அரசியல்
வாயிலே
அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்;
கொப்பளித்துக்
கொப்பளித்து
வாயும் ஓயாமல்
அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்த்தேன்;
நீரே அழுக்கு! (சுப்பிரமணிய ராஜு)
அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்;
கொப்பளித்துக்
கொப்பளித்து
வாயும் ஓயாமல்
அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்த்தேன்;
நீரே அழுக்கு! (சுப்பிரமணிய ராஜு)
என்ன ஒரு புதுக் கவிதை தற்கால அரசியல் நிலைமை இதுதான்.
மனைவி, மக்கள், குடும்பம் என்று அன்றாடம் பாசத்தில் அலைக்கழிக்கப்படுபவர்கள் விரைவில் ஆசை வலையில் விழுந்து, தன் நிலை தாழ்ந்து, தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் இருந்து வெகுதூரம் விலகி,
காலநடையில் ஊழலின் உற்பத்தியாளர்களாக உருப்பெற்று விடுவார்கள் என்ற நியாயமான அச்சத்தினால்தான், நெருங்கிய உறவுகளை நெஞ்சத்தில் வளர்த்துக் கொள்ளாதவர்கள் மட்டுமே 'வையகத் தலைமை' கொள்ள வேண்டும் என்று இயேசு பிறப்பதற்கு முன்பே விதியன்று செய்தார் பிளேட்டோ.
தத்துவம் என்பது உண்மையின் உருவம். உண்மையைத் தேடும் யாரும் பொய்யின் நிழலில் இளைப்பாற விரும்ப மாட்டார்கள். அதனால்தான், அதிகார நாற்காலியில் தத்துவஞானிகள் அமரவேண்டும் என்று ஆசைப்பட்டார் அந்த ஆதிச் சிந்தனையாளர். மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் வல்லமை அன்று முதல் இன்று வரை அரசியலுக்கே உண்டு. அரசியல் சார்ந்த ஆட்சிக் கலையைத் 'தலைமை அறிவியல்' (Master Science) என்று அரிஸ்டாட்டில் வர்ணித்ததில் ஆழ்ந்த அர்த்தம் உண்டு. ஆனால், இன்று அனைத்தும் தலைகீழாக மாறித் தரம் தாழ்ந்துவிட்டன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமாக நேற்றிருந்த அரசியல் உலகம், இன்று சகல விதமான அயோக்கியர்களுக்கும் முதல் சரணாலயமாகிவிட்டது.
சந்திரமதி இல்லாமல் அரிச்சந்திரன் நாடகம் இல்லை. கள்ள மனிதர்கள் இல்லாமல் இன்று எந்த அரசியல் கட்சி யும் இல்லை.
சமூகத்தில் படிந்துவிட்ட சகல அழுக்குகளையும் அகற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே இன்று எளிதில் சுத்தப்படுத்த முடியாதபடி அடர்த்தியாக அழுக்கேறிக் கிடக்கிறது. துர்நாற்றம் வீசும் இந்த அரசியல் குட்டையைத் தூர்வார யாரும் இங்கே தயாராக இல்லை. அடித்தட்டு மக்களுக்கு இந்த நாற்றம் பழகிவிட்டது. மேல்தட்டு வர்க்கம் மூக்கை மூடியபடி முகத்தைத் திருப்பிக்கொண்டது. யார்தான் இந்த நாட்டு மக்களின் நிலை குறித்து யோசிப்பது? புழுத்துக்கிடக்கும் பொதுவாழ்வைப் புனிதமாக்க யாராவது சிலர் முன்வந்து சிலுவை சுமக்கத்தான் வேண்டும்.
ஒரேயரு இயேசு புறப் பட்டால், அதிகாரபீடம் எளி தாக அவரைச் சிலுவையில் அறைந்துவிடும். ஆயிரக்கணக்கில் சிலுவை சுமக்க வாக் காளர்கள் முன்வந்தால்... தவறு செய்பவர்கள் தலையில் சிரமமின்றி முள்மகுடம் சூட்டிவிடலாம். 'எது நடந்தால் நமக்கென்ன?' என்றா பகத்சிங்கின் பரிவாரம் பார்த்துக் கொண்டிருந்தது? 'எரிகிற வீட்டில் எடுத்த வரை ஆதாயம்...' என்ற நோக்கிலா காந்தியப்படை அன்று அகிம்சைப் போர் நடத்தியது? சமூகப் பொறுப்பு உணர்வு உள்ள வர்கள் இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருத்தலாகாது.
