Sunday, June 13, 2010

மென்பொருளாளர்களுக்கு ஊதியம் அதிகம் ஏன்?

அதிகப்படியான விவாதத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் செய்திகளுள் மிக முக்கியமான ஒன்று தான் இதுவும். புருவத்தை உயர்த்த வைக்கும் சம்பளத்தை இவர்களுக்கு மட்டும் அள்ளி வழங்குவது ஏன்? அரசு ஊழியர் ஒருவர் 60 - ஆண்டுகள் உழைத்து சம்பாதித்தாலும் பெறமுடியாத தொகையை வெறும் 5 ஆண்டுகளிலேயே (இன்னும் குறைவான ஆண்டுகளில் கூட) இவர்கள் சம்பாதித்து விடுகின்றனரே எப்படி? கலை படிப்புகளான இலக்கியம், வரலாறு போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் சூழ்நிலையில் கணிப்பொறியியல் படித்தவர்கள் இலட்சங்களிலும், கோடிகளிலும் சம்பளம் பெறுவது எதைக் காட்டுகிறது? ஏன் இந்த வேறுபாடு? அப்படி இவர்கள் என்னதான் செய்கின்றனர்? 

சமீபத்தில் வெளிவந்த சில திரைப்படங்களில் கூட மென்பொருளாளர்களை ஒருதலைப்பட்சமாக சாடியிருந்தனர். வெகுஜன மக்கள் மத்தியிலும் கூட இக்கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் நானும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவன் என்ற முறையில் தன்னிலை விளக்கம் அளிக்க விரும்புகிறேன் இக்கட்டுரை வாயிலாக.

ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு விதமான தகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. எதிர்பாக்கப்படுகின்றன. அவற்றை பூர்த்தி செய்பவர்களை நிறுவனத்தினர் பணியில் அமர்த்திக் கொள்கின்றனர். வங்கிப்பணி எனில் கணக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆசிரியப்பணி எனில் கற்றல், கற்பித்தல் திறன் அமைந்திருக்க வேண்டும். மருத்துவப் பணி எனில், பொறுமையும், நோயாளியின் உடல்நிலையை/மனநிலையை அறிந்து சிகிச்சையளிக்கும் மற்றும் செயல்படும் தன்மை அமையப் பெற்றிருக்க வேண்டும். சட்டப்பணி எனில் நல்ல பேச்சாற்றலும். வழக்கற்றாலும் இருக்கப்பெற வேண்டும். இந்திய ஆட்சிப் பணி எனில் தலைமைப்பண்பும், சமயோகித அறிவும், விரைந்து செயல்படும் தன்மையும், உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை தெரிந்து வைத்திருப்பதும், நடுநிலையுடன் செயல்படுவதும் வேண்டும். என்பனவாக தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. ஒரு பணிக்கு எதிர்பார்க்கப்படும் தகுதி மற்றொரு பணிக்கு எதிர்பார்க்கப்படுவதில்லை. உதாரணமாக, வங்கி பணியாளரிடத்தில் கணக்கு அறிவு பரிசோதிக்கப்படுகிறதே தவிர. அவரிடத்தில் கற்றல், கற்பித்தல் அறிவு எதிர்பார்க்கப்படுவில்லை.

சட்டப்பணியாளரிடத்தில் எதிர்பார்க்கப்படும் தகுதிகள், மருத்துவப்பணியாளரிடத்தில் எதிர்பார்க்கப்படுவதிலலை. காரணம், இருவரின் பணிகளும் வெவ்வேறானவை. இங்கே தலைமைப்பண்போ, நடுநிலைத்தன்மையோ, கணக்கு அறிவோ பரிசோதிக்கப்படுவதில்லை. அவை தேவையில்லாதவையும் கூட, ஆனால் ஒரு மென்பொறியாளர் பணிக்கு மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து திறன்களும் அதன் தன்மைகளும் தகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றை கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.

