Wednesday, June 23, 2010

Google முதற்றே உலகு


கேட்டது கொடுக்கும் மணிமேகலையின் அட்சயபாத்திரத்தைப் போன்றதுதான் இந்த Google-ம். எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து தகவல்களையும் கேட்ட நேரத்தில், கேட்ட மாத்திரத்தில், கேட்டவிதத்தில் அள்ளித்தருவது Google-தான். வெறும் தேடுபொறியாக அறிமுகமான Google இப்பொழுது அதனையும் தாண்டி பல சேவைகளை உயர்தரத்துடன் இலவசமாக வழங்கி வருகிறது. அவற்றுள் பலவற்றைப் பற்றி அறிமுகமிருந்தாலும், சில இன்னும் பலரால் அறியப்படாமலேயே இருப்பதினால் அவற்றைப்பற்றியதான ஒரு சிறு அறிமுகம்.
Google Docs
Microsoft நிறுவனத்திற்கு இயங்குதளத்தைக்காட்டிலும் அதிக வருமானத்தை ஈட்டித்தருவது MS Office தான் என்றால் அதுமிகையாகாது.அத்தகைய Office Application தான் இந்த Google Docs. இதில் Word, Powerpoint,Excel என அனைத்தும் உள்ளன. எந்தவொரு கோப்பையும் உடனடியாக PDF வடிவத்தில் மாற்றிக்கொள்ளலாம். MS Office நமது கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நேரடியாக இணையத்திலேயே இத்தகைய கோப்புகளை உருவாக்கலாம். இதனால் கோப்புகளை எந்த இடத்திலும் எளிதாக பெற முடிகிறது. ஒரு கோப்பினுள் பலரும் கூட ஒரே நேரத்தில் பணியாற்றவும், பயன்படுத்தவும், மாற்றவும் முடியும். மேலும் விவரங்களுக்கு www.docs.google.com
Google sites
இணையதளங்களை காசுகொடுத்து உருவாக்க வேண்டிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. மேலும் இணையதளங்களை உருவாக்குவதற்கென பிரத்யேக அறிவும் இனி தேவையில்லை.மிக எளிதாக Google sites-ல் நம் விருப்பத்திற்கு ஏற்ப இணையதளங்களை உருவாக்கலாம். வலைப்பூக்கள் கூட இலவசம் என்றாலும் அதில் நாம் கோப்புகளை பதிவேற்ற முடியாது. ஆனால், Google sites-ல் எத்தகைய கோப்புகளையும் பதிவேற்ற முடியும். பார்வையாளர்களை கட்டுப்படுத்த முடியும். அவர்களின் கருத்துக்களை/விமர்சனங்களை பெறமுடியும். ஆரம்பகட்ட பயனாளர்கள், இத்தகைய இலவச வசதியினை பயன்படுத்திகொள்வது சிறந்தது. பொதுவாக Google sites, கீழ்க்கண்டவற்றுக்கு மிகவும் உகந்தது.
  1. தனிப்பட்ட பயன்பாடு (Personal Use)
  2. திட்ட மேலாண்மை பயன்பாடு (Project Use)
  3. நிறுவன உள் இணையம் (Company Intranet)
  4. சமூக வளர்ச்சி அமைப்பு (Community Development)
மேலும் விவரங்களுக்கு www.sites.google.com
Google Calendar
இன்றைய வேக உலகில், எதனையும் திட்டமிட்டு நடத்திச்சென்றாலும் கூட, தவறுகள் சில ஏற்படத்தான் செய்கின்றன. எல்லாவற்றையும் நினைவில்கொள்வது என்பதும் காரிய சாத்தியமில்லாததும் கூட. பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று திட்டு வாங்கியது கூட உண்டு. ஆனால், Google Calendar பயன்படுத்துவதால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அனைத்து நிகழ்ச்சிகளையும் இதில் பதிவு செய்துவிட்டால் போது. உரிய நேரத்தில், SMS, Pop-up,Email என நமது வசதிக்கேற்ப தகவலை அளித்துவிடும். மேலும் விவரங்களுக்கு www.calendar.google.com
Google Picasa
நமது இனிய தருணங்களை என்றும் நினைவுபடுத்தும் அதிசயம் தான் புகைப்படங்கள். நாம் ரசித்த காட்சிகளை மீண்டும் நம்முன்னே கொணடுவரும் இத்தகைய புகைப்படங்களை பத்திரமாக சேமித்துவைக்க சுமார் 1.5 GB இடம் Google-ஆல் இலவசமாக தரப்படுகிறது. விருப்பமிருப்பின், இத்தகைய புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். என் இணையதளத்தின் இடத்தை சேமிக்க நான் பயன்படுத்துவது  Google Picaso தான். கட்டுரைகளுக்கு தேவைப்படும் புகைப்படங்களை இதில் ஏற்றிவிட்டு, பின் இணைப்பை மட்டும் இணையபக்கத்தில் தந்துவிடுவதினால் ஏராளமான இடம் சேமிக்கப்படுகிறது. புகைப்படங்களை வகைவகையாக பிரித்துவைக்கவும், தேவையானபொழுது பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.
மேலும் விவரங்களுக்கு http://picasaweb.google.co.in/

