கொள்கைக்கு முரசடித்த திராவிட இயக்கக் கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள். பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினமாக இலக்கிய வாழ்வைத் துவக்கியவர் பாவேந்தர் அவர்கள்.
இவரிடத்தில்தான் சொற்கள் சோம்பல் முறித்துக் கொண்டன.
இவர் படைத்த பெண்களின் வளையல் கைகளில் வாள் மின்னியது. சித்திரக் கண்களில் சினம் கனன்றது.
பாரதிதாசனின் வாள் வார்த்தைகளின்அணிவகுப்பில் வைக்கப்பட்ட ஒவ்வொரு முற்றுப் புள்ளிக்குக் கீழும் இந்தச் சமூகத்தின் இழிவு புதைக்கப்பட்டது.
அவர் எழுதுகோல் குனியும் போதெல்லாம் தமிழும், தமிழ் இனமும் நிமிர்ந்தன.
“பாரதிதாசன்” என்னும் பெயர், ஒவ்வாரு தமிழனின் நாக்கிலும் பச்சை குத்தப்பட்டிருக்கிற ஒரு பெயர்ச் சொல்.
புரட்சிக் கவிஞரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். கனக சுப்புரத்தினம் என்னும் தன் பெயரை அவர் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். அதற்குக் காரணம் என்ன என்பது நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.
பாவேந்தர் அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் கவிதை எழுதி இதழ்களில் வெளியிட அரசு அலுவல் விதிகள் அன்றைக்கு இடந்தரவில்லை.
மேலும் தொடக்க காலத்தில் அவர் எழுதியவை எல்லாம் காந்தீய ஆதரவுப் பாடல்களாக இருந்தன. இதனை நினைத்துக் கவிஞர் தனது சொந்தப் பெயரை மறைக்க நினைத்தார். புனைப் பெயர் வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்.
மதுரையில் இருந்து வெளிவந்த “தேசோபகாரி” என்ற இதழுக்கு ஒரு பாடல் எழுதி, புதுவை கே.எஸ்.பாரதிதாசன் என்னும் பெயரில் அனுப்பி வைத்தார். கே.எஸ்.பாரதிதாசன் என்பது கனக சுப்புரத்தின பாரதிதாசன் என்று விரியும். மேலும் தேச சேவகன், ரூப்ளக்ஸ், தேச பக்தன், ஆனந்த போதினி, புதுவைக் கலைமகள், சுதேச மித்திரன், சுதந்திரன் போன்ற ஏடுகளுக்கும் பாரதிதாசன் என்னும் புனைப் பெயரிலேயே தம் படைப்புகளைப் பாவேந்தர் அனுப்பி வைத்தார்.
ஆங்கில அரசின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், தன் ஆசான் சுப்பிரமணிய பாரதியாரிடம் இருந்த ஈடுபாட்டின் காரணமாகவும் ஆசிரியர் கனக சுப்புரத்தினம் “பாரதிதாசன்” என்னும் பெயரை ஏற்றார்.
இது பற்றிப் பாரதிதாசன் அவர்களே குயில் இதழில் ஒரு முறை எழுதினார். “நான் பாரதிதாசன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டுள்ளேன். அதற்குக் காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம். சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது” என்று பெயர் மாற்றத்திற்குக் காரணம் கூறினார்.
ஆரிய ஆதிக்கத்தையும், பார்ப்பனப் புரட்டையும் துணிவாகப் புறக்கணிக்கும் மனப்பான்மை உள்ளவராகத்தான் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தார். தன் படைப்புகளில் கடுமையாக எதிர்த்தும் எழுதினார். இருந்தாலும் தன் பெயரை “பாரதிதாசன்” என்றே வைத்து இருநதார். பார்ப்பன சாதியினரான “பாரதி”யின் பெயர் தமக்கு ஒத்து வராது என்று அவர் விலக்கி விடாமல் இணைத்தே வைத்திருந்தார்.
திராவிட இயக்க முன்னணித் தோழர்கள் சிலருக்குப் புரட்சிக் கவிஞர் கொண்டிருந்த “பாரதிதாசன்” என்ற பெயர் ஏற்கத்தக்கதாக இல்லை. ஒரு சிலர் அவரிடமே பார்ப்பன இனத்தைச் சேர்ந்த பாரதிக்குத் தாசனாக விளங்கக் கூடாது என்று எடுத்துச் சொல்லி, பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. மேலும் அவர் சொன்னார் நான் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதில் பிழை ஒன்றும் இல்லை என்று கருதுகின்றேன். இவ்வாறான முடிவுக்கு வந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அதிலொரு காரணம் :
என் நூல்களை வெளியிட்டுப் பிழைக்க எண்ணியவர்கள் என் பெயர் பாரதிதாசன் என்பதற்காக அந்த எண்ணத்தைக் கை விட்டதுண்டா? அந்தச் சுவடிகளின் அட்டையில் பாரதிதாசன் என்ற பெயரைப் பெரிய எழுத்தால் அவர்கள் அச்சடிக்க மறுத்ததுண்டா? எத்தனையோ சீர்திருத்தக்காரர்கள் என் நூல்களை என் அனுமதிக்குக் காத்திருந்து பெற்று வெளியிட்டுள்ளார்கள் என்று தெரிவித்துத் தம் பெயரில் தவறில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
திராவிட இயக்கத் தோழர்களில் பாரதிதாசன் என்னும் பெயருக்கு எதிர்ப்புக் காட்டியவர்களில் முக்கியமானவர் அஞ்சாநெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரிசாமி ஆவார். அவர் கவிஞரைச் சந்தித்து “பாரதி ஒரு பார்ப்பான், மேலும் ‘தாசன்’ என்பது வடசொல். பாரதிதாசன் என்றால் பாரதிக்கு அடிமை என்றல்லவா பொருளாகி விடும்” என்று கேட்டார். அவர் இப்படிக் கேட்டவுடனே, “ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிமைதான்டா” என்று சொல்லி அழகிரிசாமியின் வாயடக்கினாராம்.
