Sunday, June 13, 2010

மலிவு விலையில் மனித உயிர்கள், மரண வியாபாரத்தில் இந்தியா!

"முதலாளி தன் லாபத்தில் தொழிலாளிக்குப் பங்கு கொடுக்கத் தேவையில்லை, ஆனால் தொழிலாளி எப்பொழுதும் தன்னை தன்னுள் இழந்துகொண்டிருக்கிறான்" என்றார் கார்ல் மார்க்ஸ். ஜனநாயக ஆட்சி என்ற போர்வையில் முதலாலிகளுக்காக ஆட்சி நடந்துகொண்டிருக்கும் இந்த தேசத்தில், ஏழைகளின் நிலை மார்க்ஸ் கண்ட தொழிலாளர் வர்க்கங்களைவிட மோசமாக இருக்கிறது. இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது, ஆனால் இங்குள்ள ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக்கப்படுகிறார்கள். இந்த நாட்டின் வளர்ச்சியில் தன்னையிழக்கும் ஏழைகள், தங்கள் நாட்டின் வளர்ச்சியால் தாங்கள் உயரவில்லை என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதுதான் சாபக்கேடு. மார்க்ஸ் சொன்னதுபோல் "தொழிலாளர்கள் புரட்சியாளனாக இருக்க வேண்டும், இல்லையேல் இல்லாமல் போகவேண்டும்".
தன் நாட்டு பத்திரிக்கையாளன் தாலிபன்களால் கடத்தப்பட்டதற்காக பல மில்லியன் டாலர் செலவுசெய்கிறது அமெரிக்க அரசு. இந்தியாவோ, அமெரிக்கக் கம்பெனியால் கொல்ல‌ப்பட்ட 15 ஆயிரம் மனித உயிர்களுக்காக நீதியையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. போபாலில் 1984, டிசம்பர் 2 நள்ளிரவில் யூனியன் கார்பைடு இன்டியா லிமிட்ட‌ட் கம்பெனியிலிருந்து கசிந்த மீத்தைல் ஐசோ சயனேட் நச்சினால் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 15 ஆயிரம் உயிர்கள் காற்றில் கரைந்து போயின. இந்த வழக்கில் 26 ஆண்டிற்குப் பிறகு தீர்ப்பளித்த போபால் நீதிமன்றம் எட்டு நபர்களுக்கு மட்டுமே இரண்டு ஆண்டு சிறைதண்டனை கொடுத்துவிட்டு, அவர்களையும் அன்று மாலையே பிணையில் வெளியிட்டுவிட்ட அநீதி உலகில் வேறு எங்கும் நிகழாத மாபெரும் மனித உரிமை மீறல். இதுபோன்ற பேரழிவிற்குப் பிறகும், மேலைநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைக்க மத்திய அரசு தொடர்ந்து மானியத்தோடு அனுமதியளித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்திய அரசு ஏழை எளிய மக்களைத் தன்னுடைய குடிமக்களாக ஒருபோதும் கருதியது இல்லை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் வேறேது?
உணவு, உறைவிடம், உடை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ வசதி என மனிதனுக்குரிய எந்த அடிப்படைத் தேவைகளையும் பூர்த்திசெய்ய விரும்பாத நாடாக இந்தியா இன்றும் இருந்துவருகிறது. சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனபின்பும் கூட குடிநீருக்காகவும், மருத்துவமனைக்காகவும் இந்திய மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. இந் நிலையில் அணுஆயுத வல்ல‌ரசு என்று தன்னை வெட்கப்படாமல் அறிவித்துக்கொள்கிறது இந்தியா. ஏழை, எளிய மக்களை ஒரு பொருளாகக் காட்டி உலக வங்கியில் குறைந்த வட்டியில் அதிக அளவு கடன் பெற்று, இந்த நாட்டின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முதலாளிகளுக்காக ஏற்படுத்திக் கொடுக்கிறதே தவிர, ஏழ்மையைப் போக்க, பட்டினி சாவைக் குறைக்க எந்த நடவடிக்கையும் தீவிரமாக இங்கு மேற்கொள்ளவில்லை.
கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு விமான விபத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 158 பயணிகள் உயிரிழந்தார்கள். விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 72 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு வழங்கப்படும் என சம்மந்தப்பட்ட‌ துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதே மாநிலத்தில் அடுத்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு பேருந்தில் பயணித்த 30 பயணிக‌ள் கொல்ல‌ப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் மரணத்திற்கு மாநில அரசு ரூ 2 லட்சம் மட்டுமே இழப்பீடாக அறிவித்தது. இதாவது பரவாயில்லை சாதிய வன்கொடுமையில் உயிரிழந்தவர்களுக்கு வெறும் 1.5 லட்சம் மட்டுமே இழப்பீடு கொடுக்கப்படுகிறது. அதுவும் அந்தப் படுகொலைக்கு முறையாக வழக்கு பதிவு செய்தபின்புதான் இந்த இழப்பீட்டைக் கூட கொடுக்க அரசு சம்மதிக்கிறது. என்ன ஓரு பாகுபாடு பாருங்கள்! தன் குடிமக்களின் மரணத்தில் கூட ஏழை, பணக்காரன் என தரம் பிரித்து இழப்பீடு வழங்கும் இந்த அரசை மக்கள் அரசு எனறால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? மக்கள் அனைவரும் சமம், அவர்களுடைய ஒவ்வொரு வாக்கும் சம மதிப்புடையது என்ற மக்களாட்சி தத்துவத்தையே மழுங்கடிக்கும் இந்த தேசத்தின் அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்கள், பெரு முதலாளிகளைவிடக் கொடுமையானவர்கள்.
இயற்கை பேரிடர்களான வெள்ளம், புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றில் உயிரிழந்தவர்கள் மற்றும் உடமையிழந்தவர்களுக்கு எந்த ஒரு குறிபிட்ட தொகையையுமே இழப்பீடாக "பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005" இல் மத்திய அரசு நிர்ண‌யிக்கவில்லை. மாறாக உடனடி நிவாரண‌மாக சில ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத ஆளும் கட்சிக்காரர்களுக்கு மாநில அரசு கொடுத்தபின்பு, பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு ஆய்வு செய்தபின்பே மத்திய அரசு நிவாரண‌த் தொகை அனுப்புகிறது. அப்படி தரும் நிவாரண‌ம் கூட முழுமையாக மக்களுக்குக் கிடைப்பதில்லை. 2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆண்டுகள் முடிந்தபின்பும் வீடுகள் கட்டித்தரப்படாத அவல நிலை நீடிப்பதைக் காணமுடிகிறது.
நிவாரண‌ம் வழங்குவதில் தமிழக அரசு யாருக்கும் குறைவைப்பதில்லை. எல்.சி.டி டிவி வைத்திருப்பவனுக்குக் கூட இலவச டிவி கொடுப்பதுபோல், வெள்ளம் வந்துவிட்டால் மூன்றாவது மாடியில் குடியிருப்போர்களுக்கும் கூட இரண்டாயிரம் ரூபாய் நிவாரண‌த் தொகை கிடைக்கிறது. வாக்கிற்கு ஐநூறு என்ற கணக்கு போலும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரண‌ம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது, உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவது போலல்லவா இருக்கிறது? அதுமட்டுமல்லாமல் குடிசையை இழந்து தவிப்பவன் இரண்டாயிரம் ரூபாயில் மச்சிவீடா கட்டமுடியும்?சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டிசேலை தருவ‌தாகச் சொல்லி பலபேர் நெரிசலில் சிக்கி இறந்த கதையும் உண்டு.
