Tuesday, November 22, 2011

Out Of Box Thinking

கணித மேதைகள் மூன்று பேர்+ஒரு சாதாரண ஆள் இவர்கள் நாலு பேரையும் ஒரு சிறையில் அடைத்து ஒரு சிக்கலான புதிரைக் கொடுத்து அதை விடுவிக்க சொன்னார்களாம். அந்த புதிரின் விடையின் படி அந்த சிறைக்கதவின் பூட்டை செட் செய்தால் அது திறந்து கொள்ளுமாம். கணித மேதைகள் மூன்று பேரும் மணிக்கணக்காக பேப்பர்களை வைத்துக் கொண்டு புதிரை விடுவிக்க மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அந்த சாதாரண  ஆள் கூலாக உட்கார்ந்திருந்தானாம்.
பின்னர் மெதுவாக நடந்து சென்று கதவைத் தள்ள அது திறந்து கொண்டதாம். அதாவது கதவு பூட்டப்படவே இல்லை.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் இன்னொரு விஷயம் என்ன என்றால் Before working on the solutions, make sure the problem really exists! இதுதான் OUT OF BOX சிந்தனை

அன்பு பரிசு

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப்பரிசு..”ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.
மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்துவச்சிருக்க..?” மாமியார் செத்துட்டுது..
மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.
“மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!
G+ ல்  ஈரோடு தங்கதுரை பகிர்ந்தது...

தமிழக மக்களின் இன்றைய நிலை


மதி..... Always Rocks
24348421
நன்றி தினமணி

Wednesday, November 16, 2011

ஜெயலலிதாவின் ஆறு மாத ஆட்சி


July---20-f
நன்றி : சவுக்கு ...
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011 15:02
அதிமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் ஆகி விட்டன.   புதிதாக பொறுப்பேற்ற அரசை ஆறு மாதங்கள் கழித்தே விமர்சனம் செய்ய வேண்டும் என்று எடுத்திருந்த முடிவை, முதல் வாரத்திலேயே மாற்றியது ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக எடுத்த முடிவு.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஜெயலலிதா காட்டும் முனைப்பு பாராட்டத்தக்கது.    மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் சிறப்பான திட்டமாக இருந்தாலும், அடுத்த ஐந்தாண்டுகளில் 70 லட்சம் லேப்டாப்புகளை கொள்முதல் செய்யும் ஒரு அரசு, வைரஸ் தொந்தரவுகள் குறைவாக உள்ள இலவச மென்பாருளான லைனக்ஸ் மென்பொருளை பயன்படுத்தாமல், வின்டோஸ் மென்பொருள் உள்ள லேப்டாப்புகளை வாங்குவது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி க்ளின்டனின் வருகையோடு தொடர்புள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசு நிறுவனமான எல்காட்டின் செர்வர்களே லைனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் போது, மாணவர்களுக்கு மட்டும் எதற்காக விண்டோஸ். 

July---20-d
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை தொடர்ந்து பல்வேறு பொருட்களை வாங்குவதற்கும், தொடர்ந்து ஆன்டி வைரஸ் மென்பொருட்களை நம்பி இருப்பதற்கும் நிர்பந்திக்கும் ஒரு நிறுவனம் என்பது கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும்.

லேப்டாப் கொள்முதல் செய்வதற்காக முதலில் விடப்பட்ட டெண்டரில் 320 ஜிபி ஹார்ட் டிஸ்க், வைஃபை, வெப் கேம் வசதிகள் இருந்தன.  மைக்ரோசாப்ட் மென்பொருட்களை வாங்குவதற்காக, இரண்டாவதாக வெளியிடப்பட்ட டெண்டரில், வைஃபை, வெப்கேம் வசதிகள் நீக்கப் பட்டன.  ஹார்ட் டிஸ்க் 320 ஜிபியிலிருந்து 160 ஜிபியாக குறைக்கப் பட்டது.   வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்று அறிவிக்கும் ஜெயலலிதா, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு பணிந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  வைஃபை வசதி இல்லாத லேப்டாப் எதற்கு பயன்படும் ?  இணைய வசதியை மாணவர்களுக்கு எப்படிக் கொடுப்பார்கள் ? 
Microsoft_Sign_on_German_campus
மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதற்காக இந்தத் திட்டமா, அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்காக இந்தத் திட்டமா என்று சந்தேகமாக இருக்கிறது ?

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டை நீக்குவேன் என்று அறிவித்த அதிமுக அரசு, ஆறு மாதங்களைக் கடந்தும் இன்றும் மின்வெட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

சமச்சீர் கல்வியைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசு எடுத்த நடவடிக்கைகள் பல நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப் பட்டிருப்பது இந்த அரசுக்கு ஒரு கரும்புள்ளியாகவே இருக்கிறது.  அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தை மாற்றும் திட்டம் ஒரு சிறந்த உதாரணம்.  சென்னையில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான குழந்தைகள் மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தருவதை விட்டு விட்டு, ஒரு அழகான நூலகத்தை மாற்ற உத்தேசித்தது பொதுமக்களிடையே அதிமுக அரசின் மீது கடும் அதிருப்தியை உருவாக்கியது.
 May_16_a
சமச்சீர் கல்வியில் ஜெயலலிதா காட்டிய பிடிவாதமும் பொதுமக்களிடையே அதிருப்தி மட்டுமல்லாது கோபத்தை ஏற்படுத்தியது.   சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு விரிவான ஆழமான தீர்ப்பையும் சட்டை செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, இரண்டு மாத காலமாக குழந்தைகளை படிக்க விடாமல் தடுத்த செயலை யாரும் ரசிக்கவில்லை.

மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கமும் பரவலான எதிர்ப்பையே சந்தித்துள்ளது.  இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக ஜெயலலிதா திமுகவை வளர்ப்பதற்கே உதவி செய்கிறார்.  மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்திற்கு எதிராக இன்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினரை பார்க்கும் போது இந்தக் கருத்து வலுப்பெறுகிறது.   குடும்பச் சண்டையிலும், ஊழல் புகார்களிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு இப்படி வாழ்வளிப்பது எப்படிப்பட்ட அரசியல் என்பது புரியவில்லை.

மேலும், ஜெயலலிதா திமுக அரசின் வழக்கறிஞர் பிரிவை குறைத்து மதிப்பிடுகிறார்.   திமுக வழக்கறிஞர் பிரிவு, அதிமுக வழக்கறிஞர் பிரிவைப் போல மங்குணிப் பிரிவு அல்ல.  கடந்த திமுக ஆட்சியில் நடந்த அத்தனை அட்டூழியங்களுக்கும் எதிராக ஒரு வழக்கைக் கூட அதிமுக அணி போடவில்லை என்பது ஊரறிந்த உண்மை.  ஆனால் நில அபகரிப்பு வழக்குகள் உட்பட, அத்தனை வழக்குகளிலும், திமுக வழக்கறிஞர்கள் எப்படித் துடிப்பாக செயல்படுகிறார்கள் என்பதை ஜெயலலிதா கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்று தமிழர்களை தூக்கிலிருந்து காப்பாற்றுவதற்கு மிகச் சிறப்பான ஒரு தீர்மானத்தை இயற்றி விட்டு, அவர்கள் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்கையில், சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தைப் பற்றி ஒரு வரி கூட சொல்லாமல், அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடுத்திருக்கக் கூடிய நிலைபாடு, சட்டமன்றத் தீர்மானத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அதிமுக ஆட்சியில் மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்த ஒரு விஷயம் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.  ஜெயலலிதா அரசு என்றாலே, காவல்துறையினருக்கு கொண்டாட்டம் தான்.  மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதில் எப்போதுமே முன்னணியில் உள்ள காவல்துறை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த மீறல்களை சற்றே துணிச்சலோடு செய்யும்.  இந்தக் கருத்து, பரமக்குடி சம்பவத்திலும் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 
43
கண்துடைப்புக்காக ஒரு விசாரணைக் கமிஷனை போட்டு விட்டு, அந்த அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகம் தொடர்ந்த வழக்கில் அவர்களைக் காப்பாற்றுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கிறது அதிமுக அரசு.   பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப் பட்ட மக்களை சந்திக்க மு.க.ஸ்டாலின் சென்ற போது அவருக்கு கிடைத்த மிகச் சிறப்பான வரவேற்பு இதற்கு ஒரு முக்கியச் சான்று.

ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள் சிறப்பாகவே இருக்கின்றன. குறிப்பாக டிஎன்பிஎஸ்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடத்தப் பட்ட சோதனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு எதிராக தொடரப்பட்டு வரும் சொத்துக் குவிப்பு வழக்குகளும் சிறப்பானவையே…..  ஆனால் இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் அமைத்து நீதிமன்ற விசாரணையை துரிதப் படுத்தினால் மட்டுமே இந்தத் தொடக்கம் சிறப்பாக அமையும்.    இன்னும் ஏராளமாக சொத்துக்களை குவித்திருக்கும் மற்ற திமுக பிரமுகர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தால், அது  மக்களிடையே வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
 DSC_0106
டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் நடந்த சோதனையின் போது
புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து விட்டு, அந்த ஆணையத்தின் தலைவராக ஒரு ஊழல் பெருச்சாளியை நீதிபதியாக நியமித்திருப்பது இந்த ஆணையத்தின் நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.  விசாரணை தொடங்கி இந்நேரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்க வேண்டிய விசாரணை, தங்கராஜ் என்ற ஒரு ஊழல் பெருச்சாளியை நீதிபதியாக நியமித்ததால் இன்று உயர்நீதிமன்ற வழக்கில் உழன்று கொண்டிருக்கிறது.

நில அபகரிப்புக்கென்று தனிப் பிரிவை அமைத்து, அந்தப் பிரிவு பொதுமக்களிடமிருந்து புகார்களை வாங்கி நடவடிக்கை எடுப்பது ஜெயலலிதா அரசின் மற்றொரு சிறப்பான நடவடிக்கை.  பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக கூப்பாடு போட்டாலும், புகார் கொடுப்பவர்கள் யாரும் கட்சிக்காரர்கள் அல்லவே….. திமுக ரவுடிகளிடம் நிலத்தை இழந்து, காவல்துறையினரிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காததால் செய்வதறியாது திகைத்த பொதுமக்களே ஆயிரக்கணக்கில் புகார் கொடுத்து வருகிறார்கள்.  வழக்கறிஞர் புகழேந்தியிடம் வந்த ஒரு புகாரே இதற்கு உதாரணம்.   சென்யை, ஷெனாய் நகரில் 50 ஆண்டுகளாக குடியிருந்த ஒரு குடும்பத்தை மதுரையைச் சேர்ந்த தளபதி என்பவர், அந்த இடம் தங்களுக்குச் சொந்தம் என்று வந்து மிரட்டினார்.  அவருக்கு ஆதரவாக தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ப.ரங்கநாதனும், கவுரிசங்கரும் வந்து மிரட்டினார்கள்.   இவர்கள் கையாண்ட அடுத்த தந்திரம் என்ன தெரியுமா ?   அப்போது அண்ணா நகர் துணை ஆணையராக இருந்த பன்னீர் செல்வத்தை அணுகினார்.  பன்னீர் செல்வம், அந்த வீட்டில் குடியிருந்தவரை அழைத்து “வீட்டை விற்பனை செய் அல்லது அவர் கேட்கும் தொகையை கொடு.  இல்லையென்றால், வீட்டில் இருக்கும் பெண்களை அழைத்து வழக்கு போடுவேன்” என்று மிரட்டினார்.  இந்த நிலையில் நம்மிடம் வந்தார் அந்த வீட்டின் உரிமையாளர்.   அவர் வந்த அன்றே, சென்னை மாநகர ஆணையர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு, பன்னீர் செல்வத்தை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டது.  அதன் பிறகு பன்னீர் செல்வம் இருந்த இடம் தெரியாமல் பம்மி விட்டார்.  இந்த வீட்டு உரிமையாளரைப் போல பாதிக்கப் பட்டவர்களே இன்று நில அபகரிப்புப் புகார்கள் அளிக்கிறார்கள்.  ஆனால் இதிலும் ஒரு விசித்திரம் என்னவென்றால், இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மட்டுமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.  இவர்களுக்கு உதவி செய்த, காவல்துறை அதிகாரிகள், பத்திரப் பதிவு அதிகாரிகள் கவனமாக தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்த வழக்குகளை மக்கள் திமுகவின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கவில்லை என்பதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டின.