Tuesday, June 15, 2010

இதயம் விற்ற காசுகள்


இம்மனித வாழ்க்கையின் மிகக்கொடுமையான காலம் சொந்த மண்னைவிட்டு, இரத்தப் பாசங்களைவிட்டு உலகின் எங்கோ மூலையில் பணத்துக்காக பணியாற்றுவதுதான். எந்த விசேஷத்துக்கும் கலந்துகொள்ள இயலாமல் பாலைவனத்தில் தனித்திருக்கும் மரத்தைப் போன்றதான வாழ்க்கையிது. எல்லோருமிருந்தும் யாருமற்றதான ஒரு வாழ்க்கையிது.

யாருக்கான வாழ்க்கை? எதை எதிர்பார்த்து இந்த வாழ்க்கை? பணம், பணம், பணம். உள்ளூரில் பெறும் சம்பளத்தைவிட வெளியூரில் சம்பளம் அதிகம். வெளியூரில் பெறும் சம்பளத்தைவிட வெளிநாட்டில் சம்பளம் அதிகம். இப்படி, சம்பளம் அதிகமாக கிடைக்கிறதென்பதற்காக எல்லோரையும் பிரிந்து நரகத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேடலே மகிழ்ச்சி/ஆனந்தம் தான் என்பார், சத்குரு அவர்கள். அந்த மகிழ்ச்சியை முழுதும் துறந்து வாழும் அயல் வாழ்க்கை அடிப்படைக்கே முரணான வாழ்க்கை தானே.

மனிதனை வெறுமை சூழ்ந்துகொள்வது எப்போது? அவனுக்கென்று யாருமில்லாத போது. ஆம், அந்த வகையில் சொந்தங்களை பிரிந்திருக்கும் வாழ்க்கை, ஒரு வெறுமையான வாழ்க்கைதான் என்றால் அது மிகையாகாது. செய்ற்கையான மகிழ்ச்சியில் ஆறுதலைத் நாடும் மனம் ஆரம்பத்தில் அதையே தொடர்ந்து தேடினாலும் காலவெள்ளத்தில் உண்மையை உணர்ந்துகொள்ளும்போது அற்புதமானதொரு வாழ்க்கையை இழந்திவிட்டது இறுதியில் தான் தெரிகிறது. காலம் கடந்த ஞானோதயத்தால் என்ன பயன்?

சொந்தங்களுடன் பேசி அளவளாவி, குதூகலமிட்டு விளையாடி சுகதுக்கங்களில் பங்கேற்று, ஊர் திருவிழாக்களில், பண்டிகைகளில் கலந்துகொண்டு அடையும் இன்பத்திற்கு ஈடு ஏது? தீபாவளி, பொங்கல், ஆடிக்கிருத்திகை, விநாயக சதுர்த்தி என்று எந்த விசேஷத்துக்கும் கலந்துகொள்ள இயலாமல் வாழும் இந்த அகதி வாழ்க்கை துன்பத்ட்திலும் துன்பம், கொடுமையிலும் கொடுமை.