இவைமட்டுமின்றி மரணங்கள் பல்வேறுவகையில் நம் மக்களைத் தழுவுகிறது. சிறைச்சாலைகள் மற்றும் போலிஸ் கஸ்ட‌டியில் ஆண்டிற்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், சாலை விபத்தில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பதாக மனித உரிமை ஆர்வல‌ர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் விபத்தில் ஆண்டிற்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட‌ மானுட உயிர்கள் சாலையில் மடிந்துபோகின்றன. இதைத்தவிர‌ இரயில் விபத்து, விமான விபத்து, குடும்ப வன்முறை, சாதி மத மோதல், கடத்தல் மற்றும் காணாமல் போதல், எல்லைப் பிரச்சனை, வெடிகுண்டு, இயற்கை மற்றும் செயற்கை பேரிடர், காலரா, காசநோய், பட்டினிச் சாவு, சிசுக் கொலை, பிர‌சவ இறப்பு, உயிர்க்கொல்லி மற்றும் தொற்று நோய்கள் என ஆண்டிற்கு பல லட்சம் உயிர்களை நம் அரசு கவன‌க்குறைவு மற்றும் முறையற்ற நிர்வாகத்தால் பலிகொடுக்கிறது. வன விலங்குகளைக் கூட மின்வேலி அமைத்துப் பாதுகாக்கும் அரசு, மனிதர்களை மரணத்திலிருந்து பாதுகாக்க ஏன் தயங்குகிறது? முறையான போக்குவரத்து விதி, சாலை பராமரிப்பு, வாகன தணிக்கை, கட்டாய தலைக்கவசம், சாலையோர மருத்துவமனை மற்றும் சாலை விபத்துகள் பற்றிய விழிப்புண‌ர்வு போன்ற செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டாலே ஆண்டிற்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களையாவது சாலை விபத்திலிருந்து காக்க முடியும்.
இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் ஏழை எளிய மக்களின் சமூக பாதுகாப்பின்மை மட்டுமல்ல, சாதி மாதங்கள் கடந்து ஏழை எளியமக்கள் ஒன்று படாதது, மேலும் நாட்டின் 60 சதவிகித வருமானத்தை ஈட்டித்தரும் சுமார் 93 சதமுள்ள முறைசார தொழிலார்களின் நலன் புறக்கணிப்பு, அரசியல் மற்றும் அதிகார வர்க்க தலையீடு, முறையற்ற நிதி மற்றும் நீதி நிர்வாகம், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை, சாதி மத மற்றும் தீண்டாமை பிரச்சனை என காரணம் நீண்டுகொன்டே போகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் போண்ற வளர்ந்த நாடுகளில் ஏழை மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு இலவச ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா குறைந்த அளவு சமூக பாதுகாப்பையாவது தன் குடிமக்களுக்கு கொடுக்க முன்வரவேண்டும். ஒரு முழுநேர அரசு ஊழியருக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் 12 ஆயிரம் கொடுக்கும் அரசு, வயதுவந்தோர்க்கு ஓய்வூதியமாக மாதம் ஐநூறு மட்டுமே அளிப்பது எந்தவிதத்தில் நியாயம்?
இந்திய ஜனநாயகம் சாதி மத சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதால், ஏழைகள் மீண்டும் மீண்டும் கூறுபோடப்பட்டு முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமே பாடுபடும்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் பணிக்கப்படுகிறார்கள். "சமூக விடுதலையை நீங்கள் வென்றெடுக்காத வரையில், சட்டம் அளித்த விடுதலை உங்களுக்குப் பயன்படப் போவதில்லை" என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனை இன்றும் நமக்குப் பொருந்துவதாக உள்ளது. சட்ட திட்டங்களால் உயராத நம் வாழ்க்கை, சகோதரத்துவத்தால் உயரும் என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்? கைவிரலில் மை வைக்க காத்துக் கிடக்கும் கூட்டமாக நாம் இருக்கும் வரை, முதலாளிகளை மட்டுமே ஈன்றெடுக்கும் இந்திய ஜனநாயகம் என்பதை நம் புரிந்துகொண்டால் ம்ட்டுமே மக்களுக்கு சேவைசெய்யும் மக்களாட்சி மலரும். இல்லையேல் இந்திய மக்களாட்சி எப்பொழுதும் போல் முதலாளிகளாலே வழிநடத்தப்படும்.


நன்றி : கீற்று 

No comments:

Post a Comment