உள்ளாட்சித் தேர்தல்களை அமைதியாக நடத்தியதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியே ஆக வேண்டும்.   ஜெயலலிதா நினைத்திருந்தால், காவல்துறை உதவியோடு, அதிமுகவினரை அராஜகத்தில் இறங்க வைத்திருக்க முடியும்.  2006 உள்ளாட்சித் தேர்தலில், லத்திக்கா சரண் மற்றும் ஜாங்கிட் உதவியோடு, திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்களை மீண்டும் அரங்கேற்றியிருக்க முடியும்.  ஆனால், எந்த வித வன்முறையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தலை நடத்தி முடித்தற்கு கிடைத்த பரிசுதான், உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி.
அடிக்கடி நடக்கும் மாற்றங்களால் அரசு நிர்வாகம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்த நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அமைச்சர்கள் எப்போது மாறுவார்கள் என்ற நிலையற்ற தன்மையினால் தலைமைச் செயலகத்தில் உள்ள ப்யூன் கூட, அச்சமில்லாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.  ஐஏஎஸ் அதிகாரிகளும், எப்போது மாற்றம் வருமோ என்று, எந்த வேலையிலும் ஈடுபாடு காட்டுவதில்லை என்று சொல்கிறார்கள்.   அமைச்சர்களும் எந்த நேரத்தில் மாற்றம் வருமோ என்ற அச்சத்தோடே இருப்பதாக தெரிகிறது.    அவ்வப்போது வரும் மாற்றங்களால், எதைச் செய்தாலும் தப்பாகப் போய் விடுமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.
Augu---24-zd
தவறு செய்யதால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருப்பது நல்லதுதான் என்றாலும், தற்போது உள்ளது போன்ற நிலைமை நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்து விடும். அமைச்சர்களின் இந்த நிலையற்ற தன்மையால், காவல்துறை அதிகாரிகளின் கை ஓங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். முதல்வரின் செயலாளராக உள்ள ஷீலா ப்ரியாதான் அதிகபட்ச அதிகாரம் உள்ள அதிகாரியாக விளங்குவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஷீலா ப்ரியா
முதல்வர் கவனத்துக்கு செல்லும் எல்லா கோப்புகளும், ஷீலா ப்ரியாவைத் தாண்டியே செல்ல வேண்டும் என்பதால், ஷீலா ப்ரியா குறித்த புகார்கள் ஜெயலலிதா கவனத்துக்கு செல்வதில்லை என்றும் தெரிகிறது. ஏற்கனவே ஆளுனரின் செயலாளராக இருந்த ஷீலா ப்ரியா மீது அப்போதே ஏராளமான ஊழல் புகார்கள் இருந்தன.  ஆனால் இவற்றை கவனத்தில் கொள்ளாமல், ஷீலா ப்ரியாவை தனது செயலாளராக நியமித்து, ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பேசுவது நகைச்சுவையை வரவழைக்கிறது.

கடந்த ஆட்சியில் இருந்தது போல குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆதிக்கம் இல்லையென்றாலும், நடராஜன், ராவணன், வெங்கடேஷ், போன்ற பெயர்கள் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.   அரசு அலுவலகங்களில் விசாரித்தால், மணற்கொள்ளை தங்கு தடையின்றி நடைபெறுவதாகவும், அதிகாரிகள் நியமனத்தில், மன்னார்குடி ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதாகவும் தெரிவிக்ககிறார்கள்.  இது போக பெசன்ட் நகரில் நடராஜன் தனியாக ஒரு தலைமைச் செயலகத்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
 DSC_4879
இவையெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு வருகிறதா இல்லையா என்பது தெரியவில்லை.   ஆறுமாதங்களின் முடிவில், அதிமுக ஆட்சியை அலசிப் பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

Sunday, November 6, 2011

இந்தியாவின் பிரதமர் யார்?