நம்மூர் உணவு கிடையாது. நம்மூர் மக்கள் கிடையாது. நம் மொழி கிடையாது. உலகின் ஒப்பற்ற மொழியாம் தமிழ் மொழியில் பேசி மகிழ முடியவில்லை. இதைவிடவும் பெருங்கொடுமை இவ்வுலகில் இருக்க முடியுமா? இருட்டறை யில் சிறையிலிடப்பட்டிருப்பவனுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

என் கணித ஆசிரியர் இவ்வாறு அடிக்கடி கூறுவதுண்டு: “உள்ளூர் நட்டமும் வெளியூர் இலாபமும் ஒன்று” என்று. அந்நாட்களில் இதன் பொருள் புரியவில்லை. ஆனால், இன்று அதனை மிகச்சரியாகப் புரிந்துகொண்டுள்ளேன். ’திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதெல்லாம் குறுகிய காலத்திற்கு மட்டும் தான். அதனால் தான், சொர்க்கமே என்றாலும் அது நம்மூருக்கு ஈடாகாது என்றனர்.

இறுதிக்காலத்தில் இருக்கும் தாத்தா, பாட்டி பாசத்துடன் வளர்த்த அப்பா, அம்மா, உடன்பிறப்புகள் என எல்லோரையும் பிரிந்து, வெறும் பணத்தை மட்டும் மாதாமாதம் அனுப்புவது என்பது இதயத்தை விற்று சம்பாதித்த காசுகள் தான்.

நன்றி : தமிழ் கபே 

உலகக் கண்கள் காணத்துடிக்கும் தாஜ்மஹால்


உலகக் கண்கள் அனைத்தும் காணத்துடிக்கின்ற/விழைகின்ற காதல் சின்னமொன்று உண்டெனில் அது தாஜ்மஹால் தான் என்பதற்கு என்றுமே மாற்றுக்கருத்து கிடையாது. அதன் மெய்மறக்கச் செய்யும் அழகும், வடிவமைப்பும் இன்றுவரை அனைவரையும் ஆச்சரியத்தின் விளிம்புக்கே அழைத்துச் செல்வதோடு, உடற்சிலிர்க்கவும் செய்கிறது. நிரந்திர உலக அதிசியமாக திகழும் தாஜ்மஹாலின் கட்டிட அழகிற்கு நிகரான ஒரு கட்டிடம் இதுவரை தோன்றியதில்லை, இனி தோன்றப்போவதும் இல்லை. இந்தியாவின் அழகில் தாஜ்மஹால் ஒரு மணிமகுடம் என்றால் அது மிகையாகாது.

இத்துணை சிறப்புக்கும்/புகழுக்கும் காரணமாக இருந்தது முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஐந்தாவது சக்ரவர்த்தி ஷாஜஹான். மும்தாஜ் மஹால் ஷாஜஹானின் இரண்டாவது மனைவி மட்டுமல்ல, மன்னருக்கு மிகப்பிடித்தவரும் கூட. பெர்ஷிய நாட்டின் இளவரசியான மும்தாஜ் மஹாலின் இயற்பெயர் ‘அர்ஜுமென் பானு பேகம்' என்பதாகும். தன்னுடைய 14-வது (சிலர் 13-வது என்றும் கூறுவதுண்டு) குழந்தையை ஈன்றெடுக்கும் போது இறந்த இவர் தன் இறுதி விருப்பமாக இதுவரை உலகம் கண்டிராத வகையில் ஒர் நினைவுச்சின்னம் எழுப்பப்பட வேண்டுமென்று தன் அன்புக்கணவர் ஷாஜஹானிடம் கேட்டுக்கொண்டார்.

மும்தாஜ் மஹாலின் விருப்பத்திற்கிணங்க உடனடியாக ஆக்ராவில், உலகின் அனைத்து சிறந்த,மேதமை மிகுந்த கட்டிடக்கலை வல்லுனர்கள் குவிக்கப்பட்டனர். பொறியியலாளர்கள், சிற்பக்கலை நிபுணர்கள், ஓவியர்கள், பலதரப்பட்ட ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளிகள் என சுமார் 20,000 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். கி.பி.1632-ல் தொடங்கப்பட்ட இப்பணி 17-ஆண்டுகளாக கி.பி.1648-ல் தான் முடிவடைந்தது. பணியாளார்கள் அனைவரும் இரவு பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கென அருகிலேயே பிரத்யேகமாக ‘மும்தாஜபாத்' (தற்போதைய ‘தாஜ்கஞ்ச்') என்கிற பெயரில் ஊர் ஒன்று உருவாக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் கட்டுமானப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இப்பணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேலான யானைகள் ஈடுபடுத்தப்பட்டன.

