Wednesday, August 25, 2010

ஏழைகளின் பக்கம் யார் இருக்கிறார்கள்?



இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சேர்த்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்திய அரசால் முன்பு இயற்றப்பட்ட பல சட்டங்கள் ஒரு சமநிலையை உருவாக்கவே பயன்பட்டன. தொழில் தகராறு சட்டம் மற்றும் பல தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு உரிய உரிமையை வழங்கும் அதே சமயம் முதலீடு செய்யும் தொழில் அதிபர்களையும் பாதிக்கா வண்ணம் இருக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அனைத்தும் இருந்தும் அதனை செயல்படுத்தும் அரசு நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவது ஏன் என்று பலரும் யோசிப்பதில்லை.

இன்றைய அரசியலில் நிலவும் அவலம்

இன்று ‘நான் ஒரு அரசியல்வாதி’ என்று ஒருவர் அறிமுகப்படுத்தினால் அவரைக் குறித்து ஒருவித பயமோ, வெறுப்போதான் பெரும்பான்மையோருக்கு ஏற்படுகிறது. இது ஏன்? சுதந்திரப் போரட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துமே பங்கு பெற்று கடுமையாகப் போராடினர். அவர்களில் பலர் தங்களின் இன்னுயிரை நாட்டின் சுதந்திரத்திற்காக சமர்பித்தனர் அவர்கள் அனைவரும் மக்கள் நலம் பெற்று நல்வாழ்வு வாழவே தங்களின் பொன்னான நேரத்தை, இன்னுயிரை, தாங்கள் பெற்றிருக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை தியாகம் செய்தனர். பணம் படைத்தவர்களில் சிலர் கூட தங்கள் ஒட்டுமொத்த செல்வத்தையும் இழந்து முரட்டுக் கதராடை உடுத்தி போராடி சிறை சென்று எண்ணில் அடங்காத துன்பத்தில் வாடியதன் விளைவு தான், இன்று நம்மை நாமே ஆளக்கூடிய சுதந்திரம் நமக்குக் கிடைதுள்ளது.

இந்த சுதந்திரத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் பிற அமைப்புகளின் பல தலைவர்களும் ஏட்டில் எழுதவியலாத பல துன்பங்களை அனுபவித்தனர் என்பது மறுக்கவொண்ணாதது. ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசு தங்களுக்கு விமோசனம் தரும் என்று நம்பினார்கள் நமது இந்திய மக்கள். அதைப்போலவே அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் அப்பழுக்கில்லாமல் மக்களை மையப்படுத்தியே திட்டங்களைத் தீட்டினர். பல தொழிற்சாலைகளை கொண்டு வந்தனர். லாபம் அதிகம் ஈட்டாத சில தொழில்களை அரசே எடுத்தும், ஆரம்பித்தும் நடத்தியது. ஆனால் இன்று எது போன்ற சூழ்நிலை நிலவுகிறது என்றால் சாதாரண ஏழைகளுக்கு இங்கு எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் வழங்காமல் மறுக்கப்படுகிறது.

காங்கிரஸ் அரசோ, பி.ஜே.பி. அரசோ, கம்யூனிஸ்ட் அரசோ அல்லது பிற எந்த அரசாக இருந்தாலும், வேறு எந்த மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் இதுவரை எந்த ஆட்சி அதிகாரத்தையே நுகராத சிறிய கட்சியாக இருந்தாலும் ஏழை, அடித்தட்டு மக்களுக்கு நலன் பேணும் எந்தவிதமான அறிவியல் பூர்வமான திட்டங்களையோ, பொது மக்களின் அன்றாட அத்தியாவசியமான கல்வி விசயத்திலோ, மருத்துவ வசதிகளையோ, சிறப்பான போக்குவரத்து வசதிகளையோ விளம்பரம் தேட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லாமல் உண்மையான சமூக அக்கறையோடு செய்து தருவதில்லை. எதிர்க்கட்சிகளும் எந்தவிதமான ஆக்கபூர்வமான போராட்டங்களையும் நடத்தாமல் நாங்களும் இருக்கிறோம் என்பதிற்காக சில அடையாளப்பூர்வமான போராட்டங்களை நடத்துகிறதே தவிர எந்த விதமான ஆக்கப்பூர்வமான வெகு ஜனங்களுக்கு உபயோகமான எந்தவித போராட்டங்களையும் முன்னெடுத்து செய்வதில்லை என்பதே நிதர்சன உண்மை ஆகும்.