1. கணித அறிவு
2. ஆங்கில அறிவு
3. தலைமைப்பண்பு
4. பேச்சாற்றல்
5. கற்றல் - கற்பித்தல்
6. குழுவுடன் பணியாற்றுதல் / நடுநிலைத் தன்மை
7. சமயோகித அறிவு
8. நாட்டு நடப்பு / உலக அறிவு

இப்படி எல்லாத் தகுதிகளும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை இன்றைய தினசரிகளில் வேலைவாய்ப்பு பக்கத்தில் பார்த்ததில்லையா? அதற்கு கணினி அறிவியல் படித்த மற்றும் படிக்கும் மாணவர்கள் தம்மை தயார் செய்துகொள்வதை கண்டதில்லையா?

கணினி பணி என்பது, முழுக்க முழுக்க மூளையை கசக்கும் பணியே அன்றி, உடல் உழைப்பு அன்று. இவன் ஒரு பிரம்மாவைப் போல நாளும் சிருஷ்டித்துக் கொண்டே இருக்க வேண்டும். வங்கிப்பணியாளரோ, ஆசிரியரோ, வழக்கறிஞரோ ஒரே விதமான பணியைத் தான் திரும்பத் திரும்ப செய்கின்றனர். இவர்களின் பணியில் எவ்வித கண்டுபிடிப்பும் மாற்றமும், புதுமையும் அதிகப்படியாக இருப்பதில்லை. ஆனால் ஒரு மென்பொறியாளனின் பணி அப்படியல்ல. அவன், எப்பொழுதும் கற்றுக்கொள்வதற்கும், உடன் பணியாற்றுபவர்களுக்கு கற்பிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

குழுவுடன் பணியாற்றும் தன்மை இங்கே மிக முக்கியமாக கருதப்படுகிறது. மேலும், அக்குழுவை வழிநடத்திச்செல்ல தேவையான தலைமைப்பண்பை நாளடைவில் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

‘வாடிக்கையாளர் திருப்தி’ (Customer Satisfaction ) முதன்மையான ஒன்றாக இருப்பதினால் மருத்துவருக்கு தேவையான பொறுமையும், சரியான அணுகுமுறையும் இவனிடத்தேயும் இருந்தால்தான் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று செழித்தோங்க முடியும். சிறந்த பேச்சாற்றலும் சொல்வன்மையும் இருந்தால் தான் வாடிக்கையாளரிடம் திறமையாக பேசமுடியும். புதுப்புது திட்டப்பணிகளை (Project) பெறமுடியும். முக்கியத் தருணங்களில் விரைந்து செயல்படும் மற்றும் முடிவெடுக்கும் திறன் அமையப்பெற்றிருந்தால் தான் இக்கட்டான சூழ்நிலையைலிருந்து நிறுவனத்தை காப்பாற்ற முடியும். நாளும் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் புதுப்புது தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே, இங்கே ஊதிய உயர்வு, மற்றும் பணி நிரந்தரம். இல்லையேனில் சில வருடங்களிலேயே நீங்கள் தூக்கியெறியப்பட்டுவிடுவீர்கள். ஆக, அவன் எப்பொழுதும் கற்றுக்கொண்டே இருக்கிறான். கற்றதை கற்பித்துக்கொண்டும் இருக்கிறான். ஒரே மாதிரியான பணி என்பது இவனுக்கு ஒரு நாளும் கிடையாது. ஒரு குயவனைப்போல, புதுப்புது பாண்டங்களை வித்தியாசமாக, முற்றிலும் மாறுபட்டதாக, முற்றிலும் வேறுபட்டதாக நாளும் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆக பத்தாம் பசலித்தனமாக மென்பொருள் அறிஞர்களுக்கு பணம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது என்று கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. 