பளிங்கு கற்கள் சீனாவிலிருந்தும், வைரங்கள் பன்னாவிலிருந்தும், சிவப்புக் கற்கள் பதேபூர் சீக்ரியிலிருந்தும், நீலக்கற்கள் இலங்கையிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. முதன்மைப் பொருளான வெள்ளை மார்பில்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருக்கும் கல்குவாரியிலிருந்து கொண்டுவரப்பட்டன. இதற்கான உத்தரவுகள் ராஜா ஜெய்சிங்குக்கு பிறப்பிக்கப்பட்டதற்கான ஆவனங்களை இன்றுகூட தாஜ் அருங்காட்சியகத்தில் காணலாம்.

313 ச.அ (93.9 ச.மீ) பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹாலின் மேல் விதான மாடம் மையத்திலிருந்து 187 அடி உயரம் கொண்டது. ஸ்தூபிகள் ஒவ்வொன்றும் 137 அடி உயரம் கொண்டதாகும். சமச்சீராக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மிகச் சிறந்த/பொருத்தமான உதாரணமெனில் அது தாஜ்மஹால்தான் என்று கூறப்படுவதற்கு காரணம், அதன் இருபுறமும் சிவப்புக்கற்களால் கட்டப்பட்டள்ள கட்டிடங்களேயாகும். மேற்குப்புறத்திலிருப்பது மசூதி, கிழக்குப்புறத்திலிருப்பது விருந்தினர் மாளிகை/அருங்காட்சியகம். நீர்வழிப்பாதைகளும், நீரூற்றுகளும் இச்சமச்சீர் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

பெரும்பாலான முகலாய கல்லறைகளில் பூங்காவானது பின்புறமாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு மாறாக தாஜ்மஹாலின் முன்புறமாக பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. பின்புறம் வானத்திற்கு அளிக்கப்பட்டு விட்டது. ஆம், ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு விதமாக தாஜ்மஹால் காட்சியளிக்கிறது. வானத்தின் வண்ணத்திற்கேற்ப தாஜ்மஹால் தன்னுடைய வண்ணத்தையும், நிறத்தையும் மாற்றிக் கொள்கிறது. அதனால்தான், பெரும்பாலானவர்கள் பெளர்ணமி இரவிலும், இன்னும் பலர் சூரிய அஸ்தமனத்தின் போதும் தாஜ்மஹாலைக் காண கண்கோடி வேண்டுமென்கினரோ? தாஜ்மஹால் என்பதே கல்லறை,பூங்கா,மசூதி,அருங்காட்சியகம்,வாயில்கள் முதலியவற்றின் மொத்த தொகுப்பாகும்.

தாஜ்மஹாலை வடிவமைத்தவர் ‘உஸ்தாத் அஹமது லஹாரி' என்று கூறப்பட்டாலும் அதற்கான உறுதியான சான்றுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் இதைப்போலவே பிறிதொரு கட்டிடம் எழுப்பப்பட்டுவிடக் கூடாதென்பதற்காக அனைவரது கட்டைவிரல்களும் துண்டிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது.

இற்றைய நிலையில், யமுனை ஆற்றங்கரைக்கு அழகு சேர்த்திடும் தாஜ்மஹாலைக் காண கோடிக்கணக்கானோர் வந்துகொண்டிருந்தாலும், அதனை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு இன்றுவரை ஒருவர்கூட உண்மையாக முன்வராதது தாளவொனாத துயரத்தில் ஆழ்த்துகிறது. இனியும் விழித்துக்கொள்ளாவிடில் தாஜ்மஹால் நமக்கும் ஒரு நினைவுச் சின்னமாகிவிடும்.

நன்றி : தமிழ் கபே 

இந்திய ஆட்சிப்பணி - ஒரு பார்வை


இந்திய திருநாட்டை வழிநடத்தி செல்வதும், இந்தியாவின் முதுகெலும்பாக இருந்து செயல்படுவதுமான இந்திய ஆட்சிப் பணி. நாட்டின் மிக உயந்த கவுரவமிக்க பணியாக கருதப்படுகிறது. அரசு இயந்திரத்தை முழுவதுமாக செயல்பட வைக்கும், இத்தகைய பணிகள் எப்பொழுதும் சவால் நிறைந்ததாகவே இருக்கின்றன. அதிகாரம், கவுரவம், சமுதாயத்தில் உயர்மதிப்பு, மரியாதை அரசுப்பதவி போன்ற காரணங்களால், இன்றையக்கும் பல இளைய தலைமுறையினர் இந்திய ஆட்சிப் பணியை தம் இலட்சியமாகக் கொண்டுள்ளனர்.