அடிமை இந்தியாவில்கூட ஆயுதம் தேவைப்பட்டிருக் கலாம். சுதந்திர இந்தியாவில் அறவழி மூலம் அறப்போர் நடத்தியே ஆயிரம் மாற்றங்களை நாம் நினைத்தால் அரங்கேற்ற முடியும். முதல் மாற்றம் நம் விதியெழுதும் அரசியல் தளத்தில் நிகழ்வதற்கு வழிவகுக்க வேண்டும். 'தீமையின் வெற்றிக்குத் தேவையானது நல்லவர்கள் எதுவும் செய்யாதிருப்பதே' என்ற ஆங்கில அறிஞர் எட்மண்ட் பர்க் வாசகத்தை நாம் நெஞ்சில் நிறுத்தவேண்டும்.
அறத்தையும், அரசியலையும் நம் முன்னோர் கள் பிரித்துப் பார்த்ததில்லை. அரசியலறம் கூறுவதுதான் திருக்குறளின் பொருட்பால். 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்கிறது சிலப்பதிகாரம். எந்த மனிதனும் ஆட்சித் தலைமையைத் தகுதியின்றி அலங்கரிக்க நம் மூதாதையர்கள் அனுமதித்ததில்லை. மகாபாரதம் சாந்தி பர்வத்தில் ஓர் ஆழ்ந்த அரசியல் செய்தி உண்டு. 'ஆள்வதற்காக அரசுக் கட்டிலில் அமர்ந் தவன் ஒரு தாயைப் போல் இருக்கவேண்டும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குரிய தர்மமே அரச தர்மம். தனக்கு விருப்பமான உணவைவிட, கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான உணவையே ஒரு தாய் ஏற்பாள். ஆட்சியாளனும் தனக்கு விருப்பமான செயல்களைச் செய்யாமல், மக்கள் நலனுக்கு உரிய காரியங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்' என்று அம்புப் படுக்கையில் மரணத்தின் மடியில் சாய்ந்து கிடக்கும் பீஷ்மர், தருமனுக்கு அரசியலறம் உரைக்கிறார்.
'இந்திரன் வேள்விப் பொருளைப் பெற்று உலகைக் காப்பது போல், ஆள்பவன் மக்களிடமிருந்து வரியைப் பெற்று அவர்களை வாழச் செய்ய வேண்டும். உயிர் வளர்க்கும் காற்றை வாயு வழங்குவது போல், ஆட்சித் தலைவன் தீமையை அழித்து நன்மையை வழங்க வேண்டும். இருளகற்றி ஆதவன் ஒளியைப் பரப்புவது போல், அதிகாரம் செய்பவன் மறமகற்றி, அறத்தை நிலைநிறுத்தவேண்டும். காவலன் காலனைப் போல் தீயவரைத் தண்டித்து, நெருப்பைப் போல் தூய்மை காத்து, மழையைப் போல் மண்ணை வளப்படுத்தி, நிலவைப்போல் மக்களை மகிழச் செய்ய வேண்டும்' என்கி றது சுக்கிர நீதி.
சாணக்யன் தனது அர்த்தசாஸ்திரத்தின் ஆறாம் அத்தியாயத்தில், 'மக்களை ஆள்பவன் முதலில் தன் மனத்தை ஆள வேண்டும். காமம் என்னும் உட்பகையை வெல்ல அவன் புலனடக்கம் பழக வேண்டும்' என்கிறான். 'கனவில் கூட காமவசப்படல் ஆகாது. ஆணவம், பொய், தீமை தரும் சூழ்ச்சிகளை விட்டு விலக வேண்டும். அறம், பொருள், இன்பம் மூன்றையும் சமநிலையில் அனுபவிக்க வேண்டும்' என்று அரசு நடத்துவோர்க்கு அவன் அறிவுறுத்துகிறான். திருக்குறளும், சிலம்பும், பாரதமும், சுக்கிரநீதியும், அர்த்தசாஸ்திரமும் காட்டிய வழியிலா நம் அரசியல்வாதிகள் நடக்கிறார்கள்? அப்படி நடக்கவேண்டும் என்று மக்களே இன்று எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியூட்டும் அவலம். ஊழல் பேர்வழிகள் அதிகாரத்தில் இருப்பதுதான் நம் சொந்த நலனுக்கு உகந்தது என்று ஒரு சமூகம் நினைக்கத் தொடங்கிவிட்டால்... அதன் சரிவை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?
