குழந்தைகள் எப்போதுமே குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெரியவர்களாக ஆக எப்போதும் விரும்புவதில்லை. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பதைப்போல, குழந்தைகள் தாங்கள் விரும்பும்படி இருக்க விரும்பினாலும் நாம் அவர்களை அனுமதிப்பதில்லை. நாம் விரும்புகிற மாதிரியோ அல்லது நம்மை மாதிரியே அவர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதிலும் சின்ன வயதிலேயே குழந்தைகள் பெரியவர்களைப்போல ‘சமர்த்தாக’ (நாம் சமர்த்தாக இருக்கிறோமா அல்லது பலநேரங்களில் முட்டாள்களாகவே இருக்கிறோம் என்பது யோசிக்கத்தக்கது) இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சினிமாவில் வரும் குழந்தைகளைப் போல நமது பிள்ளைகளும், வயசுக்கு மீறிய விஷயங்களைப் பேசினால் 'அய்யோ... எம்புள்ள எப்புடி பேசுது பாரேன்...' என்று மற்றவர்களிடம் காட்டிக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறோம். கள்ளங்கபடமற்ற குழந்தைமையை கொன்று சகல அழுக்குகளும் நிறைந்த பெரியவர்களாக அவர்களை மாற்றுவதில் அப்படி என்னதான் சந்தோஷமோ தெரியவில்லை.
ஆனால் இந்த கண்ணாமூச்சி விளையாட்டிலிருந்து குழந்தைகள் எப்போதும் எப்படியாவது தப்பித்துவிடுகிறார்கள். உனக்கும் பெப்பே... உங்கப்பனுக்கும் பெப்பே. . என்று அழகுகாட்டிவிட்டு ஒப்பற்ற தங்களின் மாய உலகத்திற்குள் நுழைந்துவிடுகிறார்கள். அந்த உலகில் போட்டி, பொறாமையில்லை; சூதுவாது இல்லை; வஞ்சகம் இல்லை. அடுத்தவனுடையதை தட்டிப் பறிக்கும் ஆவேசமில்லை. தனக்கு தனக்கு என்று ஒதுக்கி, பதுக்கி வைத்துக்கொள்ளும் களவாணித்தனம் இல்லை. அங்கு எல்லாமே திறந்த புத்தகம்தான். எந்தப் பக்கத்தையும் எவரும் வாசிக்கலாம்... எந்தப் பக்கத்திலும் எவரும் எழுதலாம். அவர்களின் விரிந்து கிடக்கும் வானத்தில் கொட்டிக்கிடக்கும் அழகிய வண்ணங்களை எவரும் எடுத்து பூசிக்கொள்ளலாம்; எவருக்கும் பூசிவிடலாம்; எல்லாமும் வெளிப்படையானது இந்த குழந்தைகளின் உலகத்தில். இங்கு மறைப்பதற்கென்றோ ஒளிப்பதற்கென்றோ எதுவுமில்லை.
ஆனால் இது உன்னுடையது, யாருக்கும் காட்டாதே... கொடுக்காதே. . என்று 'புத்திமதி' சொல்லிதான் நாம் நமது குழந்தைகளை வளர்த்தாலும், அவர்கள் தங்கள் போக்கிலேயேதான் இருப்பார்கள் என்பதை அழகாக சொல்கிறது 'அன்பு' (LOVE) என்ற குறும்படம். சசிக்குமார் என்பவர் இயக்கியுள்ள இப்படம் நான்கு நிமிடங்களே ஓடுகிறது. . YOU TUBE இணையதளத்தில் (http://www.youtube.com/watch?v=CGMY6BTQ2ys&feature=email) காணக்கிடைக்கிற இப்படத்தை இதுவரை பல்லாயிரம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விடுதி ஒன்றில் கதை நடக்கிறது. அங்குள்ள சிறுமி ஒருத்திக்கு ஒரு மிட்டாய் ( சாக்லெட்) கிடைக்கிறது. விடுதியின் காவலாளி, 'ஒரு சாக்லெட்தானே இருக்கிறது. உள்ளே போனால் எல்லாக் குழந்தைகளும் கேட்கும். அதனால் மறைவாக பின்புறமாக போய் சாப்பிடு' என்று அக்கறையுடனும், ஒரு நல்ல வழிகாட்டுதலை வழங்குகிறோம் என்ற பெருமிதத்துடனும்(!)... 'புத்திமதி' கூறுகிறார். சரி என்று அந்த சிறுமியும் பின்புறமாக செல்லுகிறாள். சற்று நேரத்தில் ஒவ்வொரு குழந்தையாக அங்கு சென்றுவிடுகிறார்கள். வகுப்பறை காலியாகயிருப்பதை பார்க்கும் ஆசிரியை காவலாளியிடம் விசாரிக்க அவரும் நடந்ததை சொல்கிறார். இருவரும் அங்கு சென்று பார்க்கின்றனர்.
தனக்கு கிடைத்த சாக்லெட்டை சூரியனுக்கு காட்டியபடி அந்த சிறுமி நிற்கிறாள். அவள் விரும்பியபடியே சூரியச் சூட்டில் சாக்லெட் உருகுகிறது. எல்லாக் குழந்தைகளும் அதை சுவைத்து சாப்பிடுகிறார்கள். ஆசிரியையும் காவலாளியும் தங்கள் ‘வழிகாட்டுதலை’ உணர்ந்தபடி சிரிப்பதுடன் படம் முடிவடைகிறது. படமென்னவோ குறும்படம்தான்... ஆனால் அது சொல்வதோ பேருண்மையை. அது குழந்தைகளை... குழந்தைகளாகவே இருக்கவிடுங்கள் என்பதுதான்
- எஸ்.கருணா ( skaruna63@gmail.com)
No comments:
Post a Comment