இலட்சங்களில் சம்பளம் வாங்கும் கணிப்பொறி, மேலாண்மை வல்லுனர்கள் கூட இப்பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். காரணம், இது அளிக்கும் சமுதாய அந்தஸ்து, இது அளிக்கும் திருப்தி- மன நிறைவு, பணி பாதுகாப்பு, சவால்கள் நிறைந்த பல பதவிகளை வகிக்கும் வாய்ப்பு, நாட்டின் வளர்ச்சியில் நேரடியாக பங்கு கொள்ளும் வாய்ப்பு, மக்களுக்காக பணியாற்றுவதற்கானதொரு வாய்ப்பு இப்படி ஏராளம், ஏராளம். உண்மையில், நாட்டின் சட்ட திட்டங்களை உருவாக்குவதும், அதனை செயல்பட வைப்பதும் இத்தகைய இந்திய ஆட்சிப் பணி - அதிகாரிகளே. சவால்கள் நிறைந்த உலகிற்கு உங்களை அழைத்துச் செல்வதற்கான வழிதான் இந்த இந்திய ஆட்சிப் பணி . முதன்மைச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், ஆணையாளர், போன்ற பல உயர்பதவிகளை வகிக்க, நாட்டை வழிநடத்திச் செல்ல துணைபுரியும் வழிதான் இந்த இந்திய ஆட்சிப் பணி .

தகுதி :-

தேசியம் (Nationality) :
  • இந்திய ஆட்சிப் பணி(IAS), இந்திய காவல் பணி (IPS) பணிகளுக்கு தேர்வு எழுதுபவர் இந்திய குடிமகனாக கட்டாயம் இருத்தல் வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு, தேர்வு எழுதுபவர் கீழ்க்கண்ட ஒருவராக இருத்தல் அவசியம்.
      • இந்திய குடிமகன் (அல்லது)
      • நேபாளில் பிறந்தவர்; (அல்லது)
      • பூடான் குடிமகன்
வயது வரம்பு (Age Limit)

21-வயதிலிருந்து 30-வயதிற்குட்பட்டவறாக இருத்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட உச்ச வயது வரம்பு சில பல தளர்வுகளை கொண்டது. அவையாவன :

SC, ST - அதிகபட்சமாக - 5 ஆண்டுகள்
OBC - அதிகபட்சமாக - 3 ஆண்டுகள்.
போரில் காயம்பட்ட இராணுவ வீரர்கள் -5 ஆண்டுகள்.
குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ வீரர்கள்- 5 ஆண்டுகள்.
பார்வையற்றோர், காது கேளாதவர், உடல் ஊனமுற்றவர்- 10 ஆண்டுகள்.

குறைந்தப்பட்ச கல்வித் தகுதி :

பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது அவசியம், இறுதியாண்டு மாணவர்கள், முதனிலைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், முக்கியத்தேர்வு எழுதும் போது, இளங்கலை தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு எண்ணிக்கை :

(பொதுப்பிரிவினர்) General - 4
SC, ST - No limit
OBC - 7

குறிப்பு :
  • முதனிலைத் தேர்வு எழுதினால் அதுவும் ஒரு தேர்வு எண்ணிக்கையாக எடுத்துக்கொள்ளப்படும்.
  • முதனிலைத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தை எழுதினாலும்அதுவும் ஒரு தேர்வுஎண்ணிக்கையாக கணக்கில் கொள்ளப்படும்.
  • தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டாலோநிராகரிக்கப்பட்டாலோ அதுவும் ஒருதேர்வு எண்ணிக்கையாகவே கணக்கில் கொள்ளப்படும்
தேர்வு விவரம்:-

இது இரண்டு படி நிலைகளை கொண்டது.

• முதனிலைத்தேர்வு (கொள்குறி வகை, முக்கியத் தேர்வுக்கான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக)
• முக்கியத்தேர்வு (ம) நேர் காணல்

முதனிலைத்தேர்வு :

இத்தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. (கொள்குறி வகை) மொத்தம் 450 மதிப்பெண்களுக்கான இத்தேர்வில், பொது அறிவு (150 மதிப்பெண்) மற்றும் விருப்பப்பாடம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டா. இத்தேர்வு, முக்கியத் தேர்வுக்கான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு மட்டுமே.