மறைந்த சட்டமேதை நானி பல்கிவாலா, 'இந்தியாவின் இன்றைய தேவை அளவற்ற சுதந்திரமில்லை; அதிகமான ஒழுக்கம்' என்றார். கொசுக்களின் கூடாரமாக, நோய்களின் இருப்பிடமாக, சதுப்புநிலக் காடுகளின் உறைவிடமாக இருந்த சிங்கப்பூரைத் தென்கிழக்கு ஆசியாவின் சொர்க்கமாக லீ குவான் யூ மாற்ற முடிந்ததற்கு அடித்தளம், அவர் கையாண்ட கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமும், கட்டமைக்கப்பட்ட மானுட ஒழுக்கமும்தான். நம் நாட்டில் தவறான சுதந்திரத்துக்கு எல்லையில்லை; ஒழுங்கீனத்துக்கோ அளவேயில்லை. 'நாடாண்ட அரசர்கள் சுகங்களைத் துறந்து, காடேகி அறம் வளர்த்தார்கள். சொந்த சுகங்களை மறுதலித்த அந்தப் பண்பு, இன்று ஏன் அரசியல் உலகில் அற்றுப்போனது?' என்று மனம் நொந்த பல்கிவாலா, 'நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் முதல் தரமானது. ஆனால், அரசியல்வாதிகள் மூன்றாம் தரமானவர்கள்!' என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் சுதந்திரம் கண் விழித்து 62 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று உலகிலேயே அதிகமான ஏழைகள் உள்ள நாடு நம் இந்தியாதான். நாற்பது கோடி மக்கள் வறுமை இருட்டில் வாடுகின்றனர். இவர்களில் 75 சதவிகிதம் மக்கள் கிராமங்களில் வாழ்பவர்கள். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேர் கல்வி வெளிச்சத்தை இன்று வரை காணவில்லை. உலகிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக இருப்பது இந்தப் புண்ணிய பூமியில்தான். மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் உலகின் 196 நாடுகளில் நமக்கு 127-வது இடம். இந்த லட்சணத்தில் நாம் விரைவில் வல்லரசாகப் போவதாக நம் அதிகார வர்க்கம் வாய்ஜாலம் காட்டுகிறது. வெறும் வார்த்தைகள், வரலாறு படைப்பதில்லை.
தங்கள் சொந்த சுகவாழ்வுக்காக மக்களைச் சுரண்டி, சுரண்டப்பட்டவர் களையே தொடர்ந்து தண்டிக்கும் நம் அரசியல்வாதிகள் எதற்காகவும் வெட்கப்படுவதில்லை. 'எந்த நெறிமுறைக்கு உட்பட்ட சட்டத்தையும் அரசியல் அரங்கில் நான் ஏற்பதில்லை. அரசியல் ஒரு விளையாட்டு. அதில் எல்லா விதமான தந்திரங்களும் அங்கீகரிக்கப்படும். அரசியல் விளையாட்டில் ஈடுபட்டவர்களின் வசதிக்கேற்ப சட்டங்கள் வளைக்கப்படும்!' என்றான் ஹிட்லர். அந்த ஹிட்லரின் வழித்தோன்றல்களுக்குத்தான் நாம் இங்கே வழிபாடு நடத்தி வருகிறோம்.
நேர்மையின் நிறம் மாறாமல், நெறிசார்ந்து அரசியல் நடத்த 110 கோடி மக்களின் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆறரை கோடித் தமிழரில் 234 சட்டமன்ற உறுப்பினர்களும் நமக்குக் கிடைக்கவில்லை என்றால், எங்கே போகிறோம் நாம்?
மேற்க்கொண்டு தேடுவோம்...... எங்கே போகிறோம் நாம்?
No comments:
Post a Comment