போபாலில் நடந்த பேரவலம்

உதாரணமாக போபாலில் அந்த நிறுவனத்தின் அஜாக்கிரதையின் காரணமாக ஒரு மிகப்பெரிய விபத்து நடைபெற்றது. அதற்குள் நாம் செல்லாவிட்டாலும், அதற்கு பின்பு நடைபெற்றது என்ன? ஜப்பானிலே குண்டு போட்டதை கண்டிக்காத நாடுகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அது இன்றுவரை ஹிரோஷிமா தினமாக அனுசரிக்கபடுகிறது. நமது சொந்த நாட்டிலே, சொந்த மக்களை, தங்களின் அதீத லாப வெறிக்காக ஒரு நிறுவனம் செய்த பிழையால் பல்லாயிரக்கனக்கான உயிர்கள் எந்த விதமான நியாமான காரணமும் இல்லாமல் பலி கொடுக்கபட்டது. குறைந்த பட்சம் அந்த தவறுக்கு தண்டனை பெற்றாவது கொடுக்க வேண்டாமா நமது இந்திய அரசு? அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அதைப் பார்க்கும் மக்களுக்கும் எவ்வாறு இந்த இந்திய அரசின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரும்?

தமிழகத்தில் உள்ள துயர நிலை

அது மட்டுமா இன்று தேசத்திலே எங்கு திரும்பினாலும் விண்ணை முட்டும் விலைவாசி, மக்கள் நகரங்களில் வாழவே முடியாத அளவிற்கு அதிகபடியான வீட்டு வாடகை உயர்வு, இங்கு மின்சார விநியோகமே இல்லாவிட்டாலும் கூட அதிகபடியான மின் கட்டண உயர்வு, அறிவிக்கபடாத பேருந்துக் கட்டண உயர்வு, ஏழை மாணவர்கள் கல்வியே பெற முடியாத அளவிற்கு கல்விக் கட்டண உயர்வு, மருத்துவமனைக்கு போனாலே திரும்பி வர முடியுமா என்று தெரியாத அளவிற்கு ஆகாயத்தில் நிற்கும் மருத்துவக் கட்டணங்கள். இன்று வேலைக்கு அலுவலகம் நுழையும் வரை நாம் வேலையில் இருக்கிறோமா என்பது நிச்சயமில்லை, அந்த வேலையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அளவிற்கு கொடுமையானது என்பது இன்னொரு பக்கமுள்ள உண்மையே.

எதிர் கட்சிகளின் அறிக்கை அரசியல்

இவ்வாறு ஏழை மக்கள் பல வழிகளிலும் எண்ணிலடங்காத வேதனையோடு வாணலியில் வறுபடும் புழுவைப் போல துடிக்கின்றனர். நடு இரவில் மின்சாரம் இல்லாமல் தூக்கம் இழந்து அவதியுறுகின்றனர். இந்த சாதாரண அடித்தட்டு மக்கள் தாங்கள் படும், மற்றும் படப்போகும் துன்பங்களுக்காக, தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை பேச யாராவது, எந்த அரசியல் கட்சியாவது முன்வராதா என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

தாங்கள் படும் பிரச்னைகளின் ஒரு பகுதியளவிற்காகவாவது பேசும் எதிர்க்கட்சிகளை ஆதரித்து அவர்களை பூரண விருப்பத்தோடு ஆட்சியில் அமர வைக்கின்றனர். ஆனால் திரும்பவும் முதலில் இருந்தே வரலாறு திரும்புகிறது. எந்த எதிர்க்கட்சி இவர்களுக்காக குரல் கொடுத்ததோ அதே கட்சியானது ஆளும் கட்சியான பின்பு அதற்கு முந்தைய ஆட்சியாளர்களின் தவறையே செய்கிறது. மீண்டும் ஒருமுறை வரலாறு திரும்புகிறது. பல ஜாதிக்கட்சிகளும் அந்த ஜாதியிலேயே உள்ள ஏழைகளின் எண்ணிப் பார்க்கவியலாத துன்பகளுக்கு எதிராக போராட முன் வருவதில்லை. இவற்றிக்கு எல்லாம் தீர்வுதான் என்ன? 63வது சுதந்திர தினம் கொண்டாடினாலும், அந்த சுதந்திரமானது அனைவருக்கும் கிடைத்து உள்ளதா என்றால் அது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாகத்தான் இன்று எழுந்து நிற்கிறது.