முதனிலைத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களே, முக்கியத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். மொத்த காலியிடங்களைப் பொறுத்து, 12 முதல் 13 மடங்கு மாணவர்கள், முக்கியத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

• அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் இருக்கும்.
• வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.
• தேர்வுக்கான பாடத்திட்டம், இளநிலை பாடத்திட்டத்தை ஒத்ததாக இருக்கும்

முதனிலைத்தேர்வு- முதல் தாள்

1. பொது அறிவியல்
2. உள்நாட்டு (ம) பன்னாட்டு நடப்புச் செய்திகள், முக்கிய நிகழ்வுகள்
3. இந்திய வரலாறு மற்றும் ஐனெயைn யேவழையெட ஆழஎநஅநவெ (சுதந்திர போராட்டம்)
4. இந்திய மற்றும் உலக புவியியலமைப்பு
5. இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம்
6. பகுத்தறியும் திறன்.

போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இவையனைத்தும், இளநிலை தரத்திலான, கொள்குறி கேள்விகளாக இருக்கும்.

அனுமதிக்கப்பட்ட விருப்பப் பாடங்களாவன :-

Agriculture
Animal Husbandry & Veterinary Science
Botany
Chemistry
Civil Engineering
Commerce
Economics
Electrical Engineering
Geography
Geology
Indian History
Law Mathematics
Mechanical Engineering
Medical Science
Philosophy
Physics
Political Science
Psychology
Public Administration
Sociology
Statistics
Zoology

முக்கியத் தேர்வு :-

இத்தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது.
• எழுத்துத் தேர்வு
• நேர்காணல்

எழுத்துத் தேர்வு

மொத்தம் 9 தாள்களைக் கொண்ட இத்தேர்வில் விரிவான விடைளித்தல் வகையில் இருக்கும் (கட்டுரை வடிவில்)

தாள் - I - 18-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு இந்திய மொழி 300 Marks.
தாள் - II - English (Qualifying தாள்)
தாள் - III - Essay (பொது கட்டுரை)
தாள் -IV&V - பொது அறிவு - 600 (இரண்டு தாள்கள்)
தாள் -VI&VII VIII, IX - ஏதேனும் இரண்டு விருப்பப்பாடம் (ஒவ்வொரு பாடத்திலிருந்தும் இரண்டு தாள்கள்) (விருப்பப்பாடம் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) -1200

Agriculture
Animal Husbandry and Veterinary Science
Anthropology
Botany
Chemistry
Civil Engineering
Commerce & Accountancy
Economics
Electrical Engineering
Geography
Geology
History
Law
Arabic
Assamese
Bengali
Bodo
Chinese
Dogri
English
French
German
Gujarati
Hindi
Kannada
Kashmiri
Konkani
Maithili
Malayalam
Manipuri
Marathi
Nepali
Oriya
Pali
Persian
Punjabi
Russian
Sanskrit
Santali
Sindhi
Tamil
Telugu
Urdu
Management
Mathematics
Mechanical Engineering
Medical Science
Philosophy
Physics
Political Science and International Relations
Psychology
Public Administration
Sociology
Statistics
Zoology


எழுத்துத்தேர்வு - 2000
நேர்காணல் - 300

மொத்த மதிப்பெண் - 2300

குறிப்பு :

1) எழுத்துத்தேர்வினை 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம். (ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழிலேயே எழுதலாம் நேர்காணலில் கூட தமிழிலேயே பதிலளிக்காலம்).

2) மொழிப்பாட வினாத்தாட்கள் மொழி + ஆங்கிலம் பத்தாம் வகுப்பு தரத்திலாக இருக்கும். இப்பாடங்களில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. தகுதி பெறுவதற்கான அடிப்படைத் தேர்வு மட்டுமே.

3) மொழிப்பாடங்களில் தேர்வுக் குழுவினரால் நியமிக்கப்படும் குறைந்த பட்ச மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே கட்டுரை பொது அறிவு மற்றும் விருப்பப்பாட விடைத்தாள்கள் திருத்தப்படும்.

4) கீழ்கண்ட குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களின் சேர்க்கை அனுமதிக்கப்படுவதில்லை.

Political science International X Public Administration.
Relations.

Commerce and Accountancy X Management
Anthropology X Sociology
Mathematics X Statistics
Agriculture X Animal Husbandry &Veterinary Science
Management X Public Administration.