மதுரை வி.ஜி.சீனிவாசன் என்பவர் சில நண்பர்களோடு பாரதிதாசனைச் சந்தித்துப் பேசியிருந்த பொழுது அவர்களில் ஒருவர், “நீங்கள் ஏன் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டார். கவிஞர் உடனே சினந்து “உங்களுடைய வினாவின் நோக்கம் எனக்குப் புரிகிறது. இது குறும்புத்தனமான வினா. அய்யருக்கு நீங்கள் அடிமையா என்று கேட்பது போலத்தான். நான் என்றென்றும் உளமாரப் போற்றி வழிபடுகிறவர் இந்த அய்யர். அன்பும் பண்பும் தமிழுணர்வும் ஒருங்குசேர்ந்த பொன்னுருவம் அவர். பாரதியாருக்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை? இந்த வினாவினை யார் விடுத்தாலும் எனக்குக் கோபம் வரும். ஏனெனில் கழகத்தவர்களோ முன்னேற்றம் காணத்துடித்தவர்களோ யாராயிருந்தாலும் சரி, சீர்திருத்தம் என்னும் சொல்லை எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொள்ளத் தெரிந்து கொள்வதற்குப் பலநாளுக்கு முன்னதாகவே தமது வாழ்க்கையிலே சீர்திருத்தச் செயல்கள் பலவற்றைச் செய்து காட்டியவர் பாரதி” என்று தன் வழிகாட்டியைப் பற்றிப் பாரதிதாசன் பெருமைப்பட்டுள்ளார்.
நம்முடைய இன மானப் பேராசிரியர் (க.அன்பழகன்) அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் 1982 இல் உரையாற்றியபோது ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தினார்.
பேராசிரியர் ஒரு முறை பாவேந்தரைச் சந்தித்த போது, “பாரதியின் மேல் உங்களுக்குப் பற்று இருக்கலாம்; மதிப்பு இருக்கலாம். அதற்காக நீங்கள் பாரதிதாசன் என்னும் பெயரை வைத்துக் கொள்ள வேண்டுமா?” என்று வினாவினார். அதற்கு அவர் “பாரதியைப் பற்றி மற்றவர்கள் தவறாகக் கருதுவதைப் போலவே நீயும் கருதுகிறாயே! அவரோடு நான் 12 ஆண்டுகள் பழகி இருக்கிறேன். அவருடைய உள்ளத்தில் சாதி வேறுபாடு அறவே இல்லை. பிராமணர்களை அவர் துளிகூட மதிப்பது கிடையாது. மேலும் என்னுடைய கவிதைகளில் காணப்படுகிற முற்போக்குக் கருத்துகளுக்குப் பாரதியாரே காரணம் ஆவார்” என்று பதிலுரைத்தாராம்.
பொதுவாக பாவேந்தர் பாரதிதாசனிடம் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை மிகவும் அழுத்தமாகவே இருந்தது எனபதற்கு அவர் எழுதிய இந்க கவிதையே சான்றாக இருக்கிறது.
பார்ப்பான்பால் படியாதீர்
சொற்குக் கீழ்ப் படியாதீர்...
ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வம் மிக உள்ளவன் போல்!
நம்ப வேண்டாம்...
தமிழின்பேர் சொல்லிமிகு
தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்
தமிழழித்துத் தமிழர் தம்மைத்
தலைதூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான்
அமுதாகப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க
நம்பவேண்டாம்
தமிழர்கடன் பார்ப்பானைத்
தரைமட்டம் ஆக்குவதே...
இவ்வளவு எதிர்ப்புணர்ச்சியும் பாரதியாரை அணுகும் போது அடிபட்டுப் போகிறது. ஏனென்றால் இதில் சொல்லப்பட்டுள்ள பார்ப்பனர்க்கே உரிய தீய நோக்கங்களும் செயல்பாடுகளும் இல்லாமல் தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழ் மொழி ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காகத் தன் பணியை முழுமையாகச் செய்தவர் பாரதியார் என்பது பாரதிதாசன் எனும் பெயர் மாற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அதனால் தான் பாரதிதாசன் ஒருமுறை, இந்த நூற்றாண்டில் இரு பார்ப்பனர்கள் செந்தமிழ்ப் பற்றுடையவர்கள், “முந்து பாவலன் பாரதி மற்றவன் முத்தமிழ் வல்லவன் பரிதிமாற் கலைஞன்” என்று விதிவிலக்குப் பெறுவதற்கான காரணத்தைச் சுட்டிக்காட்டினார்.
கனக சுப்புரத்தினமாக இருந்த பாவேந்தர் - பாரதிதாசன் என்று பெயர் மாற்றம் கொண்டதற்குக் காரணம் குருட்டுத்தனமான குருபக்தி அல்ல. தன் குரு பாரதி மீதும், அவரது படைப்புகள் மீதும், பாரதி தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த கொள்கையின் மீதும் பாவேந்தருக்கு ஏற்பட்ட பற்றுதான் பாரதிதாசன் எனப் புனைப் பெயர் சூட்டிக்கொள்ளக் காரணம் எனத் தெரிகிறது.
- கம்பம் செல்வேந்திரன்
No comments:
Post a Comment