50- ஆண்டுகளுக்கு முன் கற்ற இலக்கியத்தைத்தான் இன்னும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்துக்கொண்டிருக்கின்றனர், இவர்கள் புதிதாக கற்றுக் கொள்வதும் இல்லை. கற்றுக்கொள்வதற்கான அவசியமும் இல்லை. ஆனால், மென்பொருள் துறை அப்படியல்ல. 5-மாதங்களுக்கு முன் கற்றுக்கொண்ட தொழில் நுட்பம், இன்று காலாவாதியாகிவிடுகின்றனது. அல்லது, புது தொழில் நுட்பம் வெளிவந்துவிடுகின்றது. இன்றைய கணினி உலகில், வங்கிப்பணியாளாருக்குக்கூட அவ்வளவாக கணக்கு அறிவு தேவைப்படுவதில்லை. ஓரளவிற்கு பொது அறிவு (Common Sense) இருந்தால் கூட போதுமானது. கணினியே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறது. இப்படி, மருத்துவம், அறிவியல் என்று எல்லாத்துறைகளிலும் கணினி வந்த பிறகு, அவற்றின் மூளையாக இருந்து செயல்படும் மென்பொறியாளார்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால், ஆசிரியர் + மருத்துவர் + வங்கி ஊழியர் + வழக்கறிஞர் இவர்களின் ஒட்டுமொத்த சம்பளத்தையும் அளிக்க வேண்டிய சூழ்நிலையில், அவனுக்கு சொற்ப சம்பளமே அளிக்கப்படுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட இறைவனைப்போல, கணினியும் இருப்பதினால் அதனை ஆட்டுவிக்கும் மென்பொறியாளனுக்கு அதிக சம்பளம் கொடுப்பதுதானே நியாயம்? இதனை கேள்வி கேட்பது அறியாமை என்று கூட சொல்லலாம்.

உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு நல்ல முகவரியையும், அடையாளத்தையும் ஏற்படுத்திக்கொடுத்து வரும் இந்தக் கணினித்துறைதான் நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகிறது. 8-9% நாட்டின் வளர்ச்சியில் கணினியினால் ஏற்படக்கூடிய வளர்ச்சி சுமார் 3% என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் மென்பொருளாளர்களின் பங்கீட்டினை. மற்ற எல்லாத்துறைகளும் சேர்ந்துதான் மீதமிருக்கும் 5-6% விழுக்காட்டினை பூர்த்தி செய்கின்றன.

உடல் உழைப்புக்கு ஆயிரம் மனிதர்கள் கிடைப்பார்கள். ஆனால், மூளை உழைப்புக்கு அவ்வளவு சீக்கிரம் மனிதர்கள் கிடைப்பதில்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

இலக்கியம், வரலாறு படித்தவர்களுக்கு எளிதாக வேலை கிடைப்பதில்லை என்பதில் என்போன்ற மென்பொருளாளர்களுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. டார்வினின் பரிணாமக் கொள்கையான ”திறமையான உயிர்களே தப்பிப்பிழைக்கும் என்பதையும், காலத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் உயிர்கள் மட்டுமே இவ்வுலகில் நீடித்து நிற்கும்” என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

விலையேற்றத்திற்கும், ஏழை பணக்காரன் வித்தியாசம் நாளும் அதிகரித்து வருவதற்கும் பொத்தாம் பொதுவாக மென்பொருளாளர்களை குற்றம் சுமத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒருதலைப்பட்சமாக மென்பொருளாளர்களை சாடுவதை விடுத்து, இத்தகைய வேறுபாட்டிற்கான காரணத்தை கண்டறிவதுதான் புத்திசாலித்தனம். அரசின் கொள்கைகளில் இருக்கும் முட்டாள்தனங்களை களைவதை விடுத்து, எங்களை கைகாட்டுவது பேடித்தனம். கணிப்பொறி அல்லாத பாடங்களை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய அரசு, தன் பொறுப்பை தட்டிக்கழிப்பதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முக்கிய, மூல காரணம். எனவே அரசு தன் குறைகளை களைந்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வது தான் சரியான தீர்வு. 


நன்றி : தமிழ் கபே 

No comments:

Post a Comment