Civil X Electrical X Mechanical

Veterinary Science X Medical Science.

நேர்காணலுக்கு தயாராவது எப்படி?

இந்திய குடிமைப் பணிக்கான இறுதி தேர்வு நேர்காணல் ஆகும். மிக முக்கியமான கட்டமும் கூட. UPSC-யினால் நியமிக்கப்படும் நேர்காணல் குழு இத்தேர்வினை நடத்தும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் மாணாக்கரின் விவரமனைத்தும் (கல்வி + பணி அனுபவம் இருப்பின் + ஊர் + மாநிலம் + மொழி + . . . . + . . . . ) ஏற்கனவே இக்குழுவினரிடம் அளிக்கப்பட்டிருக்கும். நேர்காணல் மாணவரிடம் பொதுவான கேள்விகளே கேட்கப்படுகின்றன. அன்றாடம் தம்மைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளிலிருந்து தான் அதிக கேள்விகள் கேட்கப்படும். ஒரு சூழ்நிலையை அல்லது நேர்காணல் குழு குறிப்பிடும் சூழ்நிலையை தேர்வர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே நேர்காணலின் முக்கிய நோக்கமாகும். இச்சூழலை எப்படி புத்திசாலித்தமனமாகவும், சுயோகிதமாகவும், எதிர்கொள்கிறார் என்பதே அதிகமாக பரிசோதிக்கப்படுகிறது. தேர்வருடைய புத்திக்கூர்மையை பரிசோதிக்கும் அதே நேரத்தில், தேர்வர் எந்த அளவிற்கு நாட்டு நடப்புகளை அறிந்து வைத்துள்ளார் மற்றும் அதனைப்பற்றியதான் அவருடைய கருத்து மற்றும் மனநிலை என்ன என்பதும் கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு சார்பாக செயல்படுகிறாரா அல்லது நடுநிலையாக செயல்படுகிறாரா, கடினமாக சூழ்நிலையை எவ்வாறு அணுகுகிறார். தலைமைப்பண்பு எப்படி, நேர்மைத்தன்மை, உண்மை, உணர்வு எப்படி, ஒரு துறையைப் பற்றியதான பார்வை மற்றும் ஆழான அறிவு, சமயோகிதத்தன்மை போன்றவை பரிசோதிக்கப்படுகின்றன.

இவை வெறும் குறுக்கு விசாரணை போன்று நடைபெறுவதன்று, எதார்த்தமான மற்றும் ஆரோக்கியமான விவாதமாக தேர்வரின் அறிவுத்திறனை வெளிக்கொணரும் விதத்தில் இருக்கும்.

எழுத்துத் தேர்வின் முக்கிய நோக்கம்.

தேர்வின் பகுத்தறியும் திறன் மற்றும் ஆழமான நுண்ணறிவினை பாpசோதிப்பதே எழுத்துத் தேர்வின் முக்கிய நோக்கமாகும் விருப்பப்பாடம் மற்றும் பொது அறிவு பாடங்களில் அவா; எத்தகைய புலமை பெற்றிருக்கிறார் என்பதை கண்டறிவதை இதன் முக்கிய நோக்கமாகும். வெறும் மனப்பாடமா அல்லது உண்மையறிவா என்பது இங்கே எடைப்போடப்படும்.

பாடத்திட்டம் இளநிலை தரத்தைவிட சற்று உயா;ந்ததாகவே இருக்கும். முதுகலை பாடத்திட்டத்திற்கு சற்று இணையாகவே இருக்கும். பொறியியல் பாடத்தினை பொறுத்தவரை, இளநிலை தரத்திலேயே இருக்கும். விருப்பப்பாடங்களில் மொத்தம் எட்டு வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் சமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு வினாக்களும் இரண்டு பகுதிகளாக பிhpக்கப்பட்டிருக்கும். பகுதி - அ, பகுதி - ஆ, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (4) வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். எட்டு (8) வினாக்களிலிருந்து, ஐந்து (5) வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு வினா கட்டாயமாக பதிலளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