அரசியல் ஒரு தொழில் ஆகிப்போன அவலம்

இன்றைய அரசியல் என்பதே முதலீடு செய்து அதில் லாபம் ஈட்டும் லாபகரமான தொழிலாக உருமாறிவிட்டது. எம்.பி. பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் இன்று பணம் உள்ளவர்களுக்கு விலை பேசி விற்கப்படுகிறது. இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் எந்த நாட்டிலும் நடக்காத அளவிற்கு மிகப்பெரிய ஊழல் நடந்தது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவிற்கு உலக அளவில் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தும் தேச அவமானம் ஆகும். அண்மையில் கிரிக்கெட் போட்டிகளில் நடந்த பேரமும், முறைகேடுகளும் சந்தி சிரித்தது. தியாகி பகத் சிங் போன்றவர்கள் கண்ட சுதந்திர இந்தியா இது போன்ற நிகழ்வுகளை அனுமதிப்பது என்பது நமது தேச சுதந்திரத்திற்காக பாடுபட்ட உயிர்கொடுத்த அனைவரையும் அவமதிப்பதாகும்.

மெசியா வருவாரா, மீட்சி தருவாரா

இன்று பெருக்கெடுத்து ஓடும் நுகர்வுக் கலாச்சாரம் நம் அனைவரையும் அதில் தள்ளி நாம் அதில் இழுத்துச் செல்லப்பட்டு கொண்டு இருக்கிறோம். சாதாரண மக்களின் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெற முடியாமல் போதையிலும், வேலையில்லாத சூழ்நிலையிலும், போதைக்கு அடிமையாகியும் அவர்களுக்குள்ளே வெறிவாதம் தூண்டப்பட்டு வன்முறை அமைப்புகளின் கைப்பாவைகளாகி, அதிலும் ஹிந்து வெறிவாத அமைப்புகளிடம் சிக்கி தாங்களும் அழிவதோடு, தங்களைச் சேர்ந்த இனமக்களையும் அளிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்திலே எந்த பெரிய கட்சியும் இந்திய அரசை எதிர்த்துப் போராடாத காரணத்தால் மக்களே ராணுவத்திற்கு எதிராக கல் எறிவது போன்ற செயல்கள் மூலம் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டி உள்ளது. அந்த அளவிற்கு ஏழை மக்களுக்காகப் போராடும் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் உள்ளது. இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? பகத் சிங், நேதாஜி போன்றவர்கள் கற்றுக்கொடுத்த போராட்ட வழிமுறைகள் எல்லாம் என்ன ஆயிற்று? ஏழை மக்கள் நாதி அற்று போய் விட்டார்களா? இன்று அவர்கள் சொன்னதற்கு நேர் எதிரானதாகவே அல்லவா நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அதன் விளைவே லஞ்சமும், ஊழலும் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இன்று ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுத்து அவர்களை மையப்படுத்தி கட்சி அமைத்து ஆடம்பரம் தவிர்த்து உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று உறுதி கொடுக்கக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? இன்றைய ஏழை இந்திய மக்கள் தங்களுக்காக அரசியல் நடத்த ஒரு மேசியாவை நோக்கி காத்துக் கிடக்கிறார்கள். அந்த மெசியா வருவாரா இவர்களுக்கு விமோசனம் தருவாரா?

எந்த மெசியாவும் விண்ணில் இருந்து வர மாட்டார். ஏழை மக்கள் தாங்கள் படும் துன்பத்திற்கு யார் காரணம் என்று புரிந்து கொண்டு, யார் எதிரி என்று தெரிந்து கொண்டு, எந்த வகையான போராட்டம் தங்களுக்கு ஏற்றது என்று ஆராய்ந்து, தெளிவான குறிக்கோளுடன் போராடினால் தவிர அவர்கள் படும் துன்பத்திற்கு இந்த 63வது சுதந்திர தினம் அதுவும் ஒரு நாளே தவிர நமக்கான நாளாக அது இருக்காது. நம்மிடம் இழப்பதற்கு அடிமைச்சங்கிலி தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நாம் பெறுவதற்கு பொன்னுலகமே இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்துவோம். போராடுவோம். வெற்றியடைவோம்.

- கதிரேசன்.கு

Sunday, August 22, 2010

அன்புடன் ஒரு குட்டி கடிதம் # 1










           இந்த உலகம் உண்மையிலேயே சிறியது தான் ... நான் பதிவு இட்ட சில மணித்துளிகளில் படித்து , உன்னால் முடியும் என உற்சாகமாய் பின்னோட்டம் (comments) அனுப்பிய என் நண்பன் சுப்புவிற்கு நன்றி . 