இந்தியாவின் பிரதமர் யார்?
இந்தக் கேள்விக்கு ஒன்றாம் கிளாஸ் பிள்ளைகளாக இருந்தால் மன்மோகன் சிங் என்று பதிலளித்திருப்பார்கள். ஆனால் அது தவறு என்பது நாட்டு நடப்பை ஓரளவுக்காவது அறிந்த எந்தவொரு இந்தியனுக்கும் தெரிந்ததுதான்.
இந்தக் கேள்விக்கு, “சோனியா காந்தி” என்று பதிலளித்தால் ஐம்பது மார்க் கொடுக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் இந்தியாவின் பிரதமர் ”நீரா ராடியா” என்று நீங்கள் பதிலளித்திருப்பீர்கள் என்றால் உங்களுக்கு நூறு மார்க்குகள் நிச்சயம் வழங்கலாம்.
”நீரா ராடியா யார்?” என்பதை அறியாதவர்கள் மேலே படியுங்கள்.
காங்கிரஸ் காரர்களுக்கு சுயராஜ்யம் என்பது பிறப்புரிமையாக இருந்ததோ இல்லையோ; ஆனால் ஊழலும், கொள்ளையும் மட்டுமே காங்கிரசின் அதிகாரபூர்வ கொள்கையாக பிறப்புரிமையாக இன்று வரை இருந்து வருகிறது. காங்கிரசின் இந்தப் பிறப்புரிமைக்குப் பங்கம் வராமல் நம் மக்களும் சலிக்காமல் அக்கட்சிக்கு ஆதரவளித்து வருகிறார்கள். யதா பிரஜா, ததா ராஜா.
மாநிலக் கட்சிகள் வலுப்பெற ஆரம்பித்து மத்தியில் கூட்டணி ஆட்சியே யதார்த்த நிலையாக மாறிப் போய்விட்டது. இது ஆரம்பித்த வேளையில் இருந்து இந்தக் கொள்ளையடிக்கும் பிறப்புரிமையில் பிற மாநிலக் கட்சிகளும் உரிமை கோரவும், பங்கு கேட்கவும் ஆரம்பித்தார்கள். விளைவு: லல்லு யாதவ்களின் மாட்டுத் தீவன ஊழல்களும், முலாயம் யாதவ்களின் பல நூறு கோடி ஊழல்களும், கருணாநிதிகளின் தனி ஆவர்த்தன ஊழல்களும் - காங்கிரஸ் கலாச்சாரம் பிற கட்சிகளிடமும் ஆழமாக வேரூன்றிப் பரவ ஆரம்பித்தது.
இங்கே கொள்ளையடிக்கப்படும் பணம் வெளிநாடுகளில் சேமிக்கப்படுகிறது. ஸ்விஸ் போன்ற நாடுகள் நோகாமல் பணக்கார நாடுகளாக வளர்ந்து கொண்டு போக இந்தியாவில் இன்றைக்கும் ஒரு வேளை சோற்றிற்கு வழியில்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. உலக வரலாற்றிலேயே, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலம் தொடங்கி, ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து கொள்ளையடிக்கப் பட்டு வரும் ஒரே நாடு இந்தியாவாக மட்டுமே இருக்க முடியும். இந்தக் கொள்ளை இப்போதும் தொடர்கிறது.
scam_rajaஇப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.
ஊழல்களின் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் இந்த ஊழலின் கதாநாயகனும் ஒரு ராஜாதான். ஆபாசகரமான இந்த ஊழலின் நாயகன் ஆ.ராசாவேதான் என்று ஒரு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சொல்லுவதன் அடிப்படையில்,  அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களைக் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் இது வரை அரசாங்க நிலத்தை விற்று ஊழல் செய்திருக்கிறார்கள். நிலக்கரியை வைத்து ஊழல் செய்திருக்கிறார்கள். தண்ணீரை விற்று ஊழல் செய்திருக்கிறார்கள். மண்ணெண்ணெயை வைத்து ஊழல் செய்திருக்கிறார்கள். அரிசி, பருப்பு, எண்ணெய், ஜவுளி, வீடு, கார், பஸ், விமானம், தொலைபேசி, ராணுவம், மனிதர்கள், பெண்கள், சிறுவர்கள், மதங்கள், என்று உண்பது, உடுப்பது, படுப்பது, நின்றது, நடந்தது, பறப்பது, ஊர்வது, மிதப்பது என்று சகல விதமான உயிருள்ள உயிரற்ற படைப்புக்கள் அனைத்தையும் வைத்து ஊழல்கள் நடைபெற்று வந்தேயிருக்கின்றன. இப்பொழுது கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலைகளை வைத்து ஒரு மாபெரும் ஊழல் அரங்கேறியிருக்கிறது. அதுதான் இந்த மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல்.
இந்த ஊழல் உலக ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஊழல். ஏனென்றால் இந்த ஊழலின் மதிப்பு மொத்தமாக ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேலானது. ஒரு லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்கள் என்பது கூட நமக்கெல்லாம் தெரியாதுதான். 1 போட்டு பக்கத்தில் 12 சைபர்களை கை வலிக்கப் போட்டால்தான் இந்த ஒரு லட்சம் கோடிகள் என்ற கணக்கு வரும் என்று பொருளாதார மேதைகள் கம்ப்யூட்டரிடம் கேட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
முதலில் எப்படி இந்த ஒரு லட்சம் கோடியை கொள்ளையடித்தார்கள், யார் அடித்தார்கள் என்பவை பற்றி ஊடகங்கள் சொல்லுவதைப் பார்க்கலாம். ஒரு லட்சம் கோடி வருமானம் வரும் அளவுக்கு அது என்ன ஆகப் பெரிய விஷயம் என்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்.
ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?
வானொலி, தொலைக்காட்சி, செல் ஃபோன் என்று அனைத்து விதமான கம்பியில்லாத தொலைத் தொடர்புகளுக்கும் மின்காந்த அலைகளே ஊடகமாகச் செயல் பட்டு வருகின்றன. இந்த மின்காந்த அலைகளின் அலை நீளம், வகை ஆகியவற்றை வைத்து பகுத்து பல்வேறு தொடர்புகளுக்கு பயன் படுத்தி வருகிறார்கள். அதாவது, வானொலியின் ஷார்ட் வேவ், மீடியம் வேவ், எஃப் எம் போல, தொலைக்காட்சிகளுக்குரிய அலைவரிசைகள் போல, செல் ஃபோன்களின் பயன்பாட்டிற்கும் மின்காந்த அலைவரிசைகளே பயன்படுத்தப் படுகின்றன.dish
இதில் வெறும் ஒலிகளை மட்டும் அனுப்பக் கூடிய பிரிவில் வரும் அலைப் பரவல்களை 2ஜி ஸ்பெக்ட்ரம் என்றும், தகவல், பேச்சு, படங்கள் போன்ற அனைத்து விதமான தகவல் பரிமாற்றங்களையும் பரிமாறக் கூடிய அலைப் பரவல்களை 3ஜி ஸ்பெக்ட்ரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இப்படி பல்வேறு வகையில் உபயோகமாகும் அலைவரிசைகளை அரசாங்கமே கட்டுப் படுத்தி யார், யார் எந்தெந்த அலைவரிசையை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பதை பிரித்து வழங்கி நிர்வாகித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அலை அதிர்வெண்ணை செல்ஃ போன் மூலமான தகவல் தொடர்புக்கு மத்திய அரசாங்கம் ஒதுக்குகிறது. ஒதுக்கப்பட்ட அந்த அலைப் பரவல்களில், சிலவற்றை பயன்படுத்தத் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெறுகின்றன. பெற்ற பயன்பாட்டு உரிமையின் அடிப்படையில் தத்தம் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குகின்றன.
அந்த அலைப்பரவல்கள் மூலமாக தனியார் நிறுவனங்களும், அரசாங்கத்தின் பொது நிறுவனங்களும் தொலைத் தொடர்பு சேவைகளை தத்தம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். (இது குறித்த மேலதிக அறிவியல் தகவல்களை பத்ரி அவர்களின் வலைப்பதிவில் படித்துக் கொள்ளலாம். வலைப்பதிவு இங்கே.)
இந்த அலைப்பரவல்களை கணக்கு வழக்கு இல்லாமல் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில், எப்பொழுது தேவை (demand) ஆதாரத்தை (supply) விட அதிகமாகிறதோ, அப்பொழுது அளவில் குறைந்த வளங்களை ஏதாவது ஒரு பொது அடிப்படையில்தான் பயனர்களுக்கு வழங்க முடியும். அதுதான் எந்தவொரு இருப்பு/தேவை சமானத்திற்குமான அடிப்படையே. அதன்படி மின்காந்த அலைப்பரவல் வளமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்தான் இயங்க முடியும்; இவற்றை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறுவனங்கள் மட்டுமே இயக்க முடியும்.
நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது எந்தவொரு அரசாங்கமும் அந்த வளங்களை, ஏலத்தின் அடிப்படையில் யார் அதிக விலையை அரசுக்குக் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் வழங்க முடியும். வழங்க வேண்டும். அப்படித்தான் எந்தவொரு அரசாங்க வளங்களுமே பிரித்து வழங்கப் படுகின்றது. அதன்படி இந்த அலைப்பரவல்களை வேண்டுபவர்களுக்கு அரசாங்கம் ஏலத்தின் அடிப்படையில் பிரித்து வழங்க முடிவு செய்தது. அங்குதான் இந்த ஊழலுக்கு அஸ்திவாரமும் போடப் பட்டது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு உதாரணம் பார்க்கலாம். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஒரு பெரிய அளவிலான நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலம் சென்னையின் மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த நிலத்தை பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு வேண்டும் என்று கோருகிறார்கள். பலத்த போட்டி நிலவுகிறது. ஆனால் இருப்பதோ பத்து ஏக்கர் நிலம் மட்டுமே. இருக்கும் பத்து ஏக்கர்களுக்கோ ஆயிரக்கணக்கான கட்டுமான வியாபாரிகளும், பெரு நிறுவனங்களும் போட்டி போடுகிறார்கள். அரசாங்கத்திற்கோ அந்த நிலம் விற்பதன் மூலமான வருவாய் தேவைப் படுகிறது. ஏனெனில், வருவாயை வைத்து அரசாங்கம் நிறைய மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளலாம். மக்களுக்கு அந்த வருவாயையை தக்க விதத்தில் பயன் படுத்தலாம். அப்படியானால் அரசாங்கம் யாருக்கு அந்த நிலத்தை பிரித்து வழங்க வேண்டும்?
அரசாங்கத்தின் ஆட்சியாளர்களுக்கா? அவர்களது உறவினர்களுக்கா? அதிகாரிகளுக்கா? அல்லது எந்த நிறுவனம் அதிகம் ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் தருகிறதோ அந்த நிறுவனங்களுக்கா? யாருக்குத் தர வேண்டும்? எப்படித் தர வேண்டும்? எலிமெண்டரி ஸ்கூல் பையனிடம் இந்தக் கேள்விவைக் கேட்டால் கூட மிக எளிதாக விடையைச் சொல்லி விடுவானே? நிலத்தின் மதிப்பை ஏலத்துக்கு விட்டு யார் அதிக விலைக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கே அந்த நிலம் விற்கப் பட வேண்டும் என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?
இந்த ஒரு எளிய விடை இந்திய அரசாங்கத்திற்கு, அதிலும் உலகப் புகழ் பெற்ற பொருளாதார மேதையான மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் இயங்கும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் போகுமா? தெரியாமல் போய் விட்டது என்றுதான் அதிகாரபூர்வ அரசு அறிக்கைகள் சொல்கின்றன; அவரும் சொல்கிறார். கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரரான மிஸ்டர் உத்தமரான அப்பழுக்கற்ற தூய்மையாளரான திருவாளர் மன்மோகன் சிங்கனார் அவர்கள் தலைமையில் உள்ள அரசாங்கம் இது போன்ற ஒரு விற்பனையில் எந்தவித சந்தேகத்திற்கும், எந்தவித ஊழல்களுக்கும், எந்தவித முரண்பாடுகளுக்கும், எந்தவித லஞ்சங்களுக்கும், எந்தவிதமான சிபாரிசுகளுக்கும் இடமில்லாமல் அரசுக்கு அதிக பட்ச வருமானம் உள்ள வழியைத்தானே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன?
மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான ஊ பி ஏ (ஊழலைப் பின்பற்றும் ஏஜென்ஸி) செய்த ஒரு மாபெரும் அயோக்யத்தனத்தால் இன்று இந்தியாவுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு.
ஸ்பெக்ட்ரம் என்பது ஏன் ஒரு பெரும் விலை மதிப்புள்ள ஒரு வளமாகிறது?
ஸ்பெக்ட்ரம் எனப்படும் கம்பியில்லாத தொலைத் தொடர்பு, வலைப் பின்னல்களுக்கான ஊடகம். அரசாங்கத்தின் கட்டுப்பாடில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அளவுள்ள ஒரு வளம். நீர்வளம், நில வளம், விவசாய வளம், மனித வளம், கனிம வளம், மின் வளம், கடல் வளம், வன வளம், மலை வளம், நதி வளம் போல இதுவும் ஒரு வளம். ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு வளம். இந்தியாவின் வான் வெளி எப்படி கண்ணுக்குத் தெரியாத ஒரு வளமோ அதே போல வான்வெளியில் விரிந்திருக்கும் இந்த அலைப் பரவல்களும் ஒரு வளமே.
இந்த வளத்தை பெற உலக அளவிலும், இந்திய அளவிலும் பெரும் தொலைத் தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்குள் பலத்த போட்டி நிலவுகிறது. ஏன் பலத்த போட்டி? உலகத்திலேயே மிக அதிக அளவு செல் ஃபோன் பேசும் பயனர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள்.
subscriber_statisticsஇன்று இந்தியாவில் ஒரு மிகப் பெரிய நடுத்தர வர்க்கம் உருவாகி வருகிறது. அவர்களது வாங்கும் திறனும், சக்தியும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. செல் ஃபோன் பயன்பாடு என்பது இன்று வெறும் நடுத்தரவர்க்கத்தினரால் மட்டும் பயன் படுத்தப் படும் ஒரு சந்தை என்பதையும் தாண்டி கீழ் நடுத்தர மக்களிடம் பரவலாகப் புழங்கும் ஒரு சாதனமாகவும் மாறி வருகிறது. அதன் பயன்பாடும், அது பயன் படுத்தப் படும் விதமும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டும் புதிய பரிமாணங்களை அடைந்தும் வருகிறது.
ஆக இந்தியாவின் பல கோடிக்கணக்கான செல் ஃபோன் பயனர்களும் அவர்களின் பயன்பாடுகளும் அவை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான சந்தையும் உலக அளவில் பெரு நிறுவனங்களைக் கவர்ந்து அவர்கள் அனைவரையும் இந்தியச் சந்தைக்கு இழுத்து வருகிறது.
செல் ஃபோன் என்பது பேசுவதற்கு மட்டுமே பயன்படும் ஒரு தொலைபேசி சாதனமாக மட்டும் இன்று பயன் படுவதில்லை. இணையம், புகைப்படம், பங்கு வர்த்தகம், இணைய வர்த்தகம், பொழுது போக்கு என்று பல்வேறு விதமான செயல் பாடுகளுக்கும் செல்ஃ போன் என்ற ஒரே சாதனம் இன்று பயன் படுத்தப் பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைக்கு ஒரு ஃபோன் விகிதம் செல்ஃபோன் வைத்திராத இந்தியர்களே கிடையாது என்ற நிலைக்கு இதன் சந்தை பெருத்து வருகிறது.
கிராமங்களில் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் கூட செல்ஃபோன் பயன் படுத்தி வருகிறார்கள். இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் செல் ஃபோன் கோபுரங்கள் ஊடுருவி வருகின்றன.
செல் ஃபோன் சாதனம், அதில் பேசும் நிமிடங்களுக்கான கட்டணங்கள், அதில் இறக்கப் படும் விளையாட்டு மென்பொருள்கள் மற்றும் இசைகளுக்கான சந்தைகள், அதன் மூலம் செய்யப் படும் விளம்பரத்திற்கான சந்தை, வாங்கப் படும் பொருட்கள், பிற பயன்பாடுகள் என்று செல்ஃபோன் மூலமாக விளையும் உபரி வணிகத்தின் பெருக்கம் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ளவை.
பல கோடிக்கணக்கான செல் ஃபோன் பயனர்கள் இன்று இந்தியாவில் உருவாகி வருகிறார்கள். கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்தும் எந்தவொரு பொருளின் வியாபார மதிப்பும் பல கோடி மதிப்புள்ளவையாகவே இருக்கும்.
இவை அளிக்கும் மிகப் பெரிய உலகளாவிய வர்த்தக வாய்ப்பும் அவை ஏற்படுத்தும் சந்தைகளும் அதனால் விளையும் லாபங்களும் பிரமிக்கத் தக்கவை. ஆகவே இந்த செல்ஃபோன்களுக்குத் தேவைப் படும் அலைவரிசைகளின் உரிமைகளைப் பெறுவதிலும் உலக அளவில் பெரும் போட்டி நிலவி வருகிறது.
ஆக இந்த அலைப் பரவல் வளத்தினை உரிய முறையில் ஏலம் மூலமாக விநியோகித்திருந்தால் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் வரை நிதி ஆதாரத்தைப் நிச்சயமாகப் பெற்றுத் தந்திருக்கும். ஆனால் இது முறைகேடாக, மக்கள் விரோதமாக, அரசுக்குப் பெரும் நஷ்டத்தையும் தனியார்களுக்குப் பெரும் ஊழல் பணத்தையும் பெற்றுத் தரும் விதமாக அமைந்து விட்டது. இந்தியாவில் இதுவரை நடந்த அத்தனை ஊழல்களின் ஒட்டு மொத்த மதிப்பினைக் கூட்டினாலும் அதை விட பல மடங்கு அதிக அளவில் இதில் பொது மக்களாகிய உங்களுக்குச் சேர வேண்டிய பணம் கையாடல் செய்யப் பட்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு முன்னோட்டம்:
ஸ்பெக்ட்ரம் ஊழலை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால் இதன் பின்ணணியில் அமைந்த அரசியல் சூழ்நிலைகளைச் சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
the_k_companyசென்ற முறை திரு. மன்மோகன் சிங் தலமையில் அரசு அமைந்த பொழுது காங்கிரஸ் கட்சி, திமுக போன்ற உதிரி மாநிலக் கட்சிகளின் தயவிலேயே ஆட்சியைப் பிடித்தது. அப்பொழுது மத்திய அரசின் மிக முக்கியமான துறையான தொலைத் தொடர்புத் துறை மந்திரிப் பதவியை திமுக வின் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான திரு கருணாநிதி தன் மருமகனின் மகனான தயாநிதி மாறனுக்குப் பெற்றுத் தந்தார்.
தயாநிதி சன் டிவி எனப்படும் மாபெரும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். அப்படி ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் முதலாளி ஒருவரிடம் அந்தத் துறையின் மந்திரிப் பதவிப் பொறுப்பும் அளிக்கப் படுவது நேர்மையான ஒரு செயலாக இருக்காது. Conflict of Interest எனப்படும் நியாயமில்லாத ஒரு பதவி வழங்கலாக அது கருதப் பட்டு நியாயப் படி தயாநிதி மாறனுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப் பட்டிருக்கவே கூடாது. ஆனால் நமது மிஸ்டர் க்ளீன் மன்மோகன் சிங் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டணிக் கட்சியின் நிர்ப்பந்தத்தில் அந்தப் பதவியை தயாநிதி மாறனுக்கே அளித்தார்.
மேலும் தயாநிதி மாறனுக்கு எந்தவித அனுபவமும் இல்லாத நிலையில் மூத்த அனுபவம் உள்ள அரசியல்வாதிகளுக்கு அளிக்கப் படும் கேபினட் பொறுப்பு மந்திரி பதவி அளிக்கப் பட்டது பலரது கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. ஆனால் நேர்மை, நியாயம், விதிமுறைகள், அறவுணர்வு போன்ற லட்சியங்கள் கிஞ்சித்தும் இல்லாத காங்கிரஸ் கட்சி அவற்றையெல்லாம் குப்பையில் வீசி எறிந்து விட்டு மாறனுக்கு முக்கியமான துறையை வழங்கியது. உண்மையில் இந்தத் துறையின் மேல் திமுக கண் வைத்ததன் காரணமே, இந்தத் துறையின் மூலமாகச் சாத்தியப் படும் விநியோகமும் அதன் மூலமாக செய்யக் கூடிய பெரும் ஊழலின் சாத்தியக் கூறுகளுமேயாகும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதை இந்தப் பதவிக்காக அக்கட்சி செய்த பெரும் நிர்ப்பந்தங்களும் பேரங்களுமே நிறுவத் தேவையான சாட்சிகளாக அமைகின்றன.
குடும்ப உறுப்பினரான தயாநிதி மாறனுக்கு முக்கியமான துறையைப் பெற்றுத் தந்து விட்டாலும் கூட அவர்கள் குடும்பத்துக்குள் நடந்த சொத்துத் தகராறுகளின் காரணமாக பாதியிலேயே அவரது பதவி பறிக்கப் பட்டு விட்டது. அந்த நேரத்தில் அது வரையில் சுற்றுச் சூழல் துறை மந்திரியாக இருந்த மற்றொரு திமுக மந்திரியான ஆ.ராஜாவிடம் தொலைத் தொடர்புத் துறை அளிக்கப் பட்டது. அதில் இருந்து இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்ச கட்ட கியருக்கு மாறியது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது எப்படி?
ஆ.ராஜா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் மந்திரியாக இருந்த பொழுதே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. லஞ்சம் வாங்கிக் கொண்டு முறை கேடான கட்டிடங்கள் கட்டுவதற்கு சூழல் துறையின் அனுமதியை அளிக்கிறார் என்பது அவர் மீது பல தரப்புக்களில் இருந்தும் எழுந்த முக்கியக் குற்றசாட்டு.  “தந்திரமும், தரகும் செழித்து வளர்ந்த தலைநகரில் ராஜாவுக்கு புதிய நண்பர்கள் பலர் சுற்றுச் சூழல் துறையில் உருவாகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் வணிகத்தின் அதிபர்கள்” என்றெல்லாம் புலனாய்வுப் பத்திரிக்கைகள் தெரிவித்தன. பிரதமர் ராஜா மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன.dinakaran123
இந்தத் தருணத்தில் தமிழ் நாட்டில் மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தாருக்கும் பெரும் உள்குடும்ப யுத்தம் ஒன்று துவங்கியிருந்தது. 60கள் வரையிலும் கூட பணத்தட்டுப்பாட்டில் தடுமாறிய கருணாநிதி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு இப்போது பல்லாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டி விடுகிறது. சன் டிவி என்னும் ராட்சச தொலைக்காட்சி நிறுவனம் அவர் குடும்பத்தில் இருந்து கிளைகள் பிரிந்து அசுர வேகத்தில் மாநில, மத்திய அரசுகளில் அவரது கட்சிக்கு இருந்த செல்வாக்கின் மூலம் வளர்கிறது. அதன் பாகப்பிரிவினை யுத்தத்தின் நடுவே அப்பாவி இளைஞர்கள் மூவர் மதுரையில் எரித்துக் கொல்லப் பட, சன் டிவி பாகஸ்தர்களில் ஒருவராகிய தயாநிதி மாறனின் பதவி பறிக்கப் பட்டு, அந்தப் பதவி ஏற்கனவே தலைநகர் டெல்லியில் ஊழல் வித்தகராக மாறிவிட்டிருந்த ஆ.ராஜாவிடம் அளிக்கப் படுகிறது.
ஊடகங்கள் சொல்லும் கதையின்படி, சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாகிய ராஜா தன் ரியல் எஸ்டேட் படை சூழ சஞ்சார் பவன் அலுவலகத்தில் தொலைத் தொடர்பு மந்திரியாகிறார். அவரது தரகர்கள் அனைவரும் புதிய துறைக்கு ராஜாவுடன் சேர்ந்தே இடம் பெயர்கிறார்கள். புதிய துறையில் பணம் கொழிக்கும் வாய்ப்புக்களை இனம் காண்கிறார்கள். வனத்துறையில் சில கோடிகள்தான் கிட்டின, இங்கு ஒரு பெரிய தங்கச் சுரங்கமே ஸ்பெக்ட்ரம் விநியோகத்தின் மூலமாக மறைந்து கிடக்கிறது எனக் கண்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். புதிய துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விநியோகிக்க வேண்டிய தங்கச் சுரங்கம் இருப்பதைக் கண்டறியும் ராஜா அதை கடத்திச் சென்ற திட்டம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல். தங்கச் சுரங்கத்தை வெட்டிக் கொள்ளையடிக்கும் திட்டம் உருவாகிறது.
அப்படி ஏற்கனவே ராஜாவுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு சக்தி வாய்ந்த இடைத் தரகர்தான் ராஜாவின், ஸ்பெக்ட்ரத்தின், ஏன் இந்தியாவின் தலைவிதியையே தீர்மானிக்கும் சகல வல்லமை படைத்த அதிகார பீடமாக மாறுகிறார் என்று ஹெட்லைன்ஸ் சானல் சொல்லுகிறது. அவரைப் பற்றி பின்னால் பார்க்கலாம். முதலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் எப்படி நடத்தப் பட்டது என்பதை பார்த்து விடலாம்.
ராஜாவின் ஊழல்களா? அல்லது ஊழல்களின் ராஜாவா?
1900ம் ஆண்டு சென்னை போட் கிளப் நிலத்தில் ஒரு கிரவுண்டு என்ன விலையில் விற்றதோ அதே விலையை 2010ல் அதே கிரவுண்டுக்கு யாராவது விற்கத் தீர்மானம் செய்வார்களா? செய்தார் ராஜா ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில்!
2001ம் ஆண்டு வெறும் 40 லட்சம் பேர்களே செல்ஃபோன்கள் பயன் படுத்துபவர்களாக இந்தியாவில் இருந்தார்கள். இந்த செல் ஃபோன் பயனர்களின் எண்ணிக்கையின்படி ஒரு விலை 2001ல் தீர்மானிக்கப் பட்டது.
2001ல் 40 லட்சமாக இருந்த செல்ஃபோன் பயனர்களின் எண்ணிக்கை 2008ல் 30 கோடியாக உயர்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. பயனர்கள் அதிகரித்துவிட்ட 2008ம் ஆண்டிற்கான விலை, பல ஆண்டுகள் முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகத்தான் இருக்கும். அப்படி, ஒரு சேவையின் தேவை நூறு மடங்கு அதிகரித்திருக்கும் பொழுது அதன் விலை குறைந்தது ஒரு பத்து மடங்காவது அதிகரித்திருக்க வேண்டும் அல்லவா? அதுதான் நடக்கவில்லை என்று பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. ஏன் நடக்கவில்லை? மேலே படியுங்கள்.
ஸ்பெக்ட்ரம் வரிசைகளை 2008ம் ஆண்டில் விற்க வேண்டிய அடிப்படை விலையாக 2001ல் நிர்ணயத்த குறைந்த விலையையே முடிவு செய்கிறார் ராஜா. டிராய் அமைப்பும், பத்திரிகைகளும், பிரதமர் அலுவலகமும் இந்த குறைந்த விலை நிர்ணயத்தை மாற்றச் சொல்லியும் பிடிவாதமாக அந்தக் குறைந்த விலையே அடிப்படை விலை என்று ராஜா நிர்பந்தித்து விடுகிறார் என்பது ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
அவர்களது கூற்றுப்படி, விலையைக் குறைவாக நிர்ணயித்ததும் அல்லாமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வரிசைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யாமல் மிகவும் ரகசியமாக, சந்தேகம் தரும் வகையில், முறையான நெறிமுறைகளைப் பின்பற்றாமல், முறைகேடாக, யாருக்கும் அறிவிக்காமல் பெரிய நிறுவனங்கள் யாரும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்காமல், ராஜாவே இந்த விற்பனையை தனியாக நடத்தி முடித்து விடுகிறார்.
அதாவது ஏலத்திற்கு விடாமல் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் என்று அறிவித்து விடுகிறார். ஒரு சில ஊர் பேர் தெரியாத, திடீரென்று முளைத்த, ரியல் எஸ்டேட் கம்பெனிகள்தான் முதலில் வந்தன என்று அறிவித்து விடுகிறார். அந்த சந்தேகத்திற்கு உரிய ரகசியமான கம்பெனிகளுக்கே ஸ்பெக்ட்ரம் எல்லாம் சொந்தம் என்று சொல்லி, முன்கூட்டியே சதித் திட்டம் போட்டு வைத்திருந்த குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரெம் வரிசைகளை விற்று விட்டு, அதற்குப் பின்னால் முறையாக வந்த பெரும் நிறுவனங்கள் அனைத்திற்கும் பெப்பே காட்டி விடுகிறார் ராஜா.
“சரி இதனால் அரசுக்கு என்ன நஷ்டம்? விற்பனைதான் நடந்து விட்டதே? காசுதான் வ்ந்து விட்டதே?” என்று அப்பாவித்தனமாக நீங்கள் யாரேனும் கேட்கலாம். ஒரு சில ஊடகங்கள் கசியவிடும் குற்றச்சாட்டு உண்மையானால், உங்களது புரிதல் ஏன் சரி இல்லை என்பதையும் இப்படி பின்வாசல் வழியாக செய்த விற்பனை மூலமாக அரசுக்கு எப்படி ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டது என்பதையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1. முதலில் அரசிற்குச் சொந்தமான, தேவை மிக அதிகம் உள்ள ஒரு மாபெரும் வளத்தை, அந்த வளத்தைப் பெற கடும் போட்டிகள் நிறைந்த ஒரு சூழலில், அதன் அடிப்படை விலையைத் தற்கால தேவையைப் பொருத்தே நிர்ணயித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் உள்நோக்கத்துடனும் சதித்திட்டத்துடனும் 2001ல் குறைந்த பயனர்கள் இருந்த சூழலில் தீர்மானிக்கப் பட்ட விலையை நிர்ணயித்தது ராஜாவின் முதல் குற்றம்.
2. இரண்டாவதாக, அப்படியே குறைந்த பட்ச அடிப்படை விலையை நிர்ணயித்திருந்தாலும் கூட கடும் போட்டி நிலவும் சூழலில் அந்த வளங்களை ஏலம் விடுவதின் மூலமாகவே விற்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி ஏலத்திற்கு விட்டிருந்தால் ராஜா விற்ற அடிப்படை விலையை விட பத்திருபது மடங்கு அதிகமாக அவை விலை போயிருக்கும். அரசுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய்கள் வருமானத்தை ஈட்டித் தந்திருக்கும்.
அப்படி ஏலத்திற்கு விடாமல் தான்தோன்றித்தனமாக ரகசியமான முறையில் அனைத்து நிறுவனங்களையும் போட்டி போட விடாமல் முன்னால் வருபவர்களுக்கே விற்பேன் என்று கள்ள ஆட்டம் ஆடி குறைந்த விலைக்கு விற்று அரசுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுத்தியது ராஜாவின் இரண்டாவது குற்றம்.
3. சரி அப்படி குறைந்த விலைக்கு வைத்து அவர் யாருக்கு விற்றிருக்கிறார் என்று பார்த்தால் அங்குதான் அவரது சகுனி வேலைகள் யாவும் அம்பலத்துக்கு வருகின்றன என்பது ஊடகங்கள் சொல்லும் கதை.
முதலில் சில தில்லு முல்லுகள் செய்து முறையாக இந்தத் தொழிலில் இருக்கும் பெரு நிறுவனங்கள் எவையும் விண்ணப்பம் சமர்ப்பிக்காமல் செய்து விடுகிறார். அதாவது விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய நேரம் காலாவதியாகி விட்டது என்று சொல்லி பெரிய நிறுவனங்களை நிராகரித்து விட்டு தனக்கு வேண்டப் பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே விற்று விடுகிறார். அந்த நிறுவனங்கள் எவை என்று பார்த்தால் நமக்கு அடுத்த கடும் அதிர்ச்சி காத்திருக்கிறது.
ராஜா முதலில் விற்பனை செய்த நிறுவனங்கள் இரண்டு - ஸ்வான் என்ற நிறுவனமும், யுனிடெக் என்ற நிறுவனமும். இந்த இரண்டு நிறுவனங்களும் முதலில் தொலைத் தொடர்பு நிறுவனங்களே அல்ல. ரியல் எஸ்டேட் கம்பெனிகள்.
எந்தவிதமான தொலைத் தொடர்பு கட்டுமானங்களிலும் அனுபவம் இல்லாத, முதலீடு செய்யாத நிறுவனங்கள். அவர்கள் ரியல் எஸ்டேட் துறையிலாவது ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் அவைகள் அதிலும் ஈடுபட்டவை அல்ல. புதிதாக இந்த விற்பனையை வாங்குவதற்காகவே திடீரென்று முளைத்த கம்பெனிகள்.
இவை எங்கிருந்து வந்தன? யார் உருவாக்கினார்கள்? இவைகளுக்கும் ராஜாவுக்கும் என்ன சம்பந்தம்? அவற்றிற்கும் கருணாநிதியின் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் “தி பயனீர்”, “ஹெட்லைன்ஸ் டுடே”, “டைம்ஸ் நௌ” போன்ற ஊடகங்கள் தருகின்றன. அவர்கள் சொல்லும் தகவல்களின்படி இந்த ஊழல் மிகுந்த எச்சரிக்கையுடன், நேரடியாகக் குற்றம் சாட்ட முடியாதபடி வடிவமைக்கப் பட்டுள்ளது.  அவர்கள் அப்படி என்னதான் சொல்லுகிறார்கள் ?
ஊர் பேர் தெரியாத இரு கட்டிட வணிக நிறுவனங்களுக்கு கடும் தொழில்நுட்ப அனுபவமும் அறிவும் தேவைப் படும் ஒரு புதிய தொழில்நுட்ப வளம் அடிமாட்டு விலைக்கு விற்கப் படுகிறது. ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்ற கதையாக,  கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இந்த வளம் விற்கப் பட்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் போன்ற ஒரு உயர் தொழில்நுட்பம் கோரும் வளத்தை சம்பந்தமேயில்லாமல் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு எதற்காக விற்க வேண்டும்?
ஏன் 2008ல் 2001ல் இருந்த விலை வைத்து விற்கப் பட வேண்டும்?
ஏன் தொலைத் தொடர்பிலும் செல்ஃபோன் தொழிலிலும் பழம் தின்று கொட்டை போட்ட உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் எதுவும் இந்த விற்பனையில் கலந்து கொள்ள முடியாமல் துரத்தி அடிக்கப் பட்டன?
ஏன் முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று விற்பனை உத்தி மாற்றப் பட்டது? இது என்ன பள்ளிக்கூடத்தில் வைக்கப் படும் ஓட்டப் பந்தயமா?
ஒரு சில ஊடகங்கள் எழுப்பும் மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒவ்வொன்றாக அதே ஊடகங்கள் தரும் பதிலைக் காணும் பொழுது இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலின் முழு மர்மங்களும் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பித்து, இதில் யார் யார் பங்குதாரர்கள்? யார் யார் கூட்டாளிகள்? யார் யார் குற்றவாளிகள்? என்பவை தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும். அவற்றை ஒவ்வொன்றாக விடுவித்து இந்த உலக மகா ஊழலின் புதிரை விடுவிக்கலாம். சற்று பொறுமையாகவும் ஆழமாகவும் இவற்றைப் படித்து உள்வாங்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்.
இந்த ஊழல் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பெரும் அளவில் பாதிக்கக் கூடியது.
இந்த ஊழல் குறித்து ஊடகங்கள் தெரிவிப்பவை என்ன?
அறிந்துகொள்ள மேலே தொடருங்கள்.

உலகின் மிகப்பெரிய வேலி

சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது.  மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி.
ராய் மாக்ஸ்ஹாம்
இது உயிர்வேலி.  முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. உலகவரலாற்றின் மிகப்பெரிய வேலி இதுதான். கிட்டத்தட்ட வட இந்தியாவை இரு நேர்பாதிகளாக இது பிளந்தது. 4000 கிமீ மைல் நீளத்துக்கு பெரும் பொட்டல்களை, விளைநிலங்களை, கிராமங்களை, நகரங்களை, பாலைவனங்களை, குன்றுகளைப் பகுத்தபடி ஓடியது இது.  இதன் உச்சகாலகட்டத்தில் 1872ல் கிட்டத்தட்ட 14000  முழுநேர பிரிட்டிஷ் அரசூழியர்கள் இதை காவல்காத்துப் பராமரித்தார்கள். கிட்டத்தட்ட முக்கால்நூற்றாண்டுக்காலம் இது பிரிட்டிஷ் -இந்திய அரசின் அதிகாரத்தின் சின்னமாக நீடித்திருந்தது.
இந்த மாபெரும் அமைப்பைப்பற்றி இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் எவருமே எழுதியதில்லை. இந்தியாவைப்பற்றிய எந்த நூலிலும் இது குறிப்பிடப்பட்டதில்லை. இதைப்பற்றி சுதந்திர இந்தியாவின் எந்த ஆவணத்திலும் ஒரு குறிப்பும் இல்லை. இந்தியாவில் உள்ள எந்த சமூக, பொருளாதார அறிஞரும் இதைப்பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை. 1995 வரை.
பயணக்கட்டுரையாளரும் லண்டன் நூலக ஆவணப்பராமரிப்பாளருமான ராய் மாக்ஸ்ஹாம் 1995 இறுதியில் லண்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் வீரரின் நினைவுக்குறிப்புகளை வாங்கினார். 1893ல் பிரசுரிக்கப்பட்ட நூல் அது. ஸ்லீமான் 1850களில் பிரிட்டிஷ் இந்தியாவில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி அன்றைய இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறார். அவரது பயணக்குறிப்புகளில் மன்னர்கள், சிற்றரசர்கள், கொள்ளையர்கள், புனித நகரங்கள், கோயில்கள் பற்றிய சித்தரிப்புடன் அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் வரிவசூல் முறைகளைப்பற்றிய குறிப்பும் இருந்தது. அதில் ஸ்லீமான் இந்த மாபெரும் உயிர்வேலியைப்பற்றிச் சொல்கிறார்
ராய் மாக்ஸ்ஹாம் ஆச்சரியம் கொள்கிறார். இது கற்பனையா என ஐயம் அடைகிறார். பிரிட்டிஷ் ஆவணங்களை ஆராய்கிறார். பெரும்பாலான குறிப்புகள் 1870களுக்குப் பின்னால் வந்தவை. அவற்றில் வேலியைப்பற்றிய தகவல்களே இல்லை. லண்டனில் முறையாகப் பராமரிக்கப்படும் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகங்களில் பொறுமையாகத் தேடுகிறார். ராய் மாக்ஸ்ஹாம் தொழில்முறையாக ஒரு அரிய ஆவணக்காப்பாளர் என்பது அவருக்கு உதவுகிறது. கடைசியில் அந்த வேலிபற்றிய சர்வே தகவல்களும் அதை நிறுவிப் பராமரித்ததைப்பற்றிய கணக்குவழக்குகளும் அவருக்குக் கிடைக்கின்றன.
இந்த வேலியை பிரிட்டிஷ்காரர்களின் ஒரு கிறுக்குத்தனம் என முதலில் நினைக்கும் ராம் மாக்ஸ்ஹாம் மெல்லமெல்ல அதன் பின்னால் உள்ள கொடூரமான சுரண்டலைக் கண்டுகொள்கிறார். மிக விரிவான ஆய்வுகள் வழியாக அதை அவரது இந்தியாவின் மாபெரும் வேலி என்ற பயண நூலில் சித்தரித்துக்காட்டுகிறார்.
சுங்கவேலி 1870

