அது சமூகக் கட்டுப்பாடு; இப்படத்தில் காட்டப்படுவது போல் கெட்ட பெயர் சுமத்தி வேலை வாய்ப்பைப் பறிப்பதல்ல. இதுதான் மையமானது என்று ஆகிவிட்ட இன்றைய சூழல் அப்பட்டமான முதலாளித்துவச் சூழலாக இல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?


-ஆனந்தன்