இந்த விபரித முயற்சி  தேவைதானா என மிகவும் யோசித்தேன் . ஏன் எனது அந்தரங்கங்களை மற்றவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டுமென யோசிக்கும் பொது , கிடைத்த பதில் . எனது வாழ்வின் சில விடயங்கள் நண்பர்கள்  சிலருக்கு தெரிந்திருக்கலாம் , சிலரிடம் நானே தூக்கம்  வராத இரவுகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் . ஆனால்மிகப் பல விடயங்கள் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மைகளாக இருந்து விட நான் விடக்கூடாதுஅந்த விடயங்கள் என்னுடன் முடிந்து போகக் கூடாது

அது ஒரு மின்னணு பொக்கிசமாக பாதுகாத்து கொள்ள எத்தனிக்கிறேன் . இந்த முயற்சிக்கு உந்துகோலாய் அமைந்த , எனது அறை நண்பன் ட்ரோஜன் (Trojan) க்கு நன்றி (அவனது வாழ்க்கை முக்கிய நிகழ்வுகளை ஒரு மின்னணு கோப்பாய் பாதுகாத்து வருகிறான் , படங்களுடன் ).

சரி , அதனை பதிவுகளாய் இட முயலும் பொது கண்டிப்பாய் சில வரைமுறைகளை வகுத்தாக வேண்டும்அல்லது தவறாக முடிந்து விடக்கூடும் , என நான் எண்ணுகிறேன்யாருடைய  நிகழ்கால வாழ்கையும் பாதித்து விட காரணமாய் அமைய விடக்கூடாதுஅதனால் , சில இடங்களில்  எனது நிகழ்வுகளில் இருந்து சிலவற்றை மறைக்க வேண்டும் , சிலரது பெயர்களை மாற்ற  கூட தேவைப்படும்.  அத்தகைய தருணங்களில் படிப்பவர்களுக்கும் தெரியாமல் பார்த்து கொண்டால் தான் ஒரு நல்ல எழுத்துக்களாய் முற்று பெரும் . 

சரி , எழுத்து நடை(Writing Style) எவ்வாறாக இருந்தால் நன்றாக அமையும் என யோசிக்கும் பொழுது ? அது கதை சொல்வதாக அமைந்தால்சுவை குன்றி விடலாம் எனவே ஒரு விடை தெரிந்த நாவலாக  கொண்டு செல்ல முயற்சிக்கிறேன் . அவ்வப்பொழுது சில கதா பாத்திரங்களுக்கு சில விடயங்களை சொல்ல அன்புடன் ஒரு குட்டிகடிதம் (..கு.எழுத ஆவலாக உள்ளேன்.அது ஒரு நன்றி மடலாக கூட அமைந்து விடலாம் , பார்க்கலாம் என்னுடைய இந்த முயற்சி எவ்வளவு தூரம் போகுமென ........ 

எப்பொழுது இதனை எழுதி உங்களுடைய பார்வைக்கு கொண்டு வரலாம் ? எழுத நேரம் கிடைக்கும் போதா ? இல்லை ஒரு குறிப்பிட்ட  நாளில் ஒரு இதழை போலா ? பார்க்கலாம் அது படித்து கொண்டிருக்கும் இந்த நண்பர்களின் வரவேற்ப்பை பொறுத்து இருப்பது நல்லது . 

மீண்டும்  என்னுடைய நன்றி ..... மற்றுமொரு பதிவில் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் ......................

Saturday, August 21, 2010

ஒரு புது முயற்சி



                             இந்த நடு ராத்திரியில் நான் ஏன் இப்படி யோசித்தேன் என தெரியவில்லை ... என் நண்பன் சுப்பு கூட ஒரு தடவை கேட்டான் ... உனக்கு எதற்கு இந்த வலைப்பூ ... நீ எதாவது எழுத வேண்டும்இப்படி படித்ததில் பிடித்தது என்று காப்பி அடித்து போட வேண்டிய அவசியமென்ன ? அவன் அப்படி கேட்டதில் தவறென்ன ? சரிதான் ... நான் ஏன் எனது கருத்துகளை மற்றவர்களிடம் திணிக்க வேண்டும் ? அது அவரவரது கருத்து சுதந்திரம் ...