இந்த வேலி முழுக்க முழுக்க உள்நாட்டு உப்புவணிகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. இது சுங்கவேலி [Customs hedge] என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் முக்கியமான வருமானமே அவர்கள் உப்புக்கு போட்ட உள்நாட்டுச் சுங்க வரிதான். அதை வசூலிக்கும் பொருட்டு உள்நாட்டு உப்புப்பரிமாற்றத்தை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிரிட்டிஷார் இந்தியாவில் அவர்கள் வேரூன்றிய 1803  முதல் இதை உருவாக்க ஆரம்பித்தனர். படிப்படியாக இதை நாற்பதாண்டுக்காலத்தில் கட்டி முடித்தார்கள். 1843ல் இந்த வேலி முழுமையடைந்து உள்நாட்டுச் சுங்கத் துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
இதைப் புரிந்துகொள்ள முதலில் இந்தியாவின் நில அமைப்பையும் அதில் உப்புக்கு உள்ள இடத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் வட இந்தியப்பகுதி மிக அகலமானது. கடலை விட்டு மிகவும் தள்ளி இருக்கக்கூடிய பிரம்மாண்டமான நிலப்பகுதிகளைக் கொண்டது.  வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், மக்கள் செறிந்த பிகார், உத்தரப்பிரதேசம்,மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகள் அனைத்துமே உப்புக்குத் தென்பகுதிக் கடலோரங்களை நம்பி இருந்தன.
உப்பு பெருமளவுக்கு காய்ச்சப்பட்டது குஜராத்தில் கட்ஜ் வளைகுடா பகுதியில். இப்பகுதியில் கடலில் பெரிய ஆறுகள் கலப்பதில்லை. ஆகவே உப்புச்செறிவு அதிகம். வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் உக்கிரமான வெயிலும் அடிக்கும். சாம்பார் ஏரி போன்ற உப்பு ஏரிகள் கோடைகாலத்தில் தானாகவே வற்றி உப்புவயல்களாக ஆகும். ஆகவே  பாரம்பரியமாக குஜராத்தில் இருந்து உப்பு வட மாநிலங்களுக்குச் சென்றது. அதற்காக நீண்ட உப்புப்பாதைகள் இருந்தன. மகாராஷ்டிரா ஒரிசா கடலோரங்களிலும் உப்பு பெருமளவுக்கு விளைந்தது. அவையும் கரைவழியாக வடமாநிலங்களுக்கும் இமய மலைப்பகுதிகளுக்கும் சென்றன.
சரி அப்படியென்றால் எதற்கு காஷ்மீர் வரை வேலி? இன்று பாகிஸ்தானில் இருக்கும் இமயமலைப்பகுதிகளில் உலகின் மிகப்பெரிய உப்புமலைகள் உள்ளன. மிகச்சுத்தமான இந்த உப்பு மிகமிக மலிவானதும்கூட. திபெத் உட்பட இமயமலைப்பகுதிகளுக்கு நூற்றாண்டுகளாக இந்த உப்புதான் சென்றுகொண்டிருந்தது. அதைத் தடுக்கவே அங்கே வேலி அமைக்கப்பட்டது.
உப்பு அவ்வளவு முக்கியமான வணிகப்பொருளா என்ன? ஆம் என்கிறார் ராய் மாக்ஸ்ஹாம். அன்றைய இந்தியாவில் பெரும்பாலான கிராமங்கள் தன்னிறைவு கொண்டவை. மக்களுக்குத் தேவையான தானியங்கள் காய்கறிகள் நெய் போன்ற நுகர்பொருட்கள் துணிகள் ஆயுதங்கள் எல்லாமே கிராமசமூகங்களுக்குள்ளாகவே உற்பத்திசெய்யப்படும்.  வெளியே இருந்து வந்து சேரக்கூடிய ஒரே உற்பத்திப்பொருள் என்பது உப்புதான். ஆகவே அதுவே அன்றைய இந்தியாவின் மிக முக்கியமான வணிகம்
உப்பு அந்த அளவுக்கு இன்றியமையாததா? இன்று உப்பு ஒரு முக்கியமான தேவையாகக் கருதப்படுவதில்லை. ஏனென்றால் இன்று பதப்படுத்தியும் சேமித்தும் உண்ணப்படும் பல்வேறு உணவுப்பொருட்களில் உப்பு நிறையவே இருக்கிறது. புலாலில் உப்பு உண்டு. ஆனால் அன்றைய இந்தியாவில் விவசாயியின் சாதாரண உணவு தானியமும் காய்கறிகளும் மட்டுமே. அவன் உப்பு சேர்த்துக்கொண்டே ஆகவேண்டும். மேலும் வியர்த்து வழிய வெயிலில் நின்று வேலைசெய்யும் இந்திய விவசாயி பெருமளவு உப்பை இழக்கிறான். அவன் உப்பு இழப்பை அவன் உணவு மூலம் ஈடு கட்டியாகவேண்டும். அத்துடன் வட இந்திய நிலங்களில் உப்பு குறைவு. ஆகவே மிருகங்கள் மண்ணைநக்கி உப்பை எடுத்துக்கொள்ளமுடியாது. அவற்றுக்கும் உப்பு கொடுக்கப்பட்டாகவேண்டும்.
வட இந்தியாவின் மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் எந்த அளவுக்கு உப்பு தேவைப்படும் என்று பார்க்கலாம். அந்த அளவுக்கான உப்பு எவ்வளவு பெரிய வணிகம்! அந்த உப்பு குஜராத் அல்லது ஒரிசாவில் இருந்து மாட்டுவண்டிகளிலும் கோவேறு கழுதைகளிலும் தலைச்சுமைகளிலுமாக பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி வந்துசேரும்போது அதன் விலை எத்தனை மடங்கு பெருகியிருக்கும் என ஊகிக்கலாம். பிகாரில் ஒரு விவசாயி சராசரியாக ஒரு மாதம் ஈட்டும் வருமானம் ஒரு வருடத்து உப்புச்செலவு என்று பல குறிப்புகளைக் கொண்டு கணித்துச் சொல்கிறார் ராய் மாக்ஸ்ஹாம். மலைப்பகுதி மக்கள் தானியத்துக்குச் செலவழிக்கும் அதே அளவு பணத்தை உப்புக்குச் செலவிட்டிருக்கிறார்கள்!
உப்பு மிகமிக அருமையான பொருளாக இருந்திருக்கிறது. பல இடங்களில் அது நாணயமாகக் கூட புழங்கியது. உப்பு மழைக்காலம் முழுக்க சேமிக்கப்பட்டாகவேண்டும் என்பதனால் உப்பு கைமாற்றாக அளிக்கப்படுவது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. உப்புமேல் சத்தியம் செய்வது மிக அழுத்தமானதாகக் கருதப்பட்டிருக்கிறது.
உப்பு அத்தனை அவசியப்பொருளா என்ன? ஒருநாளைக்குக் குறைந்தது  1500 முதல் 2500 மில்லிகிராம் சோடியம் மனித உடலுக்குத் தேவை. அதிகமாக உப்பு உடலை விட்டு வெளியேறும் இந்தியா போன்ற கோடைநிலங்களில் வாழும் மனிதனுக்குக் குறைந்தது இரண்டு அவுன்ஸ் உப்பு தேவை என்று ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுகிறார். அந்த உப்பு அவனால் உண்ணப்படாவிட்டால் Hyponatremia என்ற நோய்க்கு அவன் ஆளாகிறான். குழந்தைகள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். உப்புக்குறைவு நோயின் அடிப்படையான கோளாறு என்னவென்றால் உப்புக்குறைவால்தான் அந்நோய் உருவாகிறது என்று நோயாளியோ மருத்துவனோ உணர முடிவதில்லை என்பதே
உப்பு உடலின் திரவச்சமநிலையை தக்கவைத்துக்கொள்ள இன்றியமையாதது. உப்பு குறையும்போது ரத்தம் கனமிழக்கிறது. ஆகவே உடல் நீரை வெளியேற்றுகிறது. ஆகவே ரத்த அழுத்தம் குறைகிறது. நோயாளிக்கு தலைச்சுற்றும் வாந்தியும் சமநிலை இழப்பும் ஏற்படுகிறது. மூச்சுத்திணறலும் மயக்கமும் உருவாகிறது.  இந்நிலை தொடர்ந்தால் மரணம் நிகழ்கிறது. பட்டினியால் வாடிய இந்தியாவில் பெரும்பாலும் உப்புகுறைவு நோய் பட்டினியின் விளைவான பலமிழப்பாகவே கருதப்படுகிறது. ஆகவே அது எளிதாக உயிரைக்குடிக்கிறது
இந்த பிரம்மாண்டமான வணிகத்தை முகலாயர்களும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களின் வரி மேலோட்டமானது, குறைவானது. ஒட்டுமொத்தமாக உப்புப்பரிமாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் முயலவில்லை. பிரிட்டிஷார் அதை சுங்கவேலி வழியாக சாதித்தார்கள்
ராய் மாக்ஸ்ஹாம் இது உருவான வரலாற்றை சொல்கிறார்.  ஆரம்பத்தில் பிரிட்டிஷார் வங்காளத்தைத்தான் கைப்பற்றினார்கள். வங்காளத்தில் உப்புக்காய்ச்சுவது மிகக் கடினமானது. கங்கை கொண்டு வந்து கொட்டும் நல்ல நீரின் காரணமாக அங்கே நீரில் உப்பு குறைவு. ஆகவே நீரை வற்றச்செய்து மேலும் விறகால் எரித்து சுண்டச்செய்துதான் உப்பை எடுப்பார்கள். இந்த உப்பு மிக மிகக் கீழான நிலையில் வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்டது. உப்பின் விலையும் அதிகம்.
இந்த உப்பு காய்ச்சப்பட்டதாகையால் வங்காள பிராமணர்கள் இதை உண்ண மாட்டார்கள். சமைக்கப்பட்ட உணவுக்குச் சமம் அது. ஆகவே சூரிய ஒளியில் சுண்டிய உப்பு ஒரிசாவில் இருந்து வந்தது.  பிளாசி போரில் கிளைவ் வங்காள நவாபை வென்று வங்கத்தைப் பிடித்ததும் வங்காளம் முழுக்க விரிவான வரிவசூல் முறையை நிறுவினார். உப்புக் காய்ச்சும் ஆலைகளுக்கு வரியைப் பலமடங்காக ஆக்கினார். அது முக்கியமான வருமானமாக ஆகியது
இந்த உப்பு வரி உப்பின் விலையை அதிகரித்து  ஒரிசாவில் இருந்து வரும் உப்பின் விலையை விட அதிகமாகியது. ஆகவே ஒரிசாவில் இருந்து வரும் உப்புக்குக் கடும் வரி போடவேண்டியிருந்தது. அவ்வாறுதான் ஒரிசா வங்க எல்லையில் மகாநதி ஓரமாக முதலில் சுங்கச்சாவடிகளை அமைக்க ஆரம்பித்தார்கள் பிரிட்டிஷார்.ஒரிசாவின் சோனாப்பூர் என்ற ஊரில் முதல் சாவடி அமைந்தது. அதில் இருந்து சந்திரபூர் வரை சுங்கத்தடுப்புக்கோடு உருவாக்கப்பட்டது.
மெல்லமெல்ல பிரிட்டிஷாரின் அதிகாரம் பிகாருக்கும் உத்தரபிரதேசத்துக்கும் மத்தியப்பிரதேசத்துக்கும் பரவியது. ஆகவே சுங்கச்சாவடிகளை பர்ஹான்பூர் வரை நீட்டித்தார்கள். உப்புச் சுங்கத்தின் பெரும் லாபத்தை பிரிட்டிஷார் கண்டுகொண்டார்கள். அதற்காகப் பெரும்பணத்தை முதலீடுசெய்ய முன்வந்தார்கள்.  மத்தியப்பிரதேசத்தின் விரிந்த பொட்டல்நிலத்தை சுங்கக் கண்காணிப்புக்குள் வைத்திருப்பது கடினமாக இருந்தது. ஆகவே ஒரு பெரிய வேலியை உருவாக்கும் எண்ணம் வந்தது. இவ்வாறுதான் பர்ஹான்பூர் முதல் சுங்க வேலி தோன்றியது.
இதே காலகட்டத்தில் 1823ல் ஆக்ரா சுங்க ஆணையர் ஜார்ஜ் சாண்டர்ஸ் என்பவர் கங்கை யமுனைக்கரையிலூடாக மிர்சாப்பூர் முதல் அலஹாபாத் வரை ஒரு பெரிய வேலியை அமைத்தார். அலஹாபாதில் இருந்து நேப்பாளம் வரையில் அங்கிருந்து சிந்து வரையில் 1834ல் ஜி.எச்.ஸ்மித் ஒரு வேலியை அமைத்தார். தொடந்து சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்து அந்தச்சாவடிகளை வேலியால் இணைத்துக்கொண்டே சென்றார்கள். இவ்வ்வாறுதான் சுங்கவேலி படிப்படியாக உருவாகிவந்தது.
ஆரம்பத்தில் காய்ந்தமரத்தாலும் மூங்கிலாலும் ஆன வேலியைத்தான் கட்டினார்கள். வேலிக்கு இருபக்கமும் ஆழமான கிடங்கு வெட்டப்பட்டது. ஆனால் அந்த வேலியைப் பாதுகாப்பது கடினமாக இருந்தது. வருடம்தோறும் அது சிதல்பிடித்தும் தீப்பிடித்தும் அழிந்தது. அதற்காக நிறைய பணம்செலவிட வேண்டியிருந்தது.  அப்போதுதான் 1867ல் சுங்க ஆணையராகப் பதவிக்கு வந்தார் ஹ்யூம்.மூன்றாண்டுகள் அப்பதவியில் இருந்த அவர்  இந்தவேலியைப் பராமரிப்பதற்கான செலவைக் கணக்கிட்டு ஆராய்ந்தார்.   ஹ்யூம் சுங்கவேலியை உயிர்வேலியாக அமைப்பது ஆரம்பத்தில் செலவேறியதென்றாலும் சில வருடங்களில் பராமரிப்பே தேவையற்ற ஒன்றாக அது ஆகிவிடுமெனக் கண்டுபிடித்தார். மிக எளிதில் உயரமாக வளரும் முள்மரங்களைக் கண்டுபிடித்து அவற்றை நட்டு அந்த உயிர்வேலியை அவர்தான் உருவாக்கினார்.
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்  இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சியான சிப்பாய்க் கலகத்தை ஒடுக்குவதில் பெரும்பங்காற்றி முக்கியமானவராக ஆனவர். அவரே இந்தியா மீதான பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான முதல் சுரண்டலமைப்பைக் கட்டி எழுப்பினார் என்பது மிக ஆச்சரியமான விஷயம். ஏனென்றால் அவர் பின்னாளில் இந்திய தத்துவ ஞானத்திலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடுகொண்டவராக ஆனார். இந்தியர்களுக்கு அதிகமான தன்னுரிமை தேவை என வலியுறுத்தினார். நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு அதிக இடம் அளிக்கவேண்டுமென வாதாடி அதற்காக ஓர் அமைப்பை உருவாக்க முன்கை எடுத்தார். காந்தியின் தலைமையில் பின்னாளில் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் 1885ல் அவ்வாறுதான் உருவானது.
ராய் மாக்ஸ்ஹாம் அளிக்கும் தகவல்கள் நம்மை ஆழமான மனச்சோர்வில் கொண்டுசென்று தள்ளுபவை. முதல் விஷயம் இந்தியாவில் உருவாகிவந்த பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பகட்டம் முதல் உச்சகட்ட ஊழலையே நிர்வாகத்தின் இயல்பான வழிமுறையாகக் கொண்டிருந்தது என்பதை சித்தரித்துக் காட்டுகிறார் ராய் மாக்ஸ்ஹாம். கிளைவ் இந்தியாவை வென்றதே ஊழல் மூலம். சாதாரண அலுவலக குமாஸ்தாவாக இந்தியா வந்த அவர் அந்த ஊழலில் சம்பாதித்த பணத்தால் பிரிட்டனின் முதல் பத்துப் பணக்காரர்களில் ஒருவராக ஆனார். அன்றைய ஒவ்வொரு பிரிட்டிஷ் அதிகாரியும் மிகக்குறுகிய காலகட்டத்தில் உச்சகட்டமாக ஊழல் செய்து பணக்காரர்களாக ஆனார்கள்
அத்துடன் கீழ்மட்டத்தில் ஊழியர்களுக்கு மிகமிகக் குறைந்த ஊதியத்தை  அளித்தோ அல்லது ஊதியமே இல்லாமலோ வேலைசெய்ய வைத்தது கம்பெனி. அவர்கள் ஊழல்மூலம் சம்பாதிக்க ஊக்குவித்தது.அதன் மூலம்தான் பல்லாயிரம் இந்தியர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பணிபுரிய ஆர்வத்துடன் திரண்டு வந்தார்கள். மிகச்சில வருடங்களிலேயே பிரிட்டிஷார் தங்களுக்குரிய அதிகார வர்க்கத்தை இவ்வாறுதான் உருவாக்கிக்கொண்டார்கள். அதாவது இன்றும் நீடிக்கும் நம் அதிகார வர்க்கமானது ஊழலால் ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று
இவ்வாறு ஊழலில் அதிகாரிகள் ஈடுபடும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே அடிமட்ட மக்கள்தான். பிரிட்டிஷாரை ஆதரித்த நிலப்பிரபுக்களுக்கு அதிக இழப்பு ஏற்படாமல் எந்த விதமான ஒருங்கிணைப்பு பலமும் இல்லாமல் இருந்த ஏழைகளுக்கே அதிக பாதிப்புவரும் வகையில் வரிகள் போடப்பட்டன. ஆகவேதான் உப்புவரிக்கு இத்தகைய முக்கியத்துவம் வந்தது. சிலர் இன்று எழுதுவதுபோல பிரிட்டிஷ் ஆட்சி அடித்தள, தலித் மக்களுக்கான விடிவாக இருக்கவில்லை. அவர்களை மிகக்கொடுமையாக ஒடுக்கிப் பேரழிவை நோக்கித் தள்ளக்கூடியதாகவே இருந்தது
பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக இந்தியாவில் உருவான மாபெரும் பஞ்சங்களில் இரண்டாவது பெரும் பஞ்சத்தில் 11876–78 ல்  கிட்டத்தட்ட  ஆறரைக்கோடிப் பேர் இந்தியாவெங்கும் பட்டினிகிடந்து செத்தார்கள். அதாவது அன்றைய இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசி. அதில் 30 லட்சம்பேர் அன்றைய ஒருங்கிணைந்த வங்க மாநிலத்தில் செத்தார்கள்.உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சம் இதுவே .இது பஞ்சம் என்பதைவிடப் பொருளியல் சுரண்டல் வழியாக நிகழ்ந்த ஒரு மாபெரும் படுகொலை என்பதை இந்நூல் மிக துல்லியமாகச் சித்தரிக்கிறது. வெள்ளையர்களின்தாசர்களான நம் ஆய்வாளர்கள் மழுப்பிச்செல்லும் இந்த இடத்தில் ஒரு ஆங்கிலேய ஆய்வாளர், பிரிட்டிஷ் இந்தியாவில் அதிகாரியாக இருந்த ஒருவரின் பேரன், இந்த அளவுக்குத் திட்டவட்டமாக எழுதியிருப்பதை ஆச்சரியமென்றே கொள்ளவேண்டும்.
பஞ்சத்தை உருவாக்கிய கூறுகள் என்ன? மாபெரும் வங்கப்பஞ்சம் தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு 1874, 1875களில் வடஇந்தியா முழுக்க மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது என பிரிட்டிஷ் ஆவணங்கள் சொல்கின்றன என்கிறார் ஆசிரியர். பொதுவாக இந்தியாவில் ஒரு நல்ல விளைச்சல் ஐந்தாண்டுவரை பஞ்சம்தாங்கும் தன்மை கொண்டது, காரணம் சராசரி இந்தியர்களின் நுகர்வு  இன்றுபோலவே அன்றும் மிகமிகக் குறைவு. அப்படியானால் எப்படி பஞ்சம் வந்தது?
இந்தியாவில் போடப்பட்ட ரயில்பாதைகளினால்தான். அந்த ரயில்கள் அனைத்துமே மைய நிலங்களைத் துறைமுகங்களுடன் இணைப்பதற்காகப் போடப்பட்டவை. அவற்றின் வழியாக இந்தியாவின் விளைச்சல் முழுக்கத் திரட்டப்பட்டுக் கப்பல்களில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. உலகமெங்கும் விரிவாக்கப்போர்களில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவிலாத உணவுத்தேவைக்காக அவை சென்றன.  அதற்கு முன்னர் விளைச்சல்கள் அந்தந்த இடங்களிலேயே சேமிக்கப்படும், பஞ்சங்களில் பயன்படுத்தப்படும். ஆனால் ரயில்பாதை காரணமாக உபரியே இல்லாத நிலை வந்தது.
இரண்டாவதாக, பிரிட்டிஷாரின் இந்த மாபெரும் சுங்கவேலி. அந்த வருடங்களில் பஞ்சாபில் மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது. ஆந்திரம் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில்  ஓரளவுக்கு நல்ல விளைச்சல் இருந்தது. அந்த நிலப்பகுதிகளில் இருந்து இந்த வேலி வங்கத்தை முழுமையாகவே துண்டித்துவிட்டது. வங்கத்தில் மக்கள் லட்சகணக்கில் செத்துக்கொண்டிருந்தபோது பம்பாயிலிருந்தும் சென்னையில் இருந்தும் கப்பல்கப்பலாக தானியம் வெளியேறிக்கொண்டிருந்தது
கடைசியாக, ராய் மாக்ஸ்ஹாம் உப்புவரியைச் சொல்கிறார்.  இந்த பெரும்பஞ்சங்களின்போதுகூட பிரிட்டிஷார் உப்புவரியை நீக்கவில்லை. ஒருங்கிணைந்த வங்கத்திலும் வடகிழக்கிலும் உப்பின் விலை அதிகமாகவே இருந்தது. ஆகவே தானியமே வாங்கமுடியாத மக்கள் உப்பை முழுக்கவே தவிர்த்தார்கள். உப்புக்குறைபாட்டால் கால்நடைகளும் குழந்தைகளும் ஏராளமாக இறந்தார்கள். பின்னாளில் அன்று இறந்தவர்களைப்பற்றிய அறிக்கைகளில் இருந்து பல லட்சம்பேர் உப்புக்குறைபாடு நோயால்தான் இறந்திருக்கிறார்கள் என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தார்கள்.
இவ்வாறு இந்த மாபெரும்வேலி இந்தியாவை ஒரு பிரம்மாண்டமான விலங்கால் கட்டிப்போட்டது. இந்தியாமீதான பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கான பொருண்மையான ஆதாரமாக இருந்தது. ஒரு புற்றுநோய்க்கட்டிபோல இந்தியாவின் உயிரைக்குடித்துக்கொண்டிருந்தது இது.
துறைமுகங்களும் ரயில்பாதைகளும் உருவாகி பிரிட்டிஷாருக்கு இந்தியாவின் மீது முழு பொருளியல் கட்டுப்பாடு வந்தபோது எல்லாப் பொருட்களிலும் வரிவிதிக்கமுடிந்தது. ஆகவே உப்புவரி முக்கியத்துவம் இழந்தது. மேலும் தென்னாட்டில் உப்பளங்களின் மீது போடப்பட்ட நேரடி வரிமூலம் சுங்கவேலி அளித்த வருமானத்தை விட அதிகமான வருமானம் வர ஆரம்பித்தது. ஆகவே வைஸ்ராய் லார்ட் லிட்டன் 1879ல் உள்நாட்டு சுங்கவரியை ரத்துசெய்தார். உப்பு மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டது. உப்புக்காக உருவாக்கப்பட்ட சுங்கவேலி கைவிடப்பட்டு அழிந்தது.
காந்தியின் உப்புசத்தியாக்கிரகத்தைப்பற்றி நான் நினைவுதெரிந்த நாள் முதலாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். பலகோணங்களில் அது எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எரியும் பிரச்சினைகள் பல இருக்க, ஒடுக்குமுறைச் சட்டங்களே பல இருக்க,  உப்புக்காய்ச்சுவதற்கு எதிரான சட்டத்தை மீறும் முடிவை எதற்காக காந்தி எடுத்தார்?
அதற்கான விளக்கமாக இன்றுவரை கொடுக்கப்பட்டுவந்ததுது இதுதான். ஆங்கிலேயர் கப்பல்களில் இந்தியாவிற்குத் துணிகளை இறக்குமதி செய்தபோது கப்பல்களின் அடித்தளத்தில் எடைக்காக உப்பு நிரப்பிக் கொண்டு வந்தார்கள்.  அந்த உப்பு விலை அதிகமானது. அதை விற்பதற்கு உள்ளூர் உப்புக்கு வரிபோட்டு விலையை ஏற்ற வேண்டியிருந்தது. காந்தி ஏன் உப்புசத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தாரென்றால் இந்தியாவின் எல்லா அடித்தள மக்களுக்கும் பாதிப்பை உருவாக்கக்கூடியதாக உப்புவரி இருந்தது.
அது ஓரளவே உண்மை, அதாவது வங்க அளவுக்கு. வங்காளத்தில் உப்பு ஏற்கனவே விலை அதிகம். தீயில் காய்ச்சப்படாத உப்பை வங்க பிராமணர் விரும்பினார்கள். அந்த இடத்தில் இந்த கப்பல் உப்பை பிரிட்டிஷார் விற்றார்கள். அதனுடன் நிகராக இருப்பதற்காக உள்ளூரில் காய்ச்சப்படும் உப்புக்கு அதிக வரி போட்டார்கள். ஆனால் இந்திய அளவில் இது உண்மை அல்ல.
ஒட்டுமொத்தமாக உப்புசத்தியாக்கிரகத்தின் சமூகவியல் உள்ளடக்கம் என்ன என்பதை சரேலெனத் திறந்து காட்டுகின்றன இந்த நூல் அளிக்கும் தகவல்கள். இந்தத் தகவல்கள் எவையும் இன்றுவரை இந்தியச்சூழலில் பேசப்பட்டதில்லை. உப்புசத்தியாக்கிரகம் காந்தியின் ஒரு காரியக்கிறுக்கு என்றே இங்கே சொல்லப்பட்டுவந்தது. மார்க்ஸிய சோஷலிச அறிஞர்கள் உப்புசத்தியாக்கிரகத்தை காந்தி வாழ்ந்த காலம் முதல் இன்றுவரை கிண்டல் செய்து ஏராளமாக எழுதியிருக்கிறார்கள்.
காந்தி தண்டி யாத்திரை

தன் சமகால அரசியல்வாதிகளில் இருந்தும், நம் சமகால ‘அறிஞர்களில்’ இருந்தும் காந்தி எப்படி உண்மையான வரலாற்றறிவால், விரிவான சமூகப்புரிதலால் அவர்கள் எட்டவே முடியாத அளவுக்கு மேலே நின்றார் என்பதைக் காட்டுகிறது இந்தத் தகவல்புலம். அவர்கள் எவருக்கும் அன்றும் இன்றும் இந்திய வரலாற்றில் உப்பு என்றால் என்ன என்று தெரிந்திருக்கவில்லை. பண்பாட்டிலும் சமூக உளவியலிலும் உப்பு வகிக்கும் இடம் புரிபட்டிருக்கவில்லை.
காரணம், அவர்கள் எவருமே அடித்தள மக்களை அறிந்தவர்கள் இல்லை. அடித்தள மக்களுக்காகப் போராடும்போதுகூட அவர்களின் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் தங்களை நினைத்துக்கொண்டார்களே ஒழிய அவர்களில் ஒருவராக எண்ணிக்கொள்ளவில்லை. உதாரணமாக மார்க்ஸிய முன்னோடி எம்.என்.ராய்  உப்பு சத்தியாக்கிரகம் பற்றி எழுதிய நக்கலும் கிண்டலும் நிறைந்த கட்டுரைகளைச் சுட்டிக்காட்டலாம். எம்.என்.ராய் இந்தியாவில் பயணம்செய்து ஏழை இந்தியர்களை அறிந்தவர் அல்ல. காந்தி என்றும் அவர்களில் ஒருவராக இருந்தார். ஆகவே எம்.என்.ராய்க்குத் தென்படாத உண்மையான மக்கள் வரலாறு காந்திக்கு தெரிந்தது.
மிக நுட்பமான ஒரு விஷயத்தை ராய் மாக்ஸ்ஹாம் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் எப்போதுமே நிலவரி x உப்புவரி என்ற இருமை இருந்திருக்கிறது. நிலவரி நில உடைமையாளர்களை பாதிப்பது, உப்புவரி அடித்தள மக்களைப் பாதிப்பது. பிரிட்டிஷ் அரசு எப்போதுமே உப்புவரியை அதிகரிக்க இந்திய உயர்குடிகளால் கட்டாயப்படுத்தப்பட்டது.
1930 மார்ச் 12ல் உப்புசத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டபோது அடுத்த தலைமுறை கிராமவாசிகளின் நினைவுகளில்கூட முந்தைய உப்பு ஒடுக்குமுறை இல்லாமலாகியது. அப்போது உப்புமீது இருந்த வரி ஒப்புநோக்க மிகச்சிறியதாக இருந்தது. தென் மாநிலங்களில் அது ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை
ஆனால் மொழியிலும் பண்பாட்டிலும் உப்பு ஆழமாக வேரோடியிருந்தது. உப்பு என்ற சொல்லே ஆழமான உணர்வெழுச்சியை உருவாக்கக்கூடியதாக இருந்தது. அதை காந்தி அம்மக்களிடையே மூன்றாம்வகுப்பு ரயில்பெட்டிகளில் பயணம் செய்து வாழ்ந்து அறிந்திருந்தார். அதை கோகலேயோ, திலகரோ, நேருவோ, சுபாஷ்சந்திரபோஸோ, அம்பேத்காரோ அறிந்திருக்கவில்லை. ஆகவே அவர்களால் உப்புசத்தியாக்கிரகத்தை ஒரு தவிர்க்கமுடியாத கிழவரின் கிறுக்குத்தனம் என்று மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. அது நம்பமுடியாத அளவுக்கு விளைவுகளை உருவாக்கியபோது அதற்கு விளக்கமளிக்கவும் முடியவில்லை
காந்தி உப்புசத்தியாக்கிரகத்தை அறிவித்தபோது அவரைச்சுற்றி இருந்த காங்கிரஸ் தலைவர்கள் நிலவரி அல்லது சுங்கவரிக்கு எதிராக போராடலாம் என்று ஆலோசனை சொல்லி வற்புறுத்தியதை ராய் மாக்ஸ்ஹாம் குறிப்பிடுகிறார்.  காந்தி அதை நிராகரித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், உப்புசத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்கும்படி அவரிடம் சொன்னது அவரது அந்தராத்மா என்பதுதான். நிலம் உயர்சாதி உயர்குடியின் பிரச்சினை. உப்பு அடித்தள மக்களின், தலித் மக்களின் பிரச்சினை என காந்தி அறிந்திருந்தார்.  அவரது அந்தராத்மாவை அன்றும் இன்றும் கிண்டல்செய்யும் எந்த அறிஞனை விடவும் அந்த அந்தராத்மாவுக்கு வரலாறு தெரிந்திருந்தது.
இந்தியாவின் கடந்த அறுபதாண்டுக்கால அறிவுலகச் செயல்பாடுகளில் பல்லாயிரம் நூல்களை எழுதித்தள்ளிய நம் சமூகவியல் பேராசிரியர்களின் ஆய்வுகளின் அடித்தளமின்மையை அதிர்ச்சியளிக்கும்படி அம்பலப்படுத்துகிறது இந்நூல். 1996ல், இந்தியா சுதந்திரம் பெற்று கிட்டத்த அரைநூற்றாண்டு கழித்து, உப்புசத்தியாக்கிரகம் நிகழ்ந்து முக்கால்நூற்றாண்டு கழித்து, இந்தியா வரும் ராய் மாக்ஸ்ஹாம் இங்குள்ள வரலாற்று அறிஞர்களை ,சமூக ஆய்வாளர்களை, அரசியல் விமர்சகர்களை சந்தித்து இந்த வேலிபற்றிக் கேட்கிறார். எவருக்கும் எந்த அறிதலும் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார்.
எப்படி இருந்திருக்கும்? இங்கே நம் கல்விப்புலம் சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மட்டுமே பயணங்கள்செய்யவும் ஆவணங்களை ஆராயவும் வசதி உள்ளது. அவர்களுக்கு மேலைநாட்டு ஆய்வுகளை மேற்கோள் காட்டுவது மட்டுமே உண்மையான நவீன ஆய்வு என்ற ஆழமான நம்பிக்கை இருக்கிறது. ஓரளவு முறைமையுடன் ஆராய்பவர்கள் மேலைநாட்டுப் பல்கலைகளில் ஆய்வுப்பட்டம் பெற்றவர்கள். அவர்கள் அனேகமாக அனைவருமே இந்தியா என்ற பிற்பட்ட நிலப்பரப்பை நவீன தேசமாகக் கட்டியவர்கள் ஆங்கிலேயர் என்ற கொள்கையைக் கிட்டதட்ட மதநம்பிக்கை போலப் பெற்றுக்கொண்டுதான் இங்கே வருகிறார்கள்.
ராய் மாக்ஸ்ஹாமின் நூல் மிகசுவாரசியமான வாசிப்புத்தன்மை கொண்டது. உண்மையில் இது ஒரு பயணநூல். சுங்கவேலியைத் தேடி இந்தியாவுக்கு வரும் ராய் மாக்ஸ்ஹாம் அதன் எச்சங்களைத் தேடி இந்தியாவுக்குள் பயணம்செய்கிறார். எருமையின் மூச்சு பிடரியில் பட யமுனைக்கரை கிராமத்தின் கயிற்றுக்கட்டிலில் படுத்துத் தூங்குகிறார். முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் பிதுங்கி வழிந்து பயணம் செய்கிறார். ஓம்காரேஸ்வரிலும் காசியிலும் வேலியைக் காட்டித்தரும்படி சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறார். அது கொஞ்சம் அதிகமோ என எண்ணித் தன் குடும்பத்தைக் காக்கும்படி வேண்டிக்கொள்கிறார்.
பல விஷயங்கள் புன்னகை வரவழைக்கின்றன. ராய் மாக்ஸ்ஹாம் இந்தியாவில் முதல்வகுப்பு கூபேயில் பயணம்செய்பவர்களே நாகரீகமற்ற அகங்காரம்கொண்ட மக்கள் என நினைக்கிறார். செல்பேசியில் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். வெளியே வேடிக்கை பார்க்கவும் முடிவதில்லை. இரண்டாம் வகுப்பில் நட்பான சுமுகமான சூழல் உள்ளது, என் அனுபவமும் அதுவே. அவரது பயணப்பதிவுகளில் உள்ள மெல்லிய வேடிக்கை இந்நூலை சுவாரசியமான அனுபவமாக ஆக்குகிறது.
ராய் மாக்ஸ்ஹாம் கடைசியில் சம்பலில் அந்த வேலியின் எஞ்சிய பகுதியயைக் கண்டுகொள்கிறார். முன்னாள் கொள்ளையரும் இந்நாள் அனுமார்கோயில் பூசாரியுமான ஒருவரின் உதவியால். பிற எல்லா இடங்களிலும் நவீனமயமாக்கல் வேலியை அழித்துவிட்டது. அதற்குக் காரணம் மிக எளிது. இந்த வேலியை ஒட்டியே பெரும்பாலும் சாலைகள் உருவாகி வந்தன. சாலைகள் விரிந்து வேலியை விழுங்கிவிட்டன.
நம்மை நாமே ஆராயத்தூண்டும் முக்கியமான நூல் இது. சுங்கவேலி நம் முதுகின் ஒரு சாட்டைத்தழும்பு. அது மறைந்தாலும் நம் மொழியில் கனவில் மிஞ்சியிருக்கிறது.
 
Thanks to Jeyamohan.... Jeyamohan.in