Monday, June 14, 2010

காந்தி செய்த துரோகம்-2




ஒருக்கால், இர்வின் பிரபு கூறிய மாதிரி, மாநாட்டுக்குப் பிறகு தூக்குத்தண்டனை என்று வைத்திருந்தால், பெரிய குழப்பம் ஏற்பட்டு, காந்தி-இர்வின் ஒப்பந்தம் நிறைவேற, பகத்சிங்கின் தண்டனையைக் குறைப்பது ஒரு நிபந்தனையாக்கப்பட்டிருக்கலாம், ஆனால் காந்தியார் கூறியபடி, மாநாட்டுக்கு முன்பே தூக்கிலிடப்பட்டுவிட்டதால், வெறும் இரங்கல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி விட்டு, ஒப்பந்தததை மாநாடு ஏற்றுக் கொண்டுவிட்டது. பகத்சிங் கொல்லப்பட்ட மறு வாரமே, "குடியரசு" பத்திரிகையில் 'பகத்சிங்' என்ற தலைப்பிட்டு ஒரு தலையங்கம் வெளியிட்டது. அந்தத் தலையங்கம் அன்றைய அரசியல் சூழ்நிலை பற்றியும், காந்தியைப் பற்றியும் பல கருத்துக்களை முன்வைக்கிறது. அத்தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்:-

"அவர்கள் (காங்கிஸார்) சர்க்கார் தலைவரான மேன்மை தாங்கிய ராஜப் பிரதிநிதி திரு.இர்வின் பிரபு அவர்களைப் பாராட்டுவதும்,அவரிடம் பேசி முடிவு செய்து கொண்ட இர்வின் பிரபு , திரு.காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனையில்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு மிகப் பெரிய வெற்றியாகக் கருதி, வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவோடு மாத்திரமில்லாமல்,திரு.காந்தி அவர்கள், திரு.இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி, அப்படியே அழைக்கும்படியாக, தேச மகா ஜனங்களுக்குக் கட்டளையிடுவதும், திரு,இர்வின் பிரபு அவர்கள், திரு.காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத் தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரக்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்கள் நடைபெறுகின்றன."

ஆங்கிலேய அரசுக்கு எதிராக அஹிம்சை முறையில் போரிட்டு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவராம் காந்தி?! உண்மையை அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே!

உண்மையான வரலாற்றை மறைத்துவிட்டு,ஏதோ காந்திதாத்தா கடைக்குப் போய் மிட்டாய் வாங்கி வந்த மாதிரி, சுதந்திரம் பெற்ற கதையை,நம்மவர்களுக்கு சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

அனைவரைம் உண்மையை அறிந்து கொள்ளட்டும்.

"கத்தியின்றி,ரத்தமின்றி நாம் சுதந்திரம் பெற்றோம்" என்பது பொய். எனக்குத் தெரிந்த பொய்களிலெ இதுதான் மிகப்பெரிய பொய்.

எந்த தேசமும் ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்றதில்லை.இந்தியாவும் அப்படித்தான் என்பதை எல்லோருக்கும் உரத்துச் சொல்லுகிறேன். இந்திய விடுதலைப் போரில்,புரட்சிகர இயக்கங்களுக்கு மிக அரியதும், நெடியதுமான ஒரு வரலாறு உண்டு. இவ்வியக்கங்களின் 90 ஆண்டுகால வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்டது.

ஜாலியன்வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்த ஆங்கில அதிகாரி ஜெனரல் டயரை இந்திய மக்களில் பெரும்பாலோர் அறிவர். ஆனால்,அந்தக் கொடுங்கோலனைப் பழி வாங்குவதற்காக,இங்கிலாந்துக்கே சென்று,21 ஆண்டுகள் தன் வாழ்க்கையின் சுகங்களை எல்லாம் துறந்து,கொண்ட குறிக்கோள் ஒன்றையே மனதில் கொண்டு,தலைமறைவாய் வாழ்ந்து,பின் 1940-ஆம் ஆண்டு தான் நினைத்தையே முடித்தானே உத்தம்சிங். அவனை நம் மக்கள் பலருக்குத் தெரியாது. இப்படி,கொடுங்கோலர்களை அறிந்தவராகவும், நம் தியாகிகளை மறந்தவராகவும் வாழும் அவமானம் நம்மவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. அகிம்சையின் மூலமாக மட்டுமே சுதந்திரம் பெற்றோம் என்ற பொய்யான பிரச்சாரமே, மேற்காணும் இழிநிலைக்குக் காரணம் என்பதை இனியேனும் நம்மவர்கள் உணர்வார்களாக.