                   எழுத்து துறையில் நானும் சாதிக்க வேண்டுமென்ன எண்ணியதுண்டு .... நான் ஒரு எழுத்தாளன் இல்லைதான் ( I am not a armature writer ) ... நான் எழுதினால் படிப்தற்கு யார் உண்டு என எண்ணியது கூட உண்டு ... எதையுமே செய்து பார்க்காமல் யோசிப்பது தவறு தான்... ஆனால் எதை எழுதி என் எழுத்துலக பயணத்தை அரம்பிப்பதென யோசித்தேன் ... ஒன்றும் வரவில்லை இந்த மரமண்டையில் , ஒரு நிண்ட பயணத்தில் ஆங்கில நாவலை (20 Still Virgin ? ? ?) படிக்கும் பொது உதித்த எண்ணம் , சொன்னால் சிரிக்க கூடாது . என் வாழ்கையோட்டதை ஏன் எழுத கூடாதென யோசித்தேன் .. ( சிரிக்க கூடாது .. என்ன சின்ன பிள்ளை தனமா இருக்கு ! . ! ). அந்த ஆங்கில நாவலின் கதை அப்படி தான் அமைந்தது .. எழுத்தாளன் வாழ்க்கையின் பின்னோக்கி பயணம் செய்கிறான் .... நானும் யோசித்தேன் .. என்னை வைத்து யாரும் படம் எடுக்க வாய்ப்பில்லைநானே என்னை வைத்து எடுத்தால் தான் ..... படிக்கும் நீங்கள் யோசிக்கலாம் ( எனக்கே தெரியும் இந்த வலைப்பூவை யாரும் படிக்க மாட்டார்கள் என ).. இவனை பற்றி எழுத இவன் என்ன அத்தனை  பெரிய சாதனையாய பண்ணி விட்டான் ?.. நான் எந்தவொரு சாதனையும் பண்ண வில்லை தான் , ஆனால் ஏன் ஒரு புது முயற்சியாய் என் வாழ்கையோட்டதை எழுத கூடாதென யோசித்ததன் விளைவு இந்த பதிவு . 

                     இது எனக்கு என் வாழ்கையை திரும்பி பார்க்க வைக்கும் .. நான் செய்த தவறுகள் மறுபடியும்  நிகழாமல் பார்த்து கொள்ள உதவும் என நம்புகிறேன்என் நினைவிலே மட்டும் வாழும் சில நிகழ்ச்சிகளின் மின்னணு  பதிவாக இருக்கும்இந்த நினைவுகள் சில நாள்களில் மறைந்து போகலாம்ஆனால் இந்த வலைப்பூ மூலமாக நிடித்து நிலைக்குமென நினைக்கிறன் .... படித்து கொண்டிருக்கும் நீங்கள் கூட இப்பொழுது யோசிக்கலாம் ... அப்படி என்ன தான் நடந்து விட்டது இவன் வாழ்கையில்

                        எனக்கே தெரியாமல் என் வாழ்க்கை ஒரு நிண்டபல திருப்பங்களை  கொண்ட ஒரு தொடர்கதையாக போய் கொண்டுதான் இருக்கிறது ....

                                   கண்டிப்பாக என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வாய்ப்பு இல்லை தான்ஒரு சுவாரசியமான பதிவுகளாக இதனை கொண்டு செல்ல முயற்சிக்கிறேன் நண்பர்களே . இது ஒரு தம்பட்டம் அடித்து கொள்ளும் கதையாக அமையாமல் பார்த்துக் கொள்கிறேன்

                      இது  என்னை போன்ற ஒத்த கருத்துள்ள பல நண்பர்களை இணைக்கும் பாலமாக அமைய வேண்டுமென நினைக்கிறன் . பல கடந்து போன நண்பர்களை திரும்பி மனக்கண்ணில் பார்க்கும் முயற்சி எனக்கு . 

இந்த முயற்சி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. 

உங்களது மேலான கருத்துகளை பின்னோட்டம் மூலம் எனக்கு தெரிய படுத்துங்கள் . அது என் எழுத்துக்களை மெருகுட்ட பயன்படும்.  

இந்த பதிவை எழுதி முடித்த பிறகும் கூடஇந்த முயற்சி தேவைதானா என யோசிக்கிறேன் ... தற்பொழுது உள்ள சில நண்பர்களிடம் கருத்துகளை கேட்டு,  என் வாழ்கையில் பின்னோக்கி பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன் ..... பார்